கவிதைகள் தொலையும் பெருவனம்..

என்னை வழிமறி
பயமுறுத்து
அலறித்துடித்து பதறியோடும் என்னை
தர தரவென இழுத்துப்போ

என் கண்கள் நோக்கு
உன் கண்ணில்
என்னை தொலையச் செய்
கண்களில் காதல் காட்டு
என்னை
உன் கண்ணில் காமம் தேடச்செய்

நீ பேசத்துவங்கு
அந்நேரங்களில்
என்னை ஊமையாக்கு

இலக்கியம் தவிர்த்து
காதல் கதைகள் பேசு
என் மனக்கூட்டில் சுற்றியலையும்
வார்த்தைகள் பிடித்து
எனக்கான கவிதைகள் எழுது

அக்கவிதைகளில்
காமம் ஒழித்து வை

மெல்ல என்னருகில் வா
என்னை கட்டியணைத்து
கட்டவிழ்க்க செய்

என்னை பொம்மையாக்கு
நீயே இயங்கு

களிறின் பெருமூச்சையொத்த
உன் முனகல்க்ளை
கொஞ்சம் கொஞ்சமாய்
முடிவுக்கு கொண்டு வா

உயிர் உருகியோடும்
இறுதியில் அலறித்துடி

இச்சிறு வாழ்வில்
பேரின்பம் தந்தாயென
என் பாதம் துவங்கி முத்தமிடு

மெல்ல முன்னேறு
கொண்டாடு
என்னை விடுவி

சிரி
அழு
கோபம் கொள்
கடைவாய் பற்களை கவனமாய் மறை

கண்களில் காதல் களை
காமம் தொலை

மெல்ல உருமாறு
கடைசியாய் ஒரு
முத்தம் கொடு

முத்தத்தின் ஆழத்தில்
உதிரம் சுவைத்து என்னுயிர் உறிஞ்சு

நாபிக்கமலம் தாண்டி
பெருவனமதில்
பத்திரமாய் புதைத்து வை

சில யுகம் தொலைந்து போ
மீண்டும் வா
என் உயிர் புதைத்த இடம் மறந்து
தேடியலை

பித்து கொள்
ஆகாயமதிர அலறு
அடர்வனமதை கலைத்துப் போடு
உன்னை மற
என்னை மட்டும் நினைவில் கொள்
மீண்டும் வா
என்னை வழிமறி......