பள்ளிக்கு முன்
பஸ் காத்து நிற்கிறார்கள்
இளம்பெண்கள்..
குடையிலும், கைப்பையிலும்,
செருப்பிலும், சீருடையிலும்
எத்தனை அடக்கியும்
தெறிக்கும் உடல்கள்..
வாக்கிலும், நோக்கிலும்
நிற்பிலும், நடப்பிலும்
எத்தனை மறைத்தும்
வெளித் தெரியும்
துடிக்கும் இதயம்...
நிறுத்தாமல் போகும்
பஸ்ஸுக்கு பின்னால்
ஓடித் திரும்புகின்றன
பதற்றம்
மையிட்ட கண்கள்..
இவர்களில் ஒருத்தி
வேலைக்கு போவாள்
குடும்பம் காப்பாள் ஒருத்தி
வழி தவறுவாள் பிறிதொருத்தி..
ஒருத்தி
கைக்குழந்தையுடன்
பஸ்ஸில் இருந்து
இவ்வழி செல்கையில்
அவள் படித்த பள்ளி என்று
கணவனுக்கு சுட்டுவாள்..
ஒருத்தி
அப்போதும்
அங்கேயே
பஸ்ஸுக்காகக் காத்து நிற்ப்பாள்..
**********
