கடைசி சந்திப்பு..


வ்வொரு சந்திப்பின் முடிவிலும்
உள்ளும் புறமும்
ஒன்றுகூடி ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றுகின்றன
இதுவே அவளுடனான
கடைசி சந்திப்பென..

அம்முடிவை கயிறாக்கி
மனதை சுற்றி இறுக்கிக்கட்டி
இருளில் இடம் பெயர்க்கிறேன். 

நித்தம் நிகழும் ஒவ்வொரு செயலும்
அவளையே  நினைவூட்டும் போது
முட்டி மோதியும் 
திமிறித் துடித்தும்
அலறி அழுதும் 
முடிச்சுகள் அவிழாததால்
அமைதியாகிறேன்.

காலம் சில கடந்து 
மீண்டும் மீண்டு வருகிறாள் 
முழு மதியாய்  முகம் மலர்கிறாள்
முடிச்சுகள் மூர்ச்சையிழந்து விடுகின்றன..

நலம் விசாரிக்கிறாள்
முன் போல
அதிகாரம்
அரவணைப்பு
குற்றம்
குறை
கோபம்
கண்ணீர்
வெட்கம்
காதல்
கூடல்
என எதுவுமில்லாமல்
நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்...

மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென...

கோமாளியும் செல்வா கதைகளும்..

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் இறுக்கமாய் நம்மை அணைத்துப் பிடித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கின்றன. எப்போதும் ஏதோ ஒரு எண்ணத்தில் சுருண்டு கிடக்கும் மனது எங்கேனும் ஒரு நகைச்சுவையையோ அல்லது ரசிக்கத்தகுந்த நிகழ்வையோ கண்டு விட்டால..   கட்டவிழ்ந்த முத்தாய், கை கொட்டி சிரிக்கும் குழந்தையாய் கன்னக்குழிகள் விழ திறந்து கொள்கிறது மனது. செல்வாவின் கோமாளி வலைத்தளமே நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வயிற்று வலியை வரவைப்பதற்காக கோர்ட்டில் கேஸ் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது....

நாதஸ்வரத்தின் சப்தத்தை தாண்டும் தவில் ஓசையைப் போல இன்னுமொரு குட்டி சிரிப்பு அரக்கனை களமிறக்கி இருக்கும் செல்வா அந்த தளத்திற்கு வைத்த பெயர்  
                      

முல்ல நஸ்ருதீன் கதைகளை வாசிக்கும் போது வந்து குதிக்கும் ஒரு உற்சாகத்துக்கு சற்றும் சளைத்தது இல்லை செல்வாவின் கதைகள்...! இதில் நாயகன் தம்பி செல்வா... ! செல்வாவின் அறிவுப்பூர்வமான அபத்தமான சிந்தனைகள் தரையில் உருண்டு சிரிக்கவைப்பதில் இருந்து நான் தப்பவில்லை.. வாசித்தால் நீங்களும் தப்ப மாட்டீர்கள் என்பது உறுதி.....!

வேடிக்கை செய்வதே வாடிக்கையாய் கொண்டிருக்கும் செல்வாவின் கதைகள். நமக்கு உற்சாக சிறகுகளை பூட்டி சந்தோச வானில் சிறகடித்து பறக்கச் செய்யும். நீங்களும் நுகர்ந்து பாருங்கள் சந்தோச வலைப்பூவின் வாசத்தை... நைட்ரஸ் ஆக்சைடாய் உங்கள் நாசிக்குள் புகுந்து குலுங்கி குலுங்கி சிரிக்க்க வைக்கும்...! இதோ  உங்க பார்வைக்கு  இரண்டு கதைகள்..  மாம்பலத்தில் பிறந்த குழந்தை


செல்வாவும் அவரது நண்பரும் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவரது நண்பர்,

" நம்ம ரவிக்கு மாம்பலத்தில குழந்தை பிறந்திருக்கு , பார்க்க வரியா ? என்றார்.

" அப்படியா , கண்டிப்பா வரணும். இரு வீட்டுக்குப் போனதும் வரேன் " என்று செல்வா அவசர அவசரமாகக் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் செல்வாவும் சில பத்திரிக்கை நிருபர்களும் வருவதைப் பார்த்தார் அவரது நண்பர்.

" போலாமா ? " என்றார் செல்வா.

" போலாம் , இவுங்க எல்லாம் யாரு , எதுக்கு வந்திருக்காங்க ? "

" இவுங்களும் ,  நம்ம கூட வராங்க , நம்ம ரவி குழந்தை அதிசயக் குழந்தைல , அத பத்தி எழுத வந்திருக்காங்க!!"

" அதிசயக் குழந்தையா ? என்ன சொல்லுற ? "

" ஆமா எல்லாக் குழந்தையும் வயித்துக்குள்ள இருந்து தானே பிறக்கும், இந்தக் குழந்தை மட்டும் மாம்பழத்துக்குள்ள இருந்து பிறந்திருக்குல, அப்படின்னா அதிசயக் குழந்தைதானே!! "

" மாம்பழத்துக்குள்ள இருந்து பொறந்திச்சா ? என்ன ஒளர்ற ? "

" நீதான சொன்ன , நம்ம ரவிக்கு மாம்பலத்துல குழந்தை பிறந்திருக்குன்னு?! "

" பன்னாட , அது மாம்பழம் இல்ல , மாம்பலம். சென்னைக்குப் பக்கத்துல இருக்குற ஒரு ஊரோட பேரு !! ஏன் மானத்த வாங்குற ? " என்று கடிந்தவர் அங்கு வந்திருந்த பத்திரிக்கை நண்பர்களைச் சமாதனப்படுத்தி திருப்பி  அனுப்பினார். எலி மருந்து 

 இது செல்வாவின் சிறுவயதில் நடந்த சம்பவம்.


ஒரு முறை செல்வாவின் தந்தை அவரிடம் அருகில் உள்ள கடைக்குச் சென்று எலிமருந்து வாங்கிவரும்படிக் கூறினார்.

செல்வாவும் சரி என்று கூறிவிட்டு எலிமருந்து வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் செல்வா கடையில் இருந்து திரும்பி வராததால் அவரது தந்தையும் கடைக்குச் சென்று பார்த்துவரலாம் என்று கிளம்பினர். கடையில் ஒரே கூச்சலாக இருப்பதைக் கண்டார்.

செல்வாவின் தந்தை கடைக்குள் நுழைந்ததும் கடைக்காரர் அவரிடம் சற்று கோபமான குரலில் "உங்க பையன தயவு செஞ்சு கூட்டிட்டுப் போய்டுங்க!" என்றார்.

" ஏன் , என்ன பண்ணினான் ? "

" உங்க பையன் கிட்டவே கேளுங்க !! "

" என்னடா பண்ணின ? "

" அப்பா நீங்கதானே எது வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கனும்னு சொல்லிருக்கீங்க ? அதான் எலி மருந்து வாங்குறதுக்கு முன்னாடி ஒரு எலியப் பிடிச்சு அதுக்கு இந்த மருந்த வச்சு அது சாகுதான்னு பார்த்துட்டுதான் வாங்குவேன் அப்படின்னு கேட்டேன் , இது தப்பா ? "

செல்வாவின் அப்பாவிற்கு இப்பொழுது விசயம் புரிந்தது. முன்பு ஒருமுறை செல்வாவிடம் பேனா ஒன்று வாங்கி வரச்சொல்லி அது எழுதாமல் போகவே , எத வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கணும் என்று சொன்னது நியாபகம் வந்தது.

" எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா , வா போலாம் " என்று செல்வாவை அழைத்துக்கொண்டு சென்றார்.

இது போன்ற ஏராளமான கதைகளை நீங்கள் செல்வா கதைகள் என்ற தளத்தில் படிக்கலாம். இந்த கதைகளை படிக்கும் அந்த தருணங்களிலாவது நீங்கள் உங்களையும் உலகத்தையும் மறந்து சிரித்து செல்லலாம் என்பது உறுதி. செல்வாவின் கதைகளுக்காக நீங்கள் நீண்ட  நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.  நம்பிக்கையுடன் சென்று தினம் ஒரு கதை படிக்கலாம்.  இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க சீக்கிரம் போய் படிங்க செல்வா கதைகளை.

தேங்க்ஸ் டு தேவா அண்ணா

கிறுக்கனின் கிறுக்கல்கள்..2பி.கு 1  - படங்களை பெரிதாக பார்க்க படங்களின் மேல் கிளிக்செய்யவும்
பி.கு 2 - படங்கள்  அனைத்தும் பல்வேறு இணைய தளங்களிலிருந்து கிடைத்தவை.

கிறுக்கனின் கிறுக்கல்கள்..

தனிமையை துணைக்கு அழைத்து நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் தருணங்களில் மனதில் தோன்றும் கவிதையல்லாத கிறுக்கல்களை  தொகுத்து அவற்றை  சில படங்களோடு இணைத்து இங்கே  பகிர்ந்துள்ளேன், இங்கே நான் பகிர்ந்துள்ள சில ஏற்கனவே நீங்கள் இந்த தளத்தில் படித்திருக்கலாம் ஆனால் படங்களின் இணைப்பில்லாமல், இவற்றில் சிலவற்றிக்கு எழுதிவிட்டு படத்தை தேடியிருக்கிறேன், சில கிடைத்த படங்களுக்கு ஏற்ப கிறுக்கியவை. இதோ இந்த கிறுக்கனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக..
பி.கு 1  - படங்களை பெரிதாக பார்க்க படங்களின் மேல் கிளிக்செய்யவும்
பி.கு 2 - படங்கள்  அனைத்தும் பல்வேறு இணைய தளங்களிலிருந்து கிடைத்தவை.. 


இது ஒரு மென்பொருள் காதல்!

சில  வருடங்களுக்கு முன் MP4 பிளேயர் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு  அதில் MP3  பாட்டுக்களை மட்டுமே கேட்டு வந்தேன், காரணம் அதற்கு ஏற்ற வீடியோக்கள் கிடைக்க வில்லைநமக்கு தேவையான அனைத்து வீடியோ க்களும் youtube ல் இருந்தாலும் அதை  தரவிறக்கி  MP4 ல் play ஆகும் ஃபார்மெட்டா  மாற்ற முடியவில்லைமேலும் பெரிய வீடியோக்களிலிருந்து தேவையான பகுதியை வெட்டியெடுக்கும்படியாகவும் எந்த  மென்பொருளும் கிடைக்கவில்லை. அப்போது வரப்பிரசாதமாக கிடைத்த இரண்டு மென்பொருட்களை பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மென்பொருள் மூலம் Youtube, google, Yahoo, Metacafe, Dailymotion & Megavideo போன்ற தளங்களிலுள்ள  வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் டவுன்லோட் செய்யும் போதே அந்த வீடியோக்களை நமக்கு தேவையான ஃபார்மெட்டில் மாற்றிக்கொள்ளலாம்.

முதலில்
Search Video என்ற பகுதியை select செய்து விட்டு search என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான வீடியோ சம்மந்தப்பட்ட சுட்டியை கொடுங்கள்,

Sites என்ற பகுதியில் கிளிக் செய்து உங்களுக்கு எந்த தளத்திலிருந்து வீடியோ வேண்டுமோ அதை தேர்வு செய்யலாம். இல்லையென்றால் All  தேர்வு செய்து Search செய்யலாம்.  மேலும் maxresult என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான எண்ணிக்கை தேர்வு செய்யலாம்.நீங்கள்
search செய்தவுடன் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் வலது புறத்தில் வரும், அதில்  தேவையான வீடியோவை தேர்வு செய்யும் போது இடது பக்கத்தில் preview  வரும்வீடியோவை சரிபார்க்க வேண்டுமானால் Play செய்தும் பார்க்கலாம்.


வீடியோவை டவுன்லோட் செய்யும் முன்னர் மேலே உள்ள
Tube Downloader என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள், அப்போது கீழே  படத்தில் உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்.இந்த பகுதியில் உங்களுக்கு தேவையான Video Format, Video Size, Bit Rate, Video Codac, Frame rate, Audio மற்றும் Output path போன்றவற்றை இங்கு தேர்வு செய்து டவுன்லோடை ஆரம்பிக்கலாம்.

PSP, 3G2, 3GP, WMV. MP4. AVI. MPEG2, போன்ற FORMET களில் வீடியோக்களை கன்வெர்ட் செய்யலாம்.  மேலும் ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் வசதியும் இதில் உள்ளது.இந்த
FLV Converter ல் ஏற்க்கனவே நாம்மிடம் இருக்கும் வீடியோக்களை FLV போர்மெட்ல் மாற்றலாம். அது போன்றே  நம்மிடம் இருக்கும் FLV வீடியோக்களை நமக்கு தேவையான ஃபார்மெட்டில் மாற்றலாம். இதற்கான வசதி Conversion from FLV & Conversion to FLV என்றும் காட்டப்பட்டுள்ளது. வீடியோக்களை நமக்கு தேவையான  பார்மெட்டில்  எளிதில் கன்வெர்ட் செய்ய  இந்த மென்பொருள் மிகவும்  உபயோகமாக இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் 3g2, 3gp, Asf, Avi, DVD (NTSC), DVD (PAL), Flv, ipad, iphone, Mp4, Mpeg-1, Mpeg-2, P3, PSP, WMV, Zune
      போன்ற பார்மெட்களில் வீடியோக்களை  கன்வெர்ட் செய்து கொள்ளலாம்.வீடியோக்களில் ஒவ்வொரு பார்மெட்டிலும் வேறு வேறு codec உள்ளது. உதாரணமாக Avi  ல்  DIVX, DIVX5, H 263, MPEG-4, இது போன்று இன்னும் பல codec உள்ளன.  MP4 , DVD player , PSP , போன்றவற்றில் உபயோகமாவது AVI format ல் உள்ள வீடியோவாக இருந்தாலும் அவை இந்த codec-களை பொறுத்து  வேறுபடுகின்றன.  இது போன்று Audio codec களும் வேறுபடுகின்றன. இதில் கன்வெர்ட்டர்ல் வீடியோக்களை add செய்து, அது என்ன ஃபார்மட் என்றும் அதன் video codec , audio codec, bitrate  போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம் மேலும் வீடியோவிலிருந்து நமக்கு தேவையான பகுதியை மட்டும் தனியாக வெட்டியெடுக்கும் வசதியும் உள்ளது.

இந்த இரண்டு மென்பொருளையும் நீங்கள் KoyoteSoft.com ஒரே தளத்திலிருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம், இவை மட்டுமல்லாமல் இந்த தளத்தில்Audio Converter, HD Converter, FLV Player, Free Easy CD DVD Burner, Videos To DVD மற்றும் பல மென்பொருட்கள் உள்ளன, இதில் பெரும்பாலானவை இலவசமே. சிலவற்றில் சில Advance option களுக்கு மட்டுமே நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆப்சன்கள் பெரும்பாலும் நமக்கு தேவைப்படாது. மொத்தத்தில் இந்த சாஃப்ட்வேர் சாதாரண நபர்களுக்கு பெரும் பயன் அளிக்க கூடியவைகளாகும்.
 


காத(லா)ல் தொல்லை..

மகா ஜனங்களே 
நான் தான் ஜெயந்த். வர வர இந்த வெறும்பய தொல்லை தாங்க முடியல.. போன ஒரு வருச காலமா ஏதொ பிளாக் எழுதுறென்னு சொல்லிட்டு கதை கவிதை அப்ப்டீன்னு எதை எதையொ கிறுக்கிட்டு வந்து தினமும் என் உயிர எடுக்கிறான். இப்படி தான் நேற்று ராத்திரி
நேரம் நள்ளிரவு 3.10 am (விடியக்காலைன்னு கூட வச்சுக்கலாம்)

ஜெயந்த்.. டேய் ஜெயந்த் எந்திரிடா செல்லம்..
ம்ம்..... ம்ம்....
டேய் என்னடா இப்படி தூங்குற....  எழுந்திரிடா உன் கிட்டே கொஞ்சம் பேசணும்,...
ஏன்டா அதுக்குள்ளே விடிஞ்சுபோச்சா.. இப்ப தானே படுத்தேன்... சரி என்ன விஷயம் சீக்கிரம்  சொல்லு தூக்கம் வருதுடா..
"காதல் என்பது ஆழ்மனத்தின் ரகசியங்கள் சொல்லும் ஒரு மென்மையான உணர்வு"

இருந்திட்டு போகட்டும்.. அதுக்கு என்னடா இப்போ..
காதல் வாழ வைக்கும் தெய்வமாகவும் இருக்கிறது., காவு வாங்கும் சாத்தானாவும் இருக்கிறது.

டேய் டேய் என்னாச்சுடா உனக்கு.. Blog எழுத ஆரம்பிச்சதிலிருந்து ஒரு மார்க்கமாதாண்டா இருக்க... இப்போ நான் தான் உன்ன காவு குடுக்க  போறேன்...  சனியனே உயிரை எடுக்காம போய் படுத்து தூங்குடா..
காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியலன்னா என்ன எளவுக்குடா இந்த காதலெல்லாம்.. அதுக்கு பேசாம வீட்டுல பாக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாமே..

ஐயோ.. ஐயோ..  சம்மந்தம் இல்லாம பேசி சாவடிக்கிறானே.. டேய் மரியாதையா இப்ப விசயத்த சொல்லப்போறியா இல்ல இப்பவே நான் ரூம் வெக்கேட் பண்ணவா..

பறக்காதடா சொல்றேன்...  சின்ன வயசிலேருந்தே ஒரு பொண்ணை காதலிப்பாங்களாம். அந்த பொண்ணும் இவர உயிருக்குயிரா காதலிக்குமாம். ஒரு நாள் இவரு வீட்டில இந்த லவ்வ சொல்லுவாராம். அதுக்கு அவங்க வீட்டில சம்மதிக்க மாட்டாங்களாம். புள்ள கிட்டே அம்மாவும் அப்பாவும் "என்றா மவனே இப்படி  பண்ணிபுட்டேன்னு" கண்ணீர் விட்டு கதறி அழுவாங்கலாம். உடனே இவரோட கல்மனசு பழைய லைபாய் சோப்பு போல கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு போய் அந்த பொண்ணுக்கு டாட்டா காட்டிட்டு அப்பா அம்மா யாரை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களோ அவங்களை கல்யாணம் பண்ணிப்பாராம்.
நீ இப்பொ யாரை பற்றி சொல்ல வர..  அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்.. அவனை தூக்கி போட்டு மிதிக்கனுமா.. இல்ல அந்த பொண்ணுக்கு நான் வாழ்க்கை குடுக்கணுமா...  சத்தியமா மாப்பிள இந்த ரெண்டு விசயமும் என்னால பண்ண முடியாதுடா..  எவனோ ஒருத்தன் தப்பு பண்ணினதுக்கு எதுக்குடா என் தாலியருக்குற..
அடிங்க.. உன்ன கல்யாணம் பண்றதுக்கு அந்த பொண்ணு பாளுங்கிணத்தில  விழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்.. நான் கேட்க வரது என்னன்னா, இந்த மாதிரி ஒதுங்குறவன்  எதுக்கு உருகி உருகி  காதலிக்கணும், எதுக்கு அந்த பொண்ணு மனசில வீணா ஆசைய உண்டாக்கணும்
அது அவனவன் விருப்பம்.. அவன் திறமைக்கு அவன் விளையாடுறான். உனக்கு ஏண்டா இவ்வளவு காண்டு..
என்னோட கோவம் அதில்ல.. அம்மா அப்பா மேல அவ்வளவு பாசமும் அக்கறையும் உள்ளவன் எதுக்கு லவ் பண்ணனும்.  அப்பவே அதை யோசிச்சிருக்கலாமே..

எல்லா அம்மா அப்பாக்களும் புள்ளைங்க  மேல பாசமா தாண்டா இருப்பாங்க.. அதே மாதிரி தான் புள்ளைங்களும்...   ஒவ்வொரு அம்மா அப்பாவுக்கும் அவங்க புள்ளைங்கள ஆயிரம் கனவு இருக்கும்.. என் புள்ள இப்படி இருக்கணும்.. இந்த வேலை பாக்கணும்.. இந்த மாதிரி இடத்திலிருந்து தான் பொண்ணு எடுக்கணும் அப்படின்னு ஆயிரம் ஆசைகளை கோட்டையா கட்டி வச்சிருப்பாங்க...  இப்படி திடீர்ன்னு ஒரு நாள் நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் அப்படீன்னு சொல்லும் போது பெத்தவங்களோட அத்தன கனவு கோட்டையும் உடஞ்சிரும்.. அதை அவங்களால தாங்கிக்கவும் முடியிறதில்ல.. அந்த காலகட்டத்தில காட்டுற கொஞ்சம் பிடிவாதங்கள் மற்றும் அடக்குமுறைகள் தான் பெரும்பாலும்   பிள்ளைகளுக்கும்  பெற்றவங்களுக்கும்  இடையில பெரிய பிரச்சனையாவே  மாறுது..  இதே விஷயத்தை பெற்றவங்க கொஞ்சம் பொறுமையா யோசிச்சு சாமாதனமா பேசி புரிய வச்சா எந்த பிரச்சனையும் வராது... 
அப்போ பெத்தவங்க பக்கம் தான் எல்லா தப்பும் இருக்கா... அவங்க தெளிவா இருந்தா எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்றியா...
பெத்தவங்களையும் இந்த விசயத்தில  குற்றம் சொல்ல முடியாது.. ஒரு பையனோட எல்லா நல்லது கெட்டதிலையும் பெத்தவங்களுக்கு  ஒரு பெரும்பங்கு இருக்கு..  பையனும் சில விசயங்களை யோசிக்கணும்.. பெத்து இத்தன வருஷம் வளத்து, படிக்க வச்சு ஆளாக்கி விட்டவங்களை நேற்று வந்த எதோ ஒரு பொண்ணுக்காக உதறிட்டு போறாங்க... வீட்டில சண்டை போடுறாங்க.. பெத்தவங்களை மன ரீதியா ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க..  25 வருஷம் கூடவே இருந்து நமக்கு நல்லது எது , கெட்டது எது, நமக்கு எது பிடிக்கும் எதுபிடிக்காதுன்னு பார்த்து பார்த்து செஞ்சவங்களோட  மனச புரிஞ்சிக்காத ஒருத்தன்  எப்படிடா வேற ஒரு வீட்டில வேற சூழ்நிலையில வளந்த ஒரு பொண்ணை புரிஞ்சுக்க முடியும் அதுவும் கொஞ்சம் நாளில.. என்ன கேட்டா இது கண்டிப்பா சாத்தியமில்லாத விஷயம்..
அப்படீன்னா காதலிச்சு வீட்டு சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழுறவங்க எல்லாரும்.....  எல்லாம் நடிப்புன்னு சொல்றியா..
கண்டிப்பா அப்படி சொல்லமாட்டேன்...  நல்லாயிருக்காங்க.. சந்தோசமா இருக்காங்க... அப்படி இருக்கிறவங்க எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சத விட கல்யாணத்துக்கப்புறம்  பல மடங்கு  அவங்க காதல் கூடியிருக்கும்.. வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிஷத்தோட சுவாரஸ்யத்தையும் ரசிச்சு வாழுறவங்க... புரிதல் அதிகமா இருக்கும்.. ஒரு சின்ன சண்டை அல்லது மனஸ்தாபம் வந்தாலும் சோகமா போய் ஒரு மூலையில உக்காந்து அழாம அதுக்கு என்ன காரணம் அப்படீன்னு நல்லா யோசிச்சு அதுக்கு என்ன தீர்வுன்னு  தேடி உடனே சமாதானமாகி அடுத்த தடவை அந்த சண்டை வராம பாத்துக்கிரவங்க, புருசனுக்கு என்ன பிடிக்கும் இல்ல பொண்டாட்டிக்கு என்ன பிடிக்குமின்னு ஒவ்வொன்னா தேடி பார்த்து  பார்த்து செஞ்சு காதலுக்கே  காதலிக்க கத்து குடுத்து அவங்க எல்லாரும் நல்லா சந்தோசமா தான் இருக்காங்க...

ஓகே.. நீ சொல்றதெல்லாம் சரி தான்... பிள்ளைங்க மேலயும் தப்பிருக்கு பெத்தவங்க மேலயும் தப்பிருக்கு.. ஆனா பிள்ளைங்க பெத்தவங்களுக்காக எல்லாத்தையும் விட்டு குடுக்கனும்ன்றியா.....
நீ ஏண்டா அப்படி நினைக்கிற பிள்ளைங்களுக்காக தாண்டா பெத்தவங்க.. பெத்தவங்களுக்காக தான் பிள்ளைங்க... அவங்களுக்கு நாம தான் உலகம்.. ஆனா நம்ம உலகத்தில அவங்க முக்கியமானவங்க.. ஏன்னா அவங்களுக்கப்புரம் உன்னையே நம்பி வரப்போற பொண்ணு ஒருத்தி இருக்கா.. அவளுக்கு நீ மட்டும் தான் உலகம். அதே சமயம்  பெற்று வளர்த்து  உன்னையே உலகமின்னு நினச்சிட்டிருக்கிற உன்னோட அம்மா அப்பாவ கண்கலங்காம பாத்துக்கிறதும் உன்னோட பொறுப்பு தான்.. 

நீ சொல்றதை பார்த்தா  பசங்க பெத்தவங்களை தாண்டி எதையும் யோசிக்க கூடாது .. ஆசைப்படக்கூடாதுன்ற மாதிரியில்ல இருக்கு...
ஆசைகளும் கனவுகளும் யார் வேணுமினாலும் படலாம் அது அவரவர் சுதந்திரம், ஆனா நம்ம ஆசைகளையும் கனவுகளையும் யார் மேலயும் வலுக்கட்டாயமா  திணிக்க கூடாது அவ்வளவு தான். உலகத்தில பேசி தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்ல.. ஆனா அதையும் எப்போ எப்படி பண்ணனுமின்னு ஒரு வரைமுறை இருக்கு, இப்போ  நீ சொன்னியே ஒரு கதை யாரோ லவ் பண்ணினாங்க அப்படீன்னு, அவன் வீட்டில சொல்லி அவங்க ஒத்துக்கல அப்படின்னு அது கூட நேரம் காலம் தெரியாம வீட்டில சொன்னது தான் காரணமா இருக்கும். இதே விசயத்த அவன் யோசிச்சு தகுந்த சமயம் பார்த்து அவன் கிட்டே யார் அதிகமா பாசம் வச்சிருக்காங்களோ அவங்க கிட்டே பக்குவமா சொல்லி அவங்க மூலமா அப்பாவுக்கோ இல்ல அம்மாவுக்கோ  சொல்லும் போது அவங்க கொஞ்சமா யோசிக்க வாய்ப்புண்டு. அதுக்கப்புறம் நீயும் அவங்களுக்கு நம்பிக்கை வறது மாதிரி நடந்துக்கணும்.  அனா  நீ முதல்ல இந்த விசயத்த சொல்ற ஆளு வீட்டில கொஞ்சம் மதிப்புள்ளவங்களா இருக்கணும்.. இல்லன்னா அம்புட்டு தான்.

ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே.. காதலிக்கனுமின்னா இவ்வளவு விஷயம் யோசிக்கணுமா... நமக்கு காதலும் வேணாம் கல்யாணமும் வேணாம் பேசாம சாமியாரா போயிடலாம்..
உனக்கு அதுதாண்டா சரி.. உன்ன எந்த பொண்ணும் லவ் பண்ண போறதுமில்ல, எவனும் உனக்கு பொண்ணு தரப்போறதுமில்ல... தயவு செஞ்சு என்ன கொஞ்ச நேரமாவது தூங்க விடுறியா..
சரி சரி.. தூங்கித்தொலை.. மீதிய நாளைக்கு பேசிக்கலாம்
இன்னாது நாளைக்குமா.. என்னால முடியாதுடா சாமி.. ஒழுங்கு மரியாதையா அட்வான்சை திருப்பி குடு.. நான் இன்னைக்கே இப்பவே ரூம் காலி பண்றேன்..
டேய் படுத்து தூங்குடா அதெல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்... Good Night  சாரிபா   Good Morning
  
மகா ஜனங்களே
இப்படிதாங்க இந்த வெறும்பய தினமும் நடுராத்திரியில எழுப்பி என் உயிர எடுக்கிறான் நீங்களாச்சும் என்ன எதுன்னு கேளுங்க.. இப்போ நன் தூங்க போறென்..
இனி நாளைக்கு பார்க்கலாம்..

“வெறும்பய”லாகிய நான்...

ன்பானவர்களுக்கு வணக்கம்,

னது உண்மையான பெயர் “ஜெயந்த்”, பதிவுலகில் “வெறும்பய” என்ற பெயரில் அறியப்படுகிறேன். நான் பிறந்து வளர்ந்தது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் எனும் ஊர். குமரியை பற்றி சொல்ல வேண்டியதில்லை. தமிழர்கள் யாராவது முக்கடல் சங்கமிக்கும் குமரியை பற்றி தெரியாமல் இருந்தால் ஆச்சர்யம். மார்த்தாண்டம் தேனுக்கு (Honey) பிரபலமான ஊர். பூமித்தாய் பச்சை பட்டாடை உடுத்தியது போன்றே எப்பொதும் காட்சியளிக்கும் ஊர், தாகம் தீர்க்க இனி எப்போதும் வற்றாத தாமிரபரணி தவழ்ந்து செல்லும் பொன்னான பூமி அது. அடிக்கடி நினைப்பதுண்டு ஏண்டா ஊரை விட்டு வந்தோம் என்று. சிறுபிராயத்தில் ஊரை விட்டு எங்கும் செல்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன், ஆனால் வாழ்க்கை ஓட்டத்தில் எல்லாம் மாறிப்போய் இன்று எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

டிப்புக்கும் எனக்குமான தூரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆசைப்பட்டது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல Agriculture சம்மந்தமாக படிக்க ஆசைப்பட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக, எனக்கு கொஞமும் விருப்பமில்லாமல் வீட்டார் வற்ப்புறுத்தலுக்காக படித்த Diploma in Mechanical & விரும்பி படித்து பின்னர் விருப்பமில்லாமல் போன Diploma in Catering என நாகர்கோவில் மற்றும் சென்னையிலுமாய் படிப்பு, படித்துக்கொண்டிருக்கும் போதே இளவயது திமிறும், அடங்கிப்போகா குணமும் இருந்ததால் வேலைக்கு போகிறேன் என்று ஆறு மாத காலத்தில் 30 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வேலை பார்த்த அனுபவம், இவறில் பல இடங்களில் அரை நாளுக்கு மேல் தாக்கு பிடித்ததிலை, பாதி நாள் வேலையும் மீதி நாள் நன்பர்களுடன் கூத்தும் கும்மாளமாய் கனவு வாழ்க்கையை நனவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கையில் இப்படியே சுற்றிக்கொண்டிருந்தால் உருப்பட மாட்டாய் என்று அண்ண்ன் தயவால் படிப்பு முடியும் முன்னரே வேலைக்காக சிங்கை பயணம். ஒரு வருடம் கழித்து ஒரு விடுமுறையில் வந்து தேர்வெழுதி பாதியில் நின்ற படிப்பையும் முடிதேன். இப்போது சிங்கையில் தான் அதே திமிறுடன், கொஞம் அடக்கமாக கப்பல் கட்டுமானத்துறையில் இரும்புகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை.

வாசிப்பனுபவம் மிகவும் குறைவு. இந்நாள் வரை என்னை மிகவும் கவர்ந்தவை வரலாற்று நூல்கள் தான். பள்ளிக்காலங்களில் பெரும்பாலும் தூக்கம் தொலைத்தது மோகினிகளும், வாதைகளும், பேய்களும், நம்பூதிரிகளும், தம்புராட்டிகளும், அந்தர்ஜனங்களும், பகவதிகளும், கிருஷ்ணன்களும் சகஜமாய் சுற்றித்திருந்த மலையாள நாவல்கள் தான். அவற்றை ஆரம்பத்தில் தாத்தாவின் உதவியால் படித்துக் கொண்டிருந்தேன், அவரின் மறைவுக்கு பின் மொழி பெயர்ப்பு புத்தகங்களை நாடினேன். பேர்டன் போஸ், எற்றுமானூர் சிவகுமார், கொட்டயம் புஸ்பநாத் போன்ற மலையாள எழுத்தாளர்களின் நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தாலும் நான் அதிகமாக படித்தது கோட்டயம் புஸ்பநாத் அவர்களின் நாவல்களே, முன்பு இவரின் நாவல்கள் கேரளாவின் புகழ் பெற வார பத்திரிக்கையான "மலையாள மனோரமா" வில் தொடராக வந்துள்ளன. கோட்டயம் புஸ்பநாத் அவர்களின் நாவல்களை தமிழில் "சிவன்" என்பவர் மொழி பெயர்த்திருப்பார். (இப்போது இது போன்ற மலையாள நாவல்களை இணயத்தில் தேடிக்கொன்டிருக்கிறேன். (தமிழில் தான்) இது பற்றிய தகவல்கள் எவருக்கேனும் தெரிந்தால் தெரிவியுங்கள்).

ரும்பு மீசை முளைத்த பருவத்தில் கண்களும் கவனமும் தேடிச் சென்றது கவிதை புத்தகங்களை, அவை எம்மாதிரி கவிதை புத்தகங்கள் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை. அப்போதிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கிறேன் காதல் கவிதைகளை. இந்நாளில் கூட நூலகம் சென்றால் என்னையறியாமல் நான் தேடுவது கவிதை புத்தகங்களை தான். கல்லூரிக்காலங்களில் எனக்கு நூலகம் தான் விடுமுறைத்தோழன், பெரும்பாலான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளின் பகல் பொழுதுகள் கழிந்தது நூலகத்தில் தான்.அப்போதெல்லாம் நெடுங்கவிதைகள் என்றால் நெடுந்தூரம் ஓடிவிடுவென். சிறிய கவிதைகளும், ஹைக்கூ"களும் தான் அதிகமாய் அகப்படும். கவிதைகளின் மீதுள்ள காதல் கலையாமலே மாமன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளை தேட ஆரம்பித்தேன். ஊரில் இருந்த நூலகத்தில் புத்தகங்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்காது. அதுமட்டுமல்லாமல் அக்காலத்தில் எனக்கு தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் எந்த அபிப்பிராயமும் இருந்ததில்லை. புத்தகங்கள் பற்றி சுட்டி காட்டுவதற்க்கும் எவருமில்லை.

ல்லூரி வேசம் கலைத்து வாழ்க்கை பாதையை தேட ஆரம்பித்தவுடன் புத்தகத் தேடல்களும், வாசிப்புகளும் ஒவ்வொன்ற்றாய் ஒதுங்க ஆரம்பித்தன. ஆனால் கவிதைகள் மட்டும் ஒதுங்கி விடாமல் என் உள்ளுக்குள் ஒரு ஓரமாய் ஒட்டிக்கொன்டது. சில காலங்கள் புத்தகங்களுடன் எந்த தொடர்புமில்லாமல் இருந்தது. இப்பொது பதிவுலகத்தால மீண்டும் புத்தகங்கள் மீதான காதல் தொற்றிக்கொன்டது. நீண்ட காலமாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முடியாமல் போன பல புத்தகங்கள் இன்று பதிவுலகத்தால் கிடைத்திருக்கிறது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் சரித்திர நாவல்களான "பொன்னியின் செல்வன்", பார்த்திபன் கனவு", "ராஜதிலகம்" இன்னும் பல நூல்களை பற்றி முன்பே கேட்டறிந்திருக்கிறேன், ஆனால் எவ்வளவு முயன்றும் படிக்க இயலாமல் போனது. இன்று இணையத்தின் மற்றும் நண்பர்களின் உதவியால் அத்தனையும் சாத்தியமாயிற்று. இது போன்ற சரித்திர நாவல்களை படிப்பதன் மூலம் பல தமிழ் மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்த கொள்ள முடிகிறது, அது மட்டுமல்லாமல் மேலும் பல நல்ல நூல்களை பதிவுலகத்தின் வாயிலாக அடையாளம் காண முடிகிறது. பல பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஆரோக்கியமான விமர்சனங்கள் புத்தகங்களை தேடிச்செல்ல தூண்டுகின்றன.

ழுத்தனுபவம் என்று சொல்லிக்கொள்ள இன்று வரை எதுவுமில்லை, சாதரணமாக பள்ளிக்கலூரிகளில் நடந்த போட்டிகளில் கூட கலந்து கொண்டதில்லை, ஒரு முறை ஆனந்த விகடன் நடத்திய மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கலந்து தேர்வாகியத்தை தவிர வேறொன்றும் இன்று வரை சாதித்ததில்லை, ஆனால் அந்த நல்ல வாய்ப்பும் கல்லூரியில் நடந்த ஒரு சிறிய பிரச்சனையால் கை நழுவிப்போய் விட்டது, இப்போது இங்கே வலைத்தளத்தில் ஏதாவது கிறுக்குவதோடு சரி, வேறொன்றும் என்னைப்பற்றி சொல்லிக் கொள்வதற்கில்லை.

ய்... ஏய்.. யாருப்பா அங்கே கொலைவெறியோட பாக்குறது, கையில எதுக்கு கல்லெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க.. ஓவரா மொக்க போடாம நிறுத்துடான்னு மரியாதையா சொன்னா நிறுத்திட்டு அடுத்த பதிவு எழுதுறதுக்கு ஏதாவது வழிய பார்ப்பேன், அதில்லாம சின்ன புள்ளத்தனமா கையில கல்லெல்லாம் எடுத்துகிட்டு.. சரி சரி கோவப்படாதீங்க சொல்ல வந்த விசயத்த சொல்லிடுறேன், அதாங்க இன்னையிலிருந்து ஒரு வாரம் தமிழ் மணம் நட்சத்திர பதிவரா என்னை தேர்வு பண்ணியிருக்காங்க அதுக்காக தான் இந்த அறிமுகமெல்லாம், இப்போ நான் கிளம்பலாமில்லையா..

ஓகே மக்கள்ஸ் நாளைக்கு பார்க்கலாம்..

என் செல்லச் சிறுக்கி..


ன்ன கேட்டாலும் "தெரியாது" என்கிறாயே அப்போது உனக்கு என்ன தான் தெரியும் என்று கேட்கிறேன் கோவமாக.. பொறுமையாக நெற்றியில் ஊஞ்சலாடிய ஒற்றை முடியை காதில் சிறை வைத்து, புருவம் சுருக்கி, கண்கள் நெருடி, என்னருகில வந்து காதோரமாய்

எனக்கு
உன்னை தெரியும்,
உன் காதல் தெரியும்,
உன் குறும்புகள் தெரியும்,
உன் வரைமுறைகள் தெரியும்,
உன் அத்து மீறல்கள் தெரியும்,
உன் எச்சிலின் சுவை தெரியும்,
உன் நகக்கீறல்களின் ஆழம் தெரியும்,
உன் ஆளுமை தெரியும்,
உன்னை ஆளவும் தெரியும்,
உன்னை கொஞ்ச வைக்க தெரியும்,
உன்னை கெஞ்ச வைக்க தெரியும்,
உன்னை அழ வைக்கவும் தெரியும்,
என்னை உன்னிடம் இழக்கத் தெரியும்,
என்னிடம் உன்னை இழுக்கத் தெரியும்
எனக்கு எல்லாம் நீயென இருக்கவும் தெரியும்,

இவ்வளவு தெரிந்திருக்கிறேன் போதாதாடா "என் லூசு புருசா" என்று சொல்லி கன்னத்தையும் ஈரமாக்கி செல்கிறாள். என்னுதடுகள் கன்னத்திடம் சண்டையிட தயாராகின்றன..  எப்போது வந்தாலும் என்னுள் ஏதேனும் வன்முறையை தூண்டிவிட்டு தான் செல்கிறாள் என் செல்லச் சிறுக்கி..