Showing posts with label கவிதைகளல்லாதவை. Show all posts
Showing posts with label கவிதைகளல்லாதவை. Show all posts

கவிதைகளல்லாதவை 1.2

பாதி நனைந்தும் நனையாமலும் 
தலை சிலிர்த்து நீர் தெறிக்க
பாய்ந்து வந்த  பூனை
வாசலில் ஆளொன்று
அமர்ந்திருக்கக் கண்டு
மிரண்டபடி மீண்டும்
மழை நோக்கி பின்வாங்க

தான் ஏதுமறியாதவர் போலெழுந்து
அவ்விடம் விட்டு நகர்ந்ததும்
பவ்யமாய் நடந்து
வெதுவெதுப்பான ஓரிடத்தை
அப்பூனை தனதாக்கிக்கொள்ள
புன்சிரிப்புடன்
மீண்டும் வாசலில் சென்றமர்ந்து
மழை ரசிக்கத் துவங்குகிறாள்
அச்சிறுமி

நீங்கள் வாசிக்க காத்திருக்கும்
கவிதை
இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது...

கவிதைகளல்லாதவை - 1.1

என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்

நானோ
அது எதுவமறியாமல்
நெருப்புமிழும் பறவைகளை
தேடியலைந்துக் கொண்டிருக்கிறேன். .

                      

கவிதைகளல்லாதவை

கவிதைகளென்று பெயரிடப்பட்ட
வார்த்தைகளின் குவியலொன்று
சிறகுகள் முழைத்து
மலையுச்சியை நோக்கி
பறந்து சென்றதையறிந்து
கவலைப்படும் நீங்கள்

சிறகுகளிலிருந்து உதிர்ந்த
இறகுகள் சேகரித்தபடி
மலையுச்சியை தாண்டி அவள்
சென்று கொண்டிருப்பதை
அறியாமலிருத்தல் நலம்.