குறி தவறும் "குறிகள்"


இனி எந்த பிரயோசனமுமில்லை 
அவர்கள் தருவதற்கோ நீங்கள் 
பெறுவதற்கோ ஒன்றுமில்லை
இனியும் தாமதப்படுத்த வேண்டாம் 

எடுத்துக்கொள்ளுங்கள் ஆளுக்கொரு 
கத்தியை கையில்  
பேனா கத்தி, 
வெட்டுக்கத்தி 
வீச்சருவா, 
வாள் என்று எதுவாக இருந்தாலும் 
ஏன் 
கதிரறுக்கும் அருவாவாக 
இருந்தாலும் பரவாயில்லை, 

அச்சம் தவிருங்கள், 
மனதை தெளிவாக்கி 
குறிதவறிப்பாயும் எந்த "குறி"யாக 
இருந்தாலும் ஒவ்வொன்றாக 
வெட்ட ஆரம்பியுங்கள் 

தந்தை 
மகன் 
கணவன், 
மாமனார் 
வழிப்போக்கன் 
கூடவே பயணிப்பவன், 
ஒரே அலுவலகத்திள் வேலை வார்ப்பவன், 
பக்கத்து இருக்கையில் அமர்ந்து படம் பார்ப்பவன்  
எவனா இருந்தாலும் பாரபட்சம் வேண்டாம் 

யோசிக்காதீர்கள் 
"குறி" தவறுவதாக  இருந்தால் 
குறி தவறாமல் 
வெட்டிக்களைந்து விடுங்கள்
களைகளை களைவது போல..

காதல் கொன்று ராகம் தின்பவள்..
மனம் கலைத்துக்களைந்த மனிதர்களால்
அரங்கம் நிரம்பியிருக்கிறது,
தானே செய்த இசைக்கருவியொன்றை
கையில் எந்தியிருக்கிறாள் அவள்
இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த
இசைக்கருவியில் என்
மூளையிலிருந்து இதயத்திற்கு வரும்
நரம்புகளை மட்டும் தனியாய்
பிரித்தெடுத்து நேர்த்தியாய்
வரிந்து கட்டியிருக்கிறாள்,
நரம்புகளை மீட்ட
விரலிடுக்குகளில்
என் நாவின் நுனியை
இதய வடிவில்
கத்தரித்து கவ்வியிருருக்கிறாள்,
கூச்சலும் குழப்பமுமாய்
குழுமியிருந்த அரங்கம்
உயிர் பிரியும் வேளையில் தோன்றும்
அமைதியை போல்
மௌனம் கொள்கிறது
அவள் இசைக்கருவியை கையிலேந்தி
வாசிக்க துவங்குகிறாள்
ஒரு சில துளிகளுடன்
மௌனமாய் ஆரம்பித்து
அதிகம் நீளாமல் ஆர்ப்பரித்து அடங்கும்
பெருமழையை போல ஒலிக்க ஆரம்பிக்கிறது
இசை என்ற பெயரில்
என் அலறல் சத்தம்,
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி
அமைதியாய் அரங்கின் ஓரமாய்
கிடக்கிறது அவள்
முன்னெச்சரிக்கையாய் பறித்தெடுத்த
என் இதயம்
கூடவே துணையாய்
என் காதலும்.