Showing posts with label கடைசிக்கவிதை. Show all posts
Showing posts with label கடைசிக்கவிதை. Show all posts

மழை தின்ற கடைசிக்கவிதை



உனக்கான கடைசிக்கவிதையை
எழுதலாமென வந்தமரும் வேளையில் 
அழையா விருந்தாளியாய் 
யன்னல் முட்டி உள்புகுந்து 
தன் வருகையை பதிவு செய்கிறது 
மழை

காலம் சில கடந்தும் 
ஒற்றைப் புள்ளியை மட்டுமே 
உள்வாங்கியிருந்த காகிதத்தில் கவிதைக்காய் 
சேகரித்த வார்த்தைகளைனைத்தையும் 
குவித்து வைத்து 
நம் முதல் சந்திப்பில் 
நீ எனக்கு பரிசளித்த 
பேனாவை துணைக்கமர்த்திச் செல்கிறேன்
மழை ரசிக்க 

நீ நனைந்தது 
உன்னால் நான் நனைந்தது 
மழையிரவு
மழை முத்தம் 
மழை பயணங்கள்  என 
மழையோடான நம்முறவை 
அசைபோட்டபடி நிற்கிறேன் நான் 

வந்த வேலை முடிந்ததென 
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை 
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது 
மழை 

மீண்டும் உனக்கான கவிதையை 
தொடரலாமென வந்தமர்கிறேன் 
நான் 
மழை ரசித்த கணத்தில் 
மெளனமாய் வந்து 
வார்த்தைகளை திருடி 
சாட்சிக்காய் சில துளிகளை 
தூவிச் சென்றிருக்கிறது 
மழை...


ஆகையால் உனக்காகன 
தொடரலாம்...

கடைசியாய் ஒரு கடைசிக்கவிதை...



மெளனம் தவிர்
கண்ணீர் துடை 
மெல்ல எழு
நாட்க்குறிப்பை திற
கூர்முனை பேனா எடு 
கவிதையொன்றை துவங்கு 
பாதியில் நிறுத்து 
பேனாவை 
கைகளுக்கு பின்னால் மறை 
என்னைப்பார் 
நெருங்கி வா 
கண்களில் காமம் காட்டு 
கட்டியணை
என்னை நான் மறக்க செய்
குறிபார் 
பேனாவை 
என் கழுத்தில் சொருகு 
அலற விடாமல் 
இதழ் மீது இதழ் பத்தி 
இறுக்கம் கூட்டி 
திமிறல் தவிர்
மெல்ல அடங்க 
மெதுவாய் ஒதுங்கு 
பேனாவை சரிபார் 
விட்ட கவிதையை 
மீண்டும் தொடர்

எனக்கான அந்த 
கடைசிக்கவிதையின் 
முடிவில் முற்றுப்புள்ளியொன்றை 
மறவாமல் என் 
உதிரம் தொட்டு வை  . 



மற்றுமொரு கடைசிக்கவிதை

காதல் தொலைத்த காலம் ஒன்றில் 
காற்றில் கலந்து அலைந்து திரிந்த போது 
உருவம் தொலைத்த கவிதையொன்றை
நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்


எனைக்கண்டதும்
சிலுவை கண்ட வாதை போல
வழி மாறி திரும்பியது 

சரியாக நினைவிலில்லையெனினும் 
உள்ளுள் உறைந்து போன 
உருவமில்லா உறவைப் பற்றிய 
வார்த்தைத் தொகுப்பு போல 
தோன்றி மறைய 

பின்தொடர்ந்து நடக்கத் துவங்கினேன் 
மேகங்களில் தடம் பதித்து 
பதறியோடிச் சென்று 
மரணத்தின் தூரத்திலிருந்த அக்கவிதையை 

பாதையில்லா பாதையினூடே
தடம் பதித்த பக்கங்களெல்லாம் 
சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தன 
நினைவுத்துண்டுகள் வார்த்தைகளாய் 

ஓடிச்சென்று எட்டிப்பிடித்தேன் 
மீதமிருந்த வார்த்தைகளை 
சிதறவிடாமல் 

ஏறக்குறைய உருக்குலைந்த 
வார்த்தைகளை உருவம் காண,  
சிதறிக் கிடந்த வார்த்தைகளையும் 
பத்திரமாய் எடுத்து பதறாமல் 
தொடுக்கத் துவங்கினேன்

ஒற்றைத்துளியில் 
உருவாகும் உயிர் போல 
உருவம் பெற்று நின்றது 
அக்கவிதை 

அது 

எழுதுகையில் 
கவிதையினி எழுதுவதில்லையென 
முடிவெடுத்த அக்கணத்தில் 
உருவான மற்றொரு 
கடைசிக் கவிதை...

கடைசிக்கவிதைகள் தொடரலாம்..  

கடைசியாய் ஒரு கவிதை..

கடைசியாய் ஒரு கவிதை எழுதலாமென
எனை மறந்த உலகை நான் மறந்து
வார்த்தைகளை வரிசைப்படுத்த துவங்கினேன்

எவ்வளவு முயற்சித்தும்
ஒத்துழைக்க முடியாதென
அடம்பிடித்தன பிடிவாத வார்த்தைகள்

பொறுமை காத்து பொறுக்க முடியாமல்
கோபத்தை கொட்டித் தீர்த்தேன்
வார்த்தைகளிடம்

எவ்வித அசைவுமின்றி அசையாமல்
ஆணியடித்தது போல் மௌனமாய் 
நின்று கொண்டிருந்தன வார்த்தைகளனைத்தும்

ஆத்திரப்பட்டு பயனில்லை என்றறிந்த பின்
சுற்றும் முற்றும் பார்வை வீசி
பார்வையாளர்கள் எவருமில்லையென
உறுதி செய்து என் உறுதி குலைத்தேன்
வார்த்தைத் தலைவனிடம்.

கை கூப்பி
தலை சாய்த்து
வெட்கம் விட்டு வேண்டிக்கொண்டேன்
காதலில்லாமல்
காமம் கலவாமல்
கடைசியாய் ஒரு கவிதை வேண்டுமென

மௌனம் ஆக்கிரமித்த சிறு இடைவேளைக்கு பின்
ஒட்டுமொத்த வார்த்தைகளும் ஒன்றாய் சேர்ந்து
ஒரே குரலில் சொல்லத்துவங்கின

"உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா"  என்று...

மீண்டுமொருமுறை  மௌனம் ஆக்கிரமிக்க
கலங்கிய கண்களுடன்
"வேறு வழியே இல்லையா என்றேன்"

ஏளனமாய் என்னைப்பார்த்து
அதிகாரத் தோரணையில்
"சொன்னதைச் செய்
இல்லையேல் என்னிடம் வரதே" என்று கூறி
நடக்கதுவங்கின வார்த்தைகளனைத்தும்
பாதைகளற்ற ஒரு ஒற்றையடி  பாதையில்

அந்நேரம்
"இனி கவிதையேதும் எழுதுவதில்லையென
முடிவெடுத்திருந்தது என் மனது"

நா
    ன
        றி
            யா
                  ம
                      ல்....


கடைசி சந்திப்பு..


வ்வொரு சந்திப்பின் முடிவிலும்
உள்ளும் புறமும்
ஒன்றுகூடி ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றுகின்றன
இதுவே அவளுடனான
கடைசி சந்திப்பென..

அம்முடிவை கயிறாக்கி
மனதை சுற்றி இறுக்கிக்கட்டி
இருளில் இடம் பெயர்க்கிறேன். 

நித்தம் நிகழும் ஒவ்வொரு செயலும்
அவளையே  நினைவூட்டும் போது
முட்டி மோதியும் 
திமிறித் துடித்தும்
அலறி அழுதும் 
முடிச்சுகள் அவிழாததால்
அமைதியாகிறேன்.

காலம் சில கடந்து 
மீண்டும் மீண்டு வருகிறாள் 
முழு மதியாய்  முகம் மலர்கிறாள்
முடிச்சுகள் மூர்ச்சையிழந்து விடுகின்றன..

நலம் விசாரிக்கிறாள்
முன் போல
அதிகாரம்
அரவணைப்பு
குற்றம்
குறை
கோபம்
கண்ணீர்
வெட்கம்
காதல்
கூடல்
என எதுவுமில்லாமல்
நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்...

மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென...