வாழ்வின் கடைசி நாட்கள் வரை மறவாத அல்லது மறக்க முடியாத இனிமையான பொழுதுகள் என்று கேட்டாலே அதில என் பள்ளி நாட்களையும் தாராளமா, இல்ல இல்ல கண்டிப்பா சேர்க்கலாம். ஒரு கவலையும் இல்லாம, தெரியாம ஓடியாடி எல்லாரையும் ஓட்டி எடுத்து, பல பன் வாங்கி நடந்த காலம் அது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான். அங்க ஆண்டுக்கொரு முறை ஏதாவது விழா நடத்த வேண்டுமே என்று வேண்டாவெறுப்பாக நடத்துவாங்க. அதுக்கு எங்க கிட்ட ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் வசூலிப்பாங்க அந்த காசை வீட்டிலிருந்து வாங்குவதற்கு ரெகமன்டேசன் தேடி அலைஞ்சிருக்கேன். எதுவும் கெடைக்காம வீட்ல இருந்து காசு வாங்க நான் பட்ட பாடு இன்னொரு கட்டுரை தேறும். அந்த காசில் தான் ஆண்டு விழாவிற்கான அலங்கார பெருட்கள், மதிய சாப்பாட்டுக்கு உணவுப்பொருட்கள் எல்லாம் வாங்குவாங்க. ஆண்டுவிழாவிற்கு தலைமை தாங்குவதற்கும் ஊரிலுள்ள பெரியவர்களை தான் அழைப்பார்கள். அவங்க அங்க வந்து நாட்டாமை பண்ணுவாங்க பாருங்க, எங்க வாத்தியார் எல்லாம் அசடு வழிஞ்சே சமாளிப்பாங்க. அந்த ஆண்டுவிழாவின் போது எங்களுக்கு சந்தோசம் தரக்கூடிய ஒரே விஷயம் ஆடை தான், அன்று மட்டும் தான் எங்கள் பள்ளியில் சீருடை இல்லாம மற்ற உடைகள் அணிய அனுமதி. மற்றபடி ஆண்டு விழாக்களில் நடக்கும் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. ஹி ஹி எப்டியும் நாம தான் ஜெய்போம். பாராட்டுவாங்க. நமக்கு தான் மத்தவங்க பாரடுனா ஒரே ஷய்யா இருக்குமே. நாங்க எல்லாம் அப்பவே அப்டி தெரியுமா.
ஆறாம் வகுப்பில் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் என்னை சேர்த்து, இல்ல தள்ளி விட்டாங்க . அந்த வட்டாரத்திலையே அது தான் பழமையான மற்றும் பெரிய பள்ளிக்கூடம். படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் அதிகம். இங்க பழைய பள்ளி போல இல்லாம ஆண்டு விழாக்களை பெரிய அளவில் நடத்துவாங்க. என்னடா விழாவ பத்தி மட்டும் சொல்றானேன்னு நெனைக்கலாம், அது தான் இப்பவும் பசுமையா ஞாபகம் இருக்கு. விழாவில் சிறப்பு விருந்தினராக MLA அல்லது MP தான் கலந்து கொள்வார்கள். விழா ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கும் முன்னாடியே அதுக்கான ஆயுத்த வேலைகள் தொடங்கிடும். பெரும்பாலும் பசங்களே எல்லா வேலைகளையும் செஞ்சிடுவாங்க, ரெண்டு மூணு ஆசிரியர்கள் மேற் பார்வை பாப்பாங்க . இது ஒரு பக்கம், மத்தவங்க ஆண்டுவிழாவில் நடைபெறவிருக்கும் ஆடல், பாடல்ன்னு பலவிதமான கலை நிகழ்சிகளுக்கு ஒத்திகை பார்க்க தொடங்குவாங்க. இப்படியாக விழாவிற்கு முந்தைய ஓரிரு வாரங்கள் பலருக்கு கொண்டாட்டம். காரணம் ஒன்னும் இல்ல, இந்த தினங்களில் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. காலையில் வருகைப்பதிவு குடுத்தாலே போதும். அது தான நமக்கு முக்கியம்.
புது பள்ளி, புது சூழல், புதிய நண்பர்கள் என ரெண்டு வருஷம் நல்ல பிள்ளையாய் எந்த வம்பு தும்புக்கும் போனது இல்ல. எந்த நிகழ்சிகளும், மற்றும் விளையாட்டுகளும் கலந்து கொள்ளவில்லை. அப்பறம் எட்டாம் வகுப்பு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது. நண்பர்கள் கூட்டம் மாறிப்போனது, சீ நாறிப்போனது. எதிரிகள் அதிகமானார்கள் (ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்) இவர்களில் யாரை எங்களுக்கு பிடிக்கவில்லையோ அவனை பழிவாங்குவது ஆண்டுவிழாக்களில் தான். பழிவாங்கறது அப்டினா அடிதடியெல்லாம் இல்லை அந்த பையன் எந்த விளையாட்டில் பங்கெடுக்கிறானோ அந்த விளையாட்டில் கண்டிப்பாக நாங்களும் இருப்போம். வாலி பால் விளையாட்டென்றால் அவன் டீமிலையே தான் நாங்களும் இருப்போம். எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான் முக்கியம் அது நம்ம டீமா இருந்தாலும் சரி. அதே மாதிரி ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு அவனுடனையே ஓடி அவன் காலை தட்டி விடுவது என எல்லா விதமான தொந்தரவுகளும் கொடுப்போம். சுருக்கமா சொன்னா வில்லன் வேலைய சரியா பாத்திருக்கேன்.
பேஸ் பால். கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் நாங்கள் தான் எப்பவும் ஹீரோ, வெற்றியும் எங்களுக்கு தான், காரணம் அந்த பால்வாடிகள் (அதுதாங்க படிக்கிற பசங்க) இந்த மாதிரி உடம்புக்கு சேதாரம் உண்டாகும் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. அதனால் நமக்கு எதிரணி தான் எதிரி.
எதிரிகளை அதோடு விட்டுவிடுவதில்லை. படிக்கிற பசங்க தான் பாட்டு போட்டி, பேச்சு போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொல்வார்களே, அப்படி பாடும் போதும், பேசும் போதும் சத்தமிடுவதும், அவர்கள் பாடும் பாட்டுகளுக்கு எதிர் பாட்டுகள் பாடுவதும் என அங்கேயும் நாங்கள் கைவரிசையை காட்டிவிடுவோம். இது போன்ற குறும்புகளும், சின்ன சின்ன சண்டைகளும் பத்தாம் படிக்கும் வரையில் தான் நடந்தது.
+1 மற்றும் +2 வந்த போது பள்ளியில் நாங்கள் தான் சீனியர். அதனால பெரும்பாலும் அலங்காரம், நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் உணவு சம்மந்தப்பட்டவை போன்ற எல்லா பொறுப்புகளும் எங்களிடம் தான் வரும். அந்த சமயங்களில் எங்களுக்கு எதிரிகள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இல்லைன்னு தான் செல்லனும். அதனால எல்லா வேலைகளையும் மாணவர்கள், மாணவியர் என நாங்களனைவரும் ஒற்றுமையாக தான் செய்வோம். அந்த நேரங்களில் வகுப்புகளுக்கு செல்வதே கிடையாது. ஆசிரியர்களும் இதை கண்டுகொள்ள மாட்டாங்க. காரணம் அனைவரும் ஓரளவு படிக்கும் மாணவர்கள். (நானும் தாம்பா.. நம்புங்க). இப்படி எப்படியோ நல்லபடியா பள்ளிக்காலம் முடிவுக்கு வந்தது.
கல்லூரி நாட்களில் ஆண்டுவிழாக்கள் பள்ளிக்காலங்களை போன்று சுவாரஸ்யமாக இருந்ததில்லை. ஆனால் கல்லூரியில் ஆண்டுவிழா நடக்கப்போகிறது என்ற செய்தி நோட்டீஸ் போர்டில் பார்த்தால் உடனே எங்களுக்குள் ஒரு மீட்டிங் நடக்கும், அந்த நாளில் எங்கு செல்லலாம் என்று. அன்றே முடிவெடுத்து அதற்குண்டான வேலைகளையும் செய்ய துவங்கி விடுவோம். கல்லூரியில் எங்கள் டீமில் மொத்தம் 14 பேர். ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று கட்டண வசூல் தொடங்கி விடுவார்கள். ஒரு நண்பனின் வீட்டில் வைத்து வித விதமாய் சமைத்து எடுத்து வருவார்கள். முதல் தடவை நாங்கள் சென்றது காளிகேசம் என்றொரு இடம். அது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு காட்டு பகுதி. (
கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ளது) அங்கே பொதுவா ஒரு குறிப்பிட்ட இடம் வரை செல்ல அனுமதி உண்டு. நமக்கு தான் ரூல்ஸ் பிடிக்காதே ஆனால் நாங்கள் காட்டிற்கு உள்ளே சென்று விடுவோம். காலையில் 10 அங்கே சென்றால் மாலை 5 மணி வரை மலையாற்றில் குளியலும் கும்மாளமமுமாய் தொடரும், அந்த இடம் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. அப்பறம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அங்க போய்டுவோம். முதல் ரெண்டு வருஷம் ஆண்டு விழா எங்களுக்கு காளிகேசத்திலையே கலகலப்பாய் கடந்து சென்றது. இறுதியாண்டில் நாங்கள் கட்டாயமாய் கலந்து கொள்ள வேண்டிய நிலை. பாட்டு கூத்து கும்மாளம் எதுவுமில்லாமல் எதிரிகள், நண்பர்கள் என அனைவரும் ஓன்று கூடி நண்பர்களாகவே பிரிந்தோம்.
**************************************************************
ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிதறல்கள் எனும் தளத்தில் எழுதும் சகோதரி தீபா அவர்கள் பள்ளி ஆண்டு விழா அனுபவங்கள் என்ற தலைப்பில் என்னை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருந்தார்கள், தாமத்திற்கு ஒரு மன்னிப்பை கூறிவிட்டு, என் வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பை தந்த சகோதரி தீபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
**************************************************************