Showing posts with label என்னை பற்றி. Show all posts
Showing posts with label என்னை பற்றி. Show all posts

பால்யகால கிரிக்கெட்


உங்களுக்கு எப்படியென்று தெரியவில்லை,  இது வரையில் நான் பார்த்த எந்த திரைப்படமும் என்னில எந்த மாற்றத்தையும் உருவாக்கியதில்லை இனி மேல் உருவாக்கப்போவதுமில்லை. திரைப்படங்கள் என்னைப் பொறுத்தவரையில் பொழுதுபோக்கிற்கான ஒரு அம்சமே தவிர வேறொன்றுமில்லை.மாறாக பல படங்கள் மனதில் அடி ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் நினைவுக்குப்பைகளை கிளறி விட்டு செல்வதுண்டு. சில காதல் படங்கள் மற்றும் பள்ளி கல்லூரி சம்மந்தப்பட்ட படங்கள் நம் மனதை விட்டு அகன்று விடுவதில்லை, அதற்கு பள்ளி கல்லூரிகளில் நாம் செய்த சேட்டைகளையும், காதலால் நாம் அனுபவித்த இன்ப துன்பங்களையும் பிரதிபலிப்பதும் தான் காரணமாக இருக்கும். இவ்வாறு நம்மை கவரும் சில படங்களை பார்க்கும் போது ஐயோ இந்த வாழ்வை தவற விட்டு விட்டோமே என்று வருத்தப்பட  வைப்பதுண்டு, பல படங்கள் நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டுமொருமுறை செல்ல மாட்டோமா என்று எங்க வைக்கவும் செய்யும். அவ்வாறு மனதின் நினைவுக்குப்பைளை கிளறிவிட்டு மீண்டுமொருமுறை வந்து செல்லாதா  அது போன்றொரு பொற்காலம் என்று தோன்ற வைத்தாது சமீபத்தில் பார்த்த 1983 என்ற மலையாள படம். 


கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 1983 படம். கிரிக்கெட் மீதுள்ள  ஆர்வத்தால் தன படிப்பு, காதல் என  எல்லாவற்றையும் தொலைத்தவன் தன மகன் மூலம் கனவுகளை நனவாக்க முயற்சிப்பது போன்று வடிவமைக்கப்பட்ட படம். சொல்ல வந்த விசயங்களை தெளிவாக ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிவிட்டு கூடவே நம்மையும் கடந்த காலத்திற்குள் நாமறியாமல் நகர்த்திவிட்டு சென்று விடுகிறார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் பாத்திர தேர்வுகள். படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் நீங்கள்  சந்தித்திருக்கலாம்  ஒரு காலத்தில நீங்களும் ஒரு கிரிக்கெட் பைத்தியமாக கிரிக்கெட் பேட்டும் சைக்கிளுமாக சுற்றி திரிந்தவர்களாக இருந்திருந்தால்.

 
நாங்கள் 96 களில் தென்னை மட்டை மற்றும் பிளாஸ்டிக் பந்துகள் வைத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் அல்லது மரத்தில ஸ்டம்ப்ஸ் வரைந்து ஆரம்பித்த கிரிக்கெட்  எங்கள் வீட்டு முற்றங்களை  தாண்டியதில்லை. இன்று நம்மை ஆக்கிரமித்திருக்கும் அதிநவீன பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சமே இருக்காது. விடுமுறை நாட்கள் என்றால்  நாங்களே ராஜாக்கள் நாங்களே மந்திரிகள், 98-களின் துவக்கத்தில் தான் நாங்கள் முற்றைத்தை விட்டு காலியிடங்கள் தேடி புறப்பட ஆரம்பித்தோம். இந்த காலகட்டத்தில் தான் அதுவரை பாடங்களில் அண்டை நாடாக நாங்கள் அறிந்திருந்த பாகிஸ்தான் எங்களுக்கும் எதிரி நாடாக மாற்றியது.   

எங்கு நோக்கினும் பச்சை பசேலென மரங்கள் படர்ந்திருக்கும் எங்கள்  ஊரில் விளையாடுவதற்கு ஏற்ற காலியிடங்களை தேடிப்பிடிப்பதென்பது சாதாரண விஷயமில்லை. ஒரு பிட்ச் வைக்குமளவிற்கு இடம் கிடைத்தாலே அந்த இடத்தில் கூடாரம் அமைத்து விடுவோம். ஆள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் சிறிய இடங்கள் வசப்பட்டாலும்   ஒன்  பிச் கேட்ச், சிக்ஸ் அடித்தால் அவுட் என்று இட வசதிக்கேற்ப விளையாட்டை வடிவமைப்போம். விடுமுறை நாட்களில் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும், நேரமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற சிறிய இடங்களை காலி செய்து வேறு இடம் தேட ஆரம்பித்து விடுவோம்.வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் போர்க்களமும் அதற்க்கு தகுந்தாற்போல இருந்தால் தானே நன்றாக இருக்கும். 


 
இந்த இடம் தான்  என்று இல்லாமல் வயல், வற்றிப்போன குளம், தென்னந்தோப்புகள், கோவில் மைதானங்கள், மயான பூமிகள்  என எல்லா இடங்களிலும் எங்கள் ராஜ்ஜியம் நடக்கும். பெரும்பாலும் நாங்கள் விரும்பி தேர்ந்தெடுப்பது எளிதில் யாரும் சொந்தம் கொண்டாட வராத வகையில் ஏதாவது பிரச்னையால் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டிருக்கும் நிலங்ககளாகத் தான் இருக்கும். யாருடனாவது பெட்டிங் மேட்ச் என்றால் அது எங்கள் ஊர் பள்ளி மைதானத்தில் தான் நடக்கும்,  சில சமயம் யார் எந்த டீம், யார் அடித்த பந்து வருகிறது என்று கூட தெரியாத அளவிற்கு ஒரே நேரத்தில் நான்கைந்து மெட்ச்களும் நடக்கும்.
 
ஊரில் தென்னை மரங்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ஆரம்ப காலத்தில் தென்னை மட்டையில் செதுக்கப்பட்ட பேட்களுக்கு பஞ்சமிருக்காது. பிளாஸ்டிக் பந்துகளிலிருந்து ரப்பர் பந்துகளுக்கு மாறும் போது தான் தென்னைமட்டை பேட்களின் பலவீனம் புரிந்து  மெதுவாக மரப்பலகைகளை தேடியெடுத்து அவற்றை செதுக்கி விளையாட ஆரம்பித்தோம்.  பின்னர்  சிறுக சிறுக பணம் சேர்த்து எங்கள் டீமுக்கென ! ஒரு நல்ல  பேட் வாங்கினோம்.

 
அந்த காலத்தில் நாங்கள் மிகவும் மெனக்கெடவும் கவலை கொள்ளவும் வேண்டியிருந்தது பந்துகளுக்காக தான். மற்ற அணிகளுடன் போட்டியிடும் போதும் எங்களுக்கு பந்தையப்பொருளும் பெரும்பாலும் பந்தாகத தானிருக்கும். பந்து வாங்குவதற்கென்றே வசூல் வேட்டைகள் நடக்கும், பந்துகளின் விலை 7 ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்குள் தான் இருக்குமென்பதால்   ஆள் ஒன்றிக்கு 50 காசு அல்லது ஒரு ரூபாய் தான் அதிகபட்சமாக இருக்கும். (இப்போது வழக்கொழிந்துவிட்ட 50 காசெல்லாம்  அப்போ  எங்களுக்கு பெரிய காசுப்பா)   இதற்க்கு காசு தராதவர்களை காசு தரும் வரையில் டீமில் சேர்க்க கூடாதென்று சட்டமும் இருந்தது. பந்து வாங்கும் போது எங்களின் விருப்பத்தேர்வு "stumper" பந்துகளாகத் தானிருக்கும்.  மற்ற பந்துகளை  இவையே கொஞ்சம் அதிகம் தாக்குபிடிக்க கூடியவை.  இப்படி இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன சொல்வதற்கு.

படாத இடத்தில் பட்டு ஹாஸ்பிட்டல் போய் அங்கு இருந்த லேடி டாக்டடிடம் என்ன சொல்வதென்று புரியாமல் முழித்த நாட்கள், காரணமேயில்லாமல் உருவாகும் சண்டைகள் , கிரிக்கெட்டால் ஊர் தாண்டியும் கிடைத்த நண்பர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் ஊர் சுற்றுவதற்கு எங்களுக்கு இருந்த சுதந்திரம், எங்களை சுமந்து திரிந்த சைக்கிள்கள், அவுட் ஆனாலும் இல்லையென்று சிறுபிள்ளைகள் போல சாதிக்கும் பெருசுகள், செவனேன்னு ஓரமா போகிறவர்கள் மீது பந்தடித்து விட்டு திட்டுகள் வாங்கியது, உடைத்த வீட்டுக்கூரை ஓடுகள் மற்றும் பல்புகள், தோப்புகளில் விளையாடும் பொது யாருமறியாமல் காணாமல் போகும் இளநீர் குலைகள், ஆசை ஆசையாய் வாங்கிய பேட், பரிட்சை நேரங்களில் விளையாட விதிக்கப்படும் தடைகள், அதையும் மீறி விளையாடப்போனதால் வெட்டி சின்னாபின்னமாக்கப்பட்ட பேட்,  கிரிக்கெட் வீரர்களின் விவரங்களை அச்சடித்து வரும் அட்டைகளை சேகரிப்பதற்காகவே வாங்கப்படும் "Big Fun" bubble gums, செய்திதாள்களில் வரும் கிரிக்கெட் வீரர்களின் படத்தை நோட்டுபுத்தகங்களில் ஒட்டியதால் பள்ளியில் ஆசிரியரிடமிருந்து வாங்கி கட்டிக்கொண்டவை, மழைக்காலங்களில் வயலில் முட்டியளவு தண்ணீரில் விளையாடும் கிரிக்கெட், நடுரோட்டில் விளையாடி ஊர்வம்பை விலைக்கு வாங்குவது...... என்று  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கிரிக்கெட் பற்றிய நினைவுகளை.
 

இன்று களமிறங்கி கிரிக்கெட் விளையாடுபவர்களை விட, மொபைலில் விரல் வித்தை காட்டி கிரிக்கெட் விளையாடுபவர்களும், டிவிக்கு முன்னால் அமர்ந்து நொறுக்குத்தீனியையும்  வைத்துக் கொண்டு என்னய்யா இது இவனுக்கு அடிக்கவே தெரியல அங்கே  அடிக்க வேண்டிய பந்தை இங்கே அடிக்கிறான் பாரு, அந்த பந்தை இப்படி திருப்பி விட்டிருக்கலாம், இந்த கேட்சை ரெண்டடி முன்னால்  போய்  நாலடி அந்தரத்தில் பறந்து பிடித்திருக்கலாம் என்று வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் பிதாமகர்களே அதிகமாக உள்ளனர்.
 
கிரிக்கெட்  எங்கள் பால்ய காலத்தை ஆக்கிரமித்திருந்தது, நாங்கள் கிரிக்கெட்டை காதலித்தோம்.
 
 


எண்ண ஓட்டங்கள்



எப்போதேனும்  இயக்கமில்லாமல் 
இருக்கும் பொழுதில் என்னுள் எழும் 
எண்ண ஓட்டங்களை ஒருங்கிணைக்க 
எத்தனிக்கையில் சிதறி ஓடுகின்றன  
திசைக்கொன்றாய் 

எதை துரத்த 
எங்கனம் பிடிக்க என்று 
சிந்திக்கும் சமய சந்தினூடே 
குழப்பத்துடன் தூரத்தில் 
ஒற்றை புள்ளியாய் தேயத் தொடங்கும் 
ஓர் எண்ணத்தை துரத்துகிறேன் 

அவள் 
அவன் 
அது 
காதல் 
காமம் 
காடு 
கடல்
தென்றல் 
திங்கள் 

என என் எண்ணம்  
எல்லாவிடத்தும் ஏறிப் பயணிக்கிறது, 
துரத்திய படி நானும் 
அப்பயணத்தில் அதனூடே 

ஓட்டமும் துரத்தலுமாய் 
துரத்தலும் ஓட்டமுமாய் 
யுகங்களை போல 
உருமாறிய நிமிடங்கள் 
காற்றி கரைந்தோட 

முடிவில்லா மனதில 
முடியா பயணத்தின் 
முடிவில் முடிவாய் 
கரிய கற்களால் கட்டப்பட்ட 
உருவமில்லா ஓர் சுவற்றில் மோதி 
மூச்சுத் திணறி உயிரற்று விழுகின்றன 

ஏமாற்றத்துடன் 
திரும்பி வருகிறேன் 
பழைய இடத்திற்கு 

மீண்டும் 
ஒருங்கிணைக்கிறேன் எண்ணங்களை
சிதறுவதற்கு தயாராகின்றன  அவை..

ஆனாலும் We Miss you DAD..



நான் பிறந்தவுடன் என்னை வாரியெடுத்து 
நீ உச்சி முகர்ந்திருக்க்லாம் 

உன் தோளிலும் மாரிலும் கிடத்தி 
தாலாட்டு பாடி உறங்க வைத்திருக்கலாம் 
நான் தவழ ஆரம்பித்த பொழுதுகளில் 
நீ எல்லையில்லா ஆனந்தமடைந்திருக்கலாம் 
தட்டு தடுமாறி எழ முயற்சித்து 
கீழே விழுந்த நாட்களில் 
அழுத என்னை அரவணைத்துவிட்டு 
நீ அழுதிருக்கலாம் 
நான் நடை பயில 
நீ உருட்டுவண்டியாகியிருக்கலாம் 
நான் நடக்க துவங்கிய பின் 
உன் விரல்கள் பிடித்து 

நான் உன்னையோ 
நீ என்னையோ 

பின் தொடர்ந்திருக்கலாம் 

இவ்வளவும் செய்திருக்கலாம் நீ 
ஆனாலும் 

என்ன செய்ய 
நினைவுகளை தேக்கி வைக்கும் 
பருவம் நான் அடையும் முன்னரே 
நாங்கள் வேண்டாமென அனாதைகளாக்கிவிட்டு 
இறைவனடி சேர்ந்த உன்னை வணக்குவதை விட 

நீயில்லாத நாள் முதல் நீயாகவும் மாறி 
நீயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நினைப்பை 
இன்று வரை எங்களுக்கு வரவிடாமல் 
 தாய் என்ற பந்தத்தில் இருக்கும் எங்கள் தெய்வத்தை 
என்றும் வணங்கினாலும் இன்று ஒரு முறை கூடுதலாக 
உன் சார்பாக வணங்குகிறேன் அப்பா. 

ஆனாலும் We Miss you DAD ...

“வெறும்பய”லாகிய நான்...

ன்பானவர்களுக்கு வணக்கம்,

னது உண்மையான பெயர் “ஜெயந்த்”, பதிவுலகில் “வெறும்பய” என்ற பெயரில் அறியப்படுகிறேன். நான் பிறந்து வளர்ந்தது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் எனும் ஊர். குமரியை பற்றி சொல்ல வேண்டியதில்லை. தமிழர்கள் யாராவது முக்கடல் சங்கமிக்கும் குமரியை பற்றி தெரியாமல் இருந்தால் ஆச்சர்யம். மார்த்தாண்டம் தேனுக்கு (Honey) பிரபலமான ஊர். பூமித்தாய் பச்சை பட்டாடை உடுத்தியது போன்றே எப்பொதும் காட்சியளிக்கும் ஊர், தாகம் தீர்க்க இனி எப்போதும் வற்றாத தாமிரபரணி தவழ்ந்து செல்லும் பொன்னான பூமி அது. அடிக்கடி நினைப்பதுண்டு ஏண்டா ஊரை விட்டு வந்தோம் என்று. சிறுபிராயத்தில் ஊரை விட்டு எங்கும் செல்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன், ஆனால் வாழ்க்கை ஓட்டத்தில் எல்லாம் மாறிப்போய் இன்று எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

டிப்புக்கும் எனக்குமான தூரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆசைப்பட்டது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல Agriculture சம்மந்தமாக படிக்க ஆசைப்பட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக, எனக்கு கொஞமும் விருப்பமில்லாமல் வீட்டார் வற்ப்புறுத்தலுக்காக படித்த Diploma in Mechanical & விரும்பி படித்து பின்னர் விருப்பமில்லாமல் போன Diploma in Catering என நாகர்கோவில் மற்றும் சென்னையிலுமாய் படிப்பு, படித்துக்கொண்டிருக்கும் போதே இளவயது திமிறும், அடங்கிப்போகா குணமும் இருந்ததால் வேலைக்கு போகிறேன் என்று ஆறு மாத காலத்தில் 30 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வேலை பார்த்த அனுபவம், இவறில் பல இடங்களில் அரை நாளுக்கு மேல் தாக்கு பிடித்ததிலை, பாதி நாள் வேலையும் மீதி நாள் நன்பர்களுடன் கூத்தும் கும்மாளமாய் கனவு வாழ்க்கையை நனவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கையில் இப்படியே சுற்றிக்கொண்டிருந்தால் உருப்பட மாட்டாய் என்று அண்ண்ன் தயவால் படிப்பு முடியும் முன்னரே வேலைக்காக சிங்கை பயணம். ஒரு வருடம் கழித்து ஒரு விடுமுறையில் வந்து தேர்வெழுதி பாதியில் நின்ற படிப்பையும் முடிதேன். இப்போது சிங்கையில் தான் அதே திமிறுடன், கொஞம் அடக்கமாக கப்பல் கட்டுமானத்துறையில் இரும்புகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை.

வாசிப்பனுபவம் மிகவும் குறைவு. இந்நாள் வரை என்னை மிகவும் கவர்ந்தவை வரலாற்று நூல்கள் தான். பள்ளிக்காலங்களில் பெரும்பாலும் தூக்கம் தொலைத்தது மோகினிகளும், வாதைகளும், பேய்களும், நம்பூதிரிகளும், தம்புராட்டிகளும், அந்தர்ஜனங்களும், பகவதிகளும், கிருஷ்ணன்களும் சகஜமாய் சுற்றித்திருந்த மலையாள நாவல்கள் தான். அவற்றை ஆரம்பத்தில் தாத்தாவின் உதவியால் படித்துக் கொண்டிருந்தேன், அவரின் மறைவுக்கு பின் மொழி பெயர்ப்பு புத்தகங்களை நாடினேன். பேர்டன் போஸ், எற்றுமானூர் சிவகுமார், கொட்டயம் புஸ்பநாத் போன்ற மலையாள எழுத்தாளர்களின் நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தாலும் நான் அதிகமாக படித்தது கோட்டயம் புஸ்பநாத் அவர்களின் நாவல்களே, முன்பு இவரின் நாவல்கள் கேரளாவின் புகழ் பெற வார பத்திரிக்கையான "மலையாள மனோரமா" வில் தொடராக வந்துள்ளன. கோட்டயம் புஸ்பநாத் அவர்களின் நாவல்களை தமிழில் "சிவன்" என்பவர் மொழி பெயர்த்திருப்பார். (இப்போது இது போன்ற மலையாள நாவல்களை இணயத்தில் தேடிக்கொன்டிருக்கிறேன். (தமிழில் தான்) இது பற்றிய தகவல்கள் எவருக்கேனும் தெரிந்தால் தெரிவியுங்கள்).

ரும்பு மீசை முளைத்த பருவத்தில் கண்களும் கவனமும் தேடிச் சென்றது கவிதை புத்தகங்களை, அவை எம்மாதிரி கவிதை புத்தகங்கள் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை. அப்போதிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கிறேன் காதல் கவிதைகளை. இந்நாளில் கூட நூலகம் சென்றால் என்னையறியாமல் நான் தேடுவது கவிதை புத்தகங்களை தான். கல்லூரிக்காலங்களில் எனக்கு நூலகம் தான் விடுமுறைத்தோழன், பெரும்பாலான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளின் பகல் பொழுதுகள் கழிந்தது நூலகத்தில் தான்.அப்போதெல்லாம் நெடுங்கவிதைகள் என்றால் நெடுந்தூரம் ஓடிவிடுவென். சிறிய கவிதைகளும், ஹைக்கூ"களும் தான் அதிகமாய் அகப்படும். கவிதைகளின் மீதுள்ள காதல் கலையாமலே மாமன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளை தேட ஆரம்பித்தேன். ஊரில் இருந்த நூலகத்தில் புத்தகங்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்காது. அதுமட்டுமல்லாமல் அக்காலத்தில் எனக்கு தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் எந்த அபிப்பிராயமும் இருந்ததில்லை. புத்தகங்கள் பற்றி சுட்டி காட்டுவதற்க்கும் எவருமில்லை.

ல்லூரி வேசம் கலைத்து வாழ்க்கை பாதையை தேட ஆரம்பித்தவுடன் புத்தகத் தேடல்களும், வாசிப்புகளும் ஒவ்வொன்ற்றாய் ஒதுங்க ஆரம்பித்தன. ஆனால் கவிதைகள் மட்டும் ஒதுங்கி விடாமல் என் உள்ளுக்குள் ஒரு ஓரமாய் ஒட்டிக்கொன்டது. சில காலங்கள் புத்தகங்களுடன் எந்த தொடர்புமில்லாமல் இருந்தது. இப்பொது பதிவுலகத்தால மீண்டும் புத்தகங்கள் மீதான காதல் தொற்றிக்கொன்டது. நீண்ட காலமாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முடியாமல் போன பல புத்தகங்கள் இன்று பதிவுலகத்தால் கிடைத்திருக்கிறது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் சரித்திர நாவல்களான "பொன்னியின் செல்வன்", பார்த்திபன் கனவு", "ராஜதிலகம்" இன்னும் பல நூல்களை பற்றி முன்பே கேட்டறிந்திருக்கிறேன், ஆனால் எவ்வளவு முயன்றும் படிக்க இயலாமல் போனது. இன்று இணையத்தின் மற்றும் நண்பர்களின் உதவியால் அத்தனையும் சாத்தியமாயிற்று. இது போன்ற சரித்திர நாவல்களை படிப்பதன் மூலம் பல தமிழ் மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்த கொள்ள முடிகிறது, அது மட்டுமல்லாமல் மேலும் பல நல்ல நூல்களை பதிவுலகத்தின் வாயிலாக அடையாளம் காண முடிகிறது. பல பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஆரோக்கியமான விமர்சனங்கள் புத்தகங்களை தேடிச்செல்ல தூண்டுகின்றன.

ழுத்தனுபவம் என்று சொல்லிக்கொள்ள இன்று வரை எதுவுமில்லை, சாதரணமாக பள்ளிக்கலூரிகளில் நடந்த போட்டிகளில் கூட கலந்து கொண்டதில்லை, ஒரு முறை ஆனந்த விகடன் நடத்திய மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கலந்து தேர்வாகியத்தை தவிர வேறொன்றும் இன்று வரை சாதித்ததில்லை, ஆனால் அந்த நல்ல வாய்ப்பும் கல்லூரியில் நடந்த ஒரு சிறிய பிரச்சனையால் கை நழுவிப்போய் விட்டது, இப்போது இங்கே வலைத்தளத்தில் ஏதாவது கிறுக்குவதோடு சரி, வேறொன்றும் என்னைப்பற்றி சொல்லிக் கொள்வதற்கில்லை.

ய்... ஏய்.. யாருப்பா அங்கே கொலைவெறியோட பாக்குறது, கையில எதுக்கு கல்லெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க.. ஓவரா மொக்க போடாம நிறுத்துடான்னு மரியாதையா சொன்னா நிறுத்திட்டு அடுத்த பதிவு எழுதுறதுக்கு ஏதாவது வழிய பார்ப்பேன், அதில்லாம சின்ன புள்ளத்தனமா கையில கல்லெல்லாம் எடுத்துகிட்டு.. சரி சரி கோவப்படாதீங்க சொல்ல வந்த விசயத்த சொல்லிடுறேன், அதாங்க இன்னையிலிருந்து ஒரு வாரம் தமிழ் மணம் நட்சத்திர பதிவரா என்னை தேர்வு பண்ணியிருக்காங்க அதுக்காக தான் இந்த அறிமுகமெல்லாம், இப்போ நான் கிளம்பலாமில்லையா..

ஓகே மக்கள்ஸ் நாளைக்கு பார்க்கலாம்..

பதிவுலகில் வெறும்பய எப்படிப்பட்டவன்..



தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் கனவு பட்டறை சீமான்கனி மற்றும் ரசிகன் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.. (காத்திருக்கேன்..எப்பவாவது மாட்டுவீங்க)



1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வெறும்பய


2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை, எனது உண்மையான பெயர் ஜெயந்த்..

பதிவு எழுத ஆரம்பிக்கும் போது இந்த பதிவுலகத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.. ஏன், எதற்கு, எப்படி என்று எதுவுமே தெரியாது..(இப்ப தான் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன்) நம்ம மேல் மாடி (அது தாங்க மூளை) எப்பவுமே காலி தான்... யோசிச்சு பார்த்தேன்.. இது தான் நமக்கு பொருத்தமா இருக்குமுன்னு தோணிச்சு.. அதனால தான் இந்த வெறும்பய...

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..


பதிவுலகத்தை பற்றி எனக்கு தெரியாமல் இருந்த காலத்தில் இப்படி ஓன்று இருக்கிறது.. இதில் உன் எண்ணங்கள், கருத்துக்கள், கற்பனை, காதல் என்று எதை பற்றி வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த மேடையை எனக்கு சுட்டிக்காட்டியவர் என் அறைத்தோழர் சரவணன் என்பவர் தான்..( இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்). பதிவுலகில் நான் படித்த முதல் இடுகை வெளியூர்காரனின் .ஐ லவ் யு பை சைந்தவி மற்றும் மீ டூ சைந்தவி...! - சைந்தவி புருஷன். என்ற இடுகையும் என்னை மிகவும் கவர்ந்தது. ( படிச்சு பாருங்க.. உங்களுக்கும் பிடிக்கும்). இது போன்ற நான் படித்து ரசித்த பல இடுகைகள் தான் காரணம்...



4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா.. நானா... அட போங்க சார்.. காமெடி பண்ணிக்கிட்டு..

தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில இணைத்ததால் கொஞ்சம் பேருக்கு தெரியும், பின்னர் தீராத பக்கங்கள் மாதவராஜ் அண்ணன் மற்றும் வலைச்சரத்தில் சகோதரர் தேவா மற்றும் KRP செந்தில் ஆகியோர் புதிய பதிவர் என்று அறிமுகப்படுத்தினார்கள்.. இதனால் இன்னும் கொஞ்சம் பேருக்கு தெரியும்.. யூத்புல் விகடன் பரிந்துரைத்த இன்றைய இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன் சிலரை அழைத்து வந்தது.. மத்தபடி நான் வெறும்பய தான்..

பிரபலம்ன்னா என்ன.. பிரபலம் ஆக என்ன பண்ணனும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு..உங்களுக்கு புண்ணியமா போகும்..


5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில இடங்களில் மட்டும் சொந்த விசயங்கள் இலைமறை காயாக வந்து போனதுண்டு.. காரணம் சொல்லத் தெரியவில்லை..அதோட விளைவு படிச்ச உங்களுக்கு தான் தெரியும்..


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சொன்னா நம்ப மாட்டீங்க.. ரெண்டு BMW கார், OMR ல ஒரு பங்களா வாங்கியிருக்கேன்.. (சும்மா கடுப்புகள கிளப்பிகிட்டு)

பொழுது போக்கிற்காக எழுத ஆரம்பித்தது தான் ஆனால் இப்போது மொத்த பொழுதும் இதில் தான் போய் கொண்டிருக்கிறது..
சம்பாத்தித்து என்றால் நல்ல நட்புகள், சகோதரர்கள், சகோதரிகள் என ஏராளமான நல்ல இதயங்களை தான்...


7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு தான்.. அதுவும் தமிழில் தான் இருக்கு.. இத கட்டி மேய்க்கிறதுக்கே படாத பாடு படவேண்டியிருக்கு..


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கண்டமேனிக்கு கோபம் வந்திருக்கிறது.. சாதி மாதம் என்ற பெயரில் சாடுபவர்கள் மீதும், சண்டையிடுபவர்கள் மீது கோபம் .. குறையவில்லை இன்னும் இருக்கிறது..

பொறாமை.. நான் படிக்கும் அத்தனை பதிவர்கள் மீதும் வந்ததுண்டு..எல்லோருமே அருமையா எழுதுறாங்க..(என்ன பாக்கிறீங்க.. உங்களை பற்றி தான் சொல்லிகிட்டிருக்கேன்)


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பட்டாபட்டி.. said...
வாங்கய்யா வெறும்பயலே.. வந்தாச்சு.. இருந்தாச்சு.. போயாச்சுனு இல்லாம, நீங்களாவது நல்லா எழுதுங்க..
இது தான் எனக்கு வந்த முதல் பின்னூட்டம்.. இதில் மேற்கூறிய வார்த்தைகள் தான் என்னை இன்றும் எழுத வைத்து கொண்டிருக்கிறது..

முதலில் தொடர்பு கொண்டு பாராட்டியவர் ! பனித்துளி சங்கர் ! அவர்கள் தான்.. அடுத்தது அலைவரிசை அஹமது இர்ஷாத், தேவா அண்ணன், நண்பன் ஜில்ல்தண்ணி என எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது...


10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

என்னை பற்றி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்லங்க.. அந்த அளவு நான் இன்னும் வளரவும் இல்ல..




என்னை பற்றி உங்களுக்காக


அறிமுகம் : -

நீங்கள் அறியாத முகம் என்பதால் நான் என்னை அறிமுகம் செய்வது என் அறிமுக கடமை.

நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய ஆள் இல்லனாலும், 13 படங்களுக்கு துணை இயக்குனராகவும், ஒரு படத்தை நானே இயக்கவும் செய்துருகிறேன். ( அந்த படம் வெளி வரவில்லை ) மேலும் மூன்று குறும் படங்களையும் இயக்கிருகிறேன் . நான் கலை உலகிற்கு பழையவன் அனால் கணினி உலகிற்கு புதிவன்.

இப்படி எல்லாம் சொல்லி தான் உங்க கிட்ட என்னை அறிமுகபடுதனும்னா அப்படி ஒரு அறிமுகமே தேவை இல்லேங்க, ஆனாலும் என்னை பற்றி சொல்றது என்னோட கடமைங்க.....


என் பள்ளிக்காலம் : -

மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் போனதில்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன், எப்போவாவது மழை வந்தால் வேற வழி இல்லாம பள்ளிக்கூடம் போவோம்.

என் கல்லூரி காலம் : -

என் வாழ்க்கையை திருப்பி போட்ட காலம் அது ( ஹலோ ரொம்ப ஓவரா கற்பனை பண்ணாதிங்க) கூட படிச்ச பொண்ணுக்கு ரூட் விட்டதால தான் என்னோட உடம்ப மட்டுமில்ல வாழ்க்கையையே புரட்டி போட்டுட்டு போனாங்க. ரொம்ப நல்லவங்க. ( நான் சைட் அடிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு தெரியாதுங்க அந்த பொண்ணுக்கு 2 அண்ணனுங்க, 4 தாய்மாமன் , 2 சித்தப்பா முக்கியமா அவளோட முறைபையன், சும்மா சொல்ல கூடாதுங்க பாரபக்ஷம் பாக்காம அடிச்சானுங்க அதிலயும் அந்த முறைபையன் இருக்கானே அடிக்ககூடாத இடத்திலல்லாம்........ இதுக்கு மேலே என்னாலே சொல்ல முடியலங்க ) அடுத்த நாளே கொடுத்தாங்க அவார்ட் இல்லேங்க டிஸ்மிஸ் லெட்டெர , இப்படி என்னோட காலேஜ் வாழ்க்கையும் .....

அப்புறம் என்னங்க என்னோட எல்லா செர்டிபிகட்ஸ் ( வெள்ளை பேப்பர்ல நானே எழுதிகிட்டது ) எடுத்துகிட்டு தெரு தெருவா வேலை தேடினேன். ஒரு பய புள்ளயும் வேல குடுக்கல. நீண்ட நாள் தேடுதல்ல ஒரு வேலை கிடைச்சுதுங்க ( மேனேஜர் போஸ்ட் எல்லாம் இல்லெங்க )
நல்ல வேலைங்க, இப்போ நல்லா இருக்கேன், இதோ உங்க கழுத்துல கத்தி வச்சிக்கிட்டு ........



இதுதாங்க நான்,, இன்னொரு சந்தோஷமான விஷயம்
நான் இப்போ படிச்சுகிட்டு இருக்கேன் காலேஜ்ல தான் , ஆனால் படிப்பது பாடத்தை மட்டுமல்ல உன்னையும், என்னையும், நம்மை தாங்கும் இந்த உலகத்தையும் ........

ஹலோ ஹலோ கொஞ்சம் இருங்க, நான் இன்னும் முடிக்கல


உங்களுக்கு என்ன தோணினாலும் அதை உங்க பொன்னான எழுத்துகளால் தெருவியுங்கள் ...
உங்கள் பொறுமைக்கு நன்றி ..........