உனக்கானவை சில


நீ உபயோகித்து 
தூக்கியெறிந்த பொருட்களெல்லாம் 
எனக்கு பொக்கிஷமே, 
உன் மீதான என் 
காதலும்..

சிறு தூறலாய் விழுந்தாலும் 
சீராக பெய்கிறது மழை
அனுதினம் 
என் உயிரில் விழுந்தோழுகும் 
உன் நினைவுச்சாரல் போல ...

நிரம்பி வழிகிறது 
உனக்கான கவிதைகளால் 
எனது நாட்க்குறிப்பும் 
உன்னைப்பற்றிய நினைவுகளால் 
என் இதயமும்.. 


ரத்தவாடை..
கண்மூடினால் 
அவன் சின்னாபின்னமாய் 
சிதறியோடிய  காட்சிகள் விரிவதைக்கண்டு 
பயத்தில் ஓடி ஒளிகிறது தூக்கம்,
 
எங்கு எதை நோக்கினும் 
சிவப்பு வர்ணமாகவே  தெரிகிறது 
என் கண்ணுக்கு, 

அவ்விடம் தாண்டிச்செல்லும் 
போதெல்லாம் அவனின்  சிரித்த 
முகமே முன் நிற்கிறது 

டெட்டாலுக்கும்  பணியாமல் 
பரவி நிற்கிறது தேங்கி நின்ற
ரத்தத்தின் வீச்சம்,

"எப்படி இருக்கார், 
எப்போது கண்முளிப்பார் 
ஏதாவது பேசினாரா 
எப்போ பேசுவார்
எனக்கு அவரை பாக்கணும்" 
என்றவர் மனைவி அடக்கமுடியா 
அழுகைச்  சத்ததுடன் எங்களிடம் 
கேட்க்கும் போதெல்லாம் 

எதைப்பற்றியும் 
யோசிக்காமல் யோசிக்கிறேன் 
பத்து நொடி முன்பு அந்த விபத்து நடந்து 
அதில் சிக்கி 
நானே இறந்து போயிருக்கலாம் என்று . ஓடியாங்க.. ஓடியாங்க.. காசு ஓசியில தராங்க..
"HUNT FOR HINT".  என்னங்க பெயரே வித்தியாசமா இருக்கா.. இருக்கனுமில்ல..இருந்தா தானே சுவாரசியம். இரு ஒரு விளையாட்டு. விளையாட்டு அப்படின்னு சொன்னவுடனே கிரிக்கெட், ஹாக்கி, கபடி போல உள்ள விளையாட்டுன்னு நினச்ச்சுக்கிட்டு கிரவுண்டுக்கு ஓடிப்போயிடாதீங்க. இது ஒரு ஆன்லைன் கேம். இந்த விளையாட்டுக்கு நீங்க ரொம்ப மெனக்கெட வேண்டாம், உங்க புத்திசாலித்தனத்தில் கொஞ்சத்தை மட்டும் இங்கே செலவிடுங்க போதும். இந்த விளையாட்டு உங்களுக்கு கண்டிப்பா  ஈசியா தான் இருக்கும், ஏன்னா நீங்க தான் புத்திசாலியாச்சே.  

 இது டெரர் கும்மி குரூப் நண்பர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கேம். இந்த விளையாட்டை புல்லா முடிச்சிட்டீங்கன்னு வச்சுக்குங்க, நாங்க உங்களை  சும்மா போக விட மாட்டோம்... பயப்படாதீங்க முதல்ல முடிக்கிற மகாபுத்திசாலிங்களுக்கு பரிசு இருக்குன்னு செல்ல வந்தேன். அட நிசமா தாங்க மத்த விவரங்கள பாருங்க.. 
என்ன புதிர் போட்டி இது?

1.இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்
4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7.  அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.

பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.


ஹெலோ.. ஹெலோ... படிச்சது போது சீக்கிரம் போய் விளையாடி பரிசுகளை தட்டி செலற வலிய பாருங்க... என்னது எப்படி போகனுமா... அட சும்மா டைம் வேஸ்ட் பண்ணாம கீழே இருக்கிற படத்த சீக்கிரம் கிளிக் பண்ணுங்க.. 
பின்குறிப்பு :- 
எனக்கும் விளையாட ஆசைதான்.. ஆனா என்ன பண்றது நானும் இந்த டெரர் கும்மி குரூப்ல இருக்கிரதினால.. உனக்கு விளையாட அனுமதி கிடையாதுன்னு  கழுத்த புடிச்சு வெளிய தள்ளிட்டாங்க.... அதனால  புத்திசாலிகளே இங்கே வாழ்த்துக்கள் சொல்லி நேரத்த வீணடிக்காம சீக்கிரம் போய் விளையாடுங்க ... 

மற்றுமொரு கடைசிக்கவிதை

காதல் தொலைத்த காலம் ஒன்றில் 
காற்றில் கலந்து அலைந்து திரிந்த போது 
உருவம் தொலைத்த கவிதையொன்றை
நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்


எனைக்கண்டதும்
சிலுவை கண்ட வாதை போல
வழி மாறி திரும்பியது 

சரியாக நினைவிலில்லையெனினும் 
உள்ளுள் உறைந்து போன 
உருவமில்லா உறவைப் பற்றிய 
வார்த்தைத் தொகுப்பு போல 
தோன்றி மறைய 

பின்தொடர்ந்து நடக்கத் துவங்கினேன் 
மேகங்களில் தடம் பதித்து 
பதறியோடிச் சென்று 
மரணத்தின் தூரத்திலிருந்த அக்கவிதையை 

பாதையில்லா பாதையினூடே
தடம் பதித்த பக்கங்களெல்லாம் 
சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தன 
நினைவுத்துண்டுகள் வார்த்தைகளாய் 

ஓடிச்சென்று எட்டிப்பிடித்தேன் 
மீதமிருந்த வார்த்தைகளை 
சிதறவிடாமல் 

ஏறக்குறைய உருக்குலைந்த 
வார்த்தைகளை உருவம் காண,  
சிதறிக் கிடந்த வார்த்தைகளையும் 
பத்திரமாய் எடுத்து பதறாமல் 
தொடுக்கத் துவங்கினேன்

ஒற்றைத்துளியில் 
உருவாகும் உயிர் போல 
உருவம் பெற்று நின்றது 
அக்கவிதை 

அது 

எழுதுகையில் 
கவிதையினி எழுதுவதில்லையென 
முடிவெடுத்த அக்கணத்தில் 
உருவான மற்றொரு 
கடைசிக் கவிதை...

கடைசிக்கவிதைகள் தொடரலாம்..  

மூன்றாம் ஜாமம்.


நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்த என்னை தொடர்பதிவு என்று உள்ளே இழுத்துவிட்ட திரு வைகை அவர்களுக்கு கொலைவெறியுடன் ஒரு வணக்கத்தை (வணக்கமா நன்றியா) தெரிவித்துவிட்டு வாங்க போலாம்.. 

யோவ்.. யோவ்.. எங்கையா போறீங்க நான் சொனது பதிவ படிக்க போலாமின்னு.. 
1. விரும்பும் 3 விஷயங்கள்


அ. தூறலுடன் கூடிய மாலை நேர கடற்கரை 
ஆ. ஜன்னலோர கடைசி இருக்கை பயணம்  
இ.  அடைமழை தேநீர் 
2. விரும்பாத 3 விஷயங்கள்

அ.  என்னிடம் கேள்விகள் கேட்ப்பது (ஆனா நான் கேட்ப்பேன்)
ஆ. தூக்கம் கலைப்பது 
இ.  அதிக சத்தம் 


3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது 
ஆ. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பைக் ஓட்டும் போது மட்டும் 
இ.  தற்போதைய இயந்திர வாழ்க்கை. 


4. புரியாத 3 விஷயங்கள்

அ.  என்னவள் கண்கள் பேசும் மௌன மொழி 
ஆ. பள்ளிக்காலம் முதல் கல்லூரிக்காலம் வரை கணக்குப்பாடம்   
இ.  என்னையும் ஒரு பதிவர் என்று நம்புவது  


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஒடஞ்ச  கீபோர்ட்
ஆ. ஓடைய போற மௌஸ் 
இ.  அவள் நினைவுகளை நித்தம் பதிவு செய்யும் டைரி. 


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. மலையாள நடிகர் Suraj Venjaramoodu ன் நகைச்சுவைகள் 
ஆ. கும்மி குரூப் மக்களின் கமெண்ட்கள் மற்றும் பதிவுகள் 
இ. கல்லூரிகால ஆட்டோகிராப் புக்.

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ. இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன் 
ஆ.
இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்  
இ. இதை டைப் 
செய்து கொண்டிருக்கிறேன்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. பொறுமை 
ஆ. சமையல் (வருங்காலத்தில உதவுமில்லையா)
இ. செய்யிற வேலைய ஒழுங்கா செய்ய 


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

அ. மீன் குழம்பு (அம்மா சமைத்தது மட்டும்)
ஆ. காரக்கொழம்பு
இ. கேரளா உணவுவகைகள் எல்லாமே. 


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. மரணம் மற்றும் துயர செய்திகள் 
ஆ. அட்வைஸ் 
இ. அள்ளக்கைகளின் அலப்பறைகள் 


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. காதலின் தீபம் ஓன்று (தம்பிக்கு எந்த ஊரு)
ஆ. வெண்மதியே வெண்மதியே (மின்னலே).
இ. பூவே பூவே பாலப்பூவே (தேவதூதன் -  மலையாளம்)


14. பிடித்த 3 படங்கள்

அ. மின்னலே 
ஆ. பிரம்மாரம் (மலையாளம்)
இ. கம்யம் (தெலுகு)


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. உண்ண உணவு 
ஆ. உடுத்த உடை 
இ.  இருக்க இடம் 
       (பள்ளிக்காலத்தில படிச்சதெல்லாம் மறக்கமாட்டமில்ல)


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்


17. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்18. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்19. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்

அ. பனங்காட்டு நரி  (இலக்கியம் மட்டும் வேனாஞ்சாமி )
ஆ. மாலுமி (தண்ணியிலிருந்து கொஞ்சம் வெளிய வாங்கையா)

இ. சுற்றுலா விரும்பி - அருண் இங்கே கூப்பிட்டிருக்கிற அத்தன பேர் பிளாகும் தூசு படிஞ்சு போய் கிடக்கு.. இதில ஒரு சிலருக்கு ப்ளாக் ன்னு ஒண்ணு இருக்கிறதே மறந்து போயிருக்கும்.. அதனால அண்ணன் சொன்னத மறுக்காம ஒழுங்கு மரியாதையா இந்த தொடர் பதிவ எழுதுங்க.. இல்லன்னா பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. இவ்வளவு சொல்லியும் எழுதாம போனா நான் மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சிருவேன் சொல்லிட்டேன்.. 

கடைசியாய் ஒரு கவிதை..

கடைசியாய் ஒரு கவிதை எழுதலாமென
எனை மறந்த உலகை நான் மறந்து
வார்த்தைகளை வரிசைப்படுத்த துவங்கினேன்

எவ்வளவு முயற்சித்தும்
ஒத்துழைக்க முடியாதென
அடம்பிடித்தன பிடிவாத வார்த்தைகள்

பொறுமை காத்து பொறுக்க முடியாமல்
கோபத்தை கொட்டித் தீர்த்தேன்
வார்த்தைகளிடம்

எவ்வித அசைவுமின்றி அசையாமல்
ஆணியடித்தது போல் மௌனமாய் 
நின்று கொண்டிருந்தன வார்த்தைகளனைத்தும்

ஆத்திரப்பட்டு பயனில்லை என்றறிந்த பின்
சுற்றும் முற்றும் பார்வை வீசி
பார்வையாளர்கள் எவருமில்லையென
உறுதி செய்து என் உறுதி குலைத்தேன்
வார்த்தைத் தலைவனிடம்.

கை கூப்பி
தலை சாய்த்து
வெட்கம் விட்டு வேண்டிக்கொண்டேன்
காதலில்லாமல்
காமம் கலவாமல்
கடைசியாய் ஒரு கவிதை வேண்டுமென

மௌனம் ஆக்கிரமித்த சிறு இடைவேளைக்கு பின்
ஒட்டுமொத்த வார்த்தைகளும் ஒன்றாய் சேர்ந்து
ஒரே குரலில் சொல்லத்துவங்கின

"உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா"  என்று...

மீண்டுமொருமுறை  மௌனம் ஆக்கிரமிக்க
கலங்கிய கண்களுடன்
"வேறு வழியே இல்லையா என்றேன்"

ஏளனமாய் என்னைப்பார்த்து
அதிகாரத் தோரணையில்
"சொன்னதைச் செய்
இல்லையேல் என்னிடம் வரதே" என்று கூறி
நடக்கதுவங்கின வார்த்தைகளனைத்தும்
பாதைகளற்ற ஒரு ஒற்றையடி  பாதையில்

அந்நேரம்
"இனி கவிதையேதும் எழுதுவதில்லையென
முடிவெடுத்திருந்தது என் மனது"

நா
    ன
        றி
            யா
                  ம
                      ல்....


கடைசி சந்திப்பு..


வ்வொரு சந்திப்பின் முடிவிலும்
உள்ளும் புறமும்
ஒன்றுகூடி ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றுகின்றன
இதுவே அவளுடனான
கடைசி சந்திப்பென..

அம்முடிவை கயிறாக்கி
மனதை சுற்றி இறுக்கிக்கட்டி
இருளில் இடம் பெயர்க்கிறேன். 

நித்தம் நிகழும் ஒவ்வொரு செயலும்
அவளையே  நினைவூட்டும் போது
முட்டி மோதியும் 
திமிறித் துடித்தும்
அலறி அழுதும் 
முடிச்சுகள் அவிழாததால்
அமைதியாகிறேன்.

காலம் சில கடந்து 
மீண்டும் மீண்டு வருகிறாள் 
முழு மதியாய்  முகம் மலர்கிறாள்
முடிச்சுகள் மூர்ச்சையிழந்து விடுகின்றன..

நலம் விசாரிக்கிறாள்
முன் போல
அதிகாரம்
அரவணைப்பு
குற்றம்
குறை
கோபம்
கண்ணீர்
வெட்கம்
காதல்
கூடல்
என எதுவுமில்லாமல்
நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்...

மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென...

கோமாளியும் செல்வா கதைகளும்..

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் இறுக்கமாய் நம்மை அணைத்துப் பிடித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கின்றன. எப்போதும் ஏதோ ஒரு எண்ணத்தில் சுருண்டு கிடக்கும் மனது எங்கேனும் ஒரு நகைச்சுவையையோ அல்லது ரசிக்கத்தகுந்த நிகழ்வையோ கண்டு விட்டால..   கட்டவிழ்ந்த முத்தாய், கை கொட்டி சிரிக்கும் குழந்தையாய் கன்னக்குழிகள் விழ திறந்து கொள்கிறது மனது. செல்வாவின் கோமாளி வலைத்தளமே நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வயிற்று வலியை வரவைப்பதற்காக கோர்ட்டில் கேஸ் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது....

நாதஸ்வரத்தின் சப்தத்தை தாண்டும் தவில் ஓசையைப் போல இன்னுமொரு குட்டி சிரிப்பு அரக்கனை களமிறக்கி இருக்கும் செல்வா அந்த தளத்திற்கு வைத்த பெயர்  
                      

முல்ல நஸ்ருதீன் கதைகளை வாசிக்கும் போது வந்து குதிக்கும் ஒரு உற்சாகத்துக்கு சற்றும் சளைத்தது இல்லை செல்வாவின் கதைகள்...! இதில் நாயகன் தம்பி செல்வா... ! செல்வாவின் அறிவுப்பூர்வமான அபத்தமான சிந்தனைகள் தரையில் உருண்டு சிரிக்கவைப்பதில் இருந்து நான் தப்பவில்லை.. வாசித்தால் நீங்களும் தப்ப மாட்டீர்கள் என்பது உறுதி.....!

வேடிக்கை செய்வதே வாடிக்கையாய் கொண்டிருக்கும் செல்வாவின் கதைகள். நமக்கு உற்சாக சிறகுகளை பூட்டி சந்தோச வானில் சிறகடித்து பறக்கச் செய்யும். நீங்களும் நுகர்ந்து பாருங்கள் சந்தோச வலைப்பூவின் வாசத்தை... நைட்ரஸ் ஆக்சைடாய் உங்கள் நாசிக்குள் புகுந்து குலுங்கி குலுங்கி சிரிக்க்க வைக்கும்...! இதோ  உங்க பார்வைக்கு  இரண்டு கதைகள்..  மாம்பலத்தில் பிறந்த குழந்தை


செல்வாவும் அவரது நண்பரும் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவரது நண்பர்,

" நம்ம ரவிக்கு மாம்பலத்தில குழந்தை பிறந்திருக்கு , பார்க்க வரியா ? என்றார்.

" அப்படியா , கண்டிப்பா வரணும். இரு வீட்டுக்குப் போனதும் வரேன் " என்று செல்வா அவசர அவசரமாகக் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் செல்வாவும் சில பத்திரிக்கை நிருபர்களும் வருவதைப் பார்த்தார் அவரது நண்பர்.

" போலாமா ? " என்றார் செல்வா.

" போலாம் , இவுங்க எல்லாம் யாரு , எதுக்கு வந்திருக்காங்க ? "

" இவுங்களும் ,  நம்ம கூட வராங்க , நம்ம ரவி குழந்தை அதிசயக் குழந்தைல , அத பத்தி எழுத வந்திருக்காங்க!!"

" அதிசயக் குழந்தையா ? என்ன சொல்லுற ? "

" ஆமா எல்லாக் குழந்தையும் வயித்துக்குள்ள இருந்து தானே பிறக்கும், இந்தக் குழந்தை மட்டும் மாம்பழத்துக்குள்ள இருந்து பிறந்திருக்குல, அப்படின்னா அதிசயக் குழந்தைதானே!! "

" மாம்பழத்துக்குள்ள இருந்து பொறந்திச்சா ? என்ன ஒளர்ற ? "

" நீதான சொன்ன , நம்ம ரவிக்கு மாம்பலத்துல குழந்தை பிறந்திருக்குன்னு?! "

" பன்னாட , அது மாம்பழம் இல்ல , மாம்பலம். சென்னைக்குப் பக்கத்துல இருக்குற ஒரு ஊரோட பேரு !! ஏன் மானத்த வாங்குற ? " என்று கடிந்தவர் அங்கு வந்திருந்த பத்திரிக்கை நண்பர்களைச் சமாதனப்படுத்தி திருப்பி  அனுப்பினார். எலி மருந்து 

 இது செல்வாவின் சிறுவயதில் நடந்த சம்பவம்.


ஒரு முறை செல்வாவின் தந்தை அவரிடம் அருகில் உள்ள கடைக்குச் சென்று எலிமருந்து வாங்கிவரும்படிக் கூறினார்.

செல்வாவும் சரி என்று கூறிவிட்டு எலிமருந்து வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் செல்வா கடையில் இருந்து திரும்பி வராததால் அவரது தந்தையும் கடைக்குச் சென்று பார்த்துவரலாம் என்று கிளம்பினர். கடையில் ஒரே கூச்சலாக இருப்பதைக் கண்டார்.

செல்வாவின் தந்தை கடைக்குள் நுழைந்ததும் கடைக்காரர் அவரிடம் சற்று கோபமான குரலில் "உங்க பையன தயவு செஞ்சு கூட்டிட்டுப் போய்டுங்க!" என்றார்.

" ஏன் , என்ன பண்ணினான் ? "

" உங்க பையன் கிட்டவே கேளுங்க !! "

" என்னடா பண்ணின ? "

" அப்பா நீங்கதானே எது வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கனும்னு சொல்லிருக்கீங்க ? அதான் எலி மருந்து வாங்குறதுக்கு முன்னாடி ஒரு எலியப் பிடிச்சு அதுக்கு இந்த மருந்த வச்சு அது சாகுதான்னு பார்த்துட்டுதான் வாங்குவேன் அப்படின்னு கேட்டேன் , இது தப்பா ? "

செல்வாவின் அப்பாவிற்கு இப்பொழுது விசயம் புரிந்தது. முன்பு ஒருமுறை செல்வாவிடம் பேனா ஒன்று வாங்கி வரச்சொல்லி அது எழுதாமல் போகவே , எத வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கணும் என்று சொன்னது நியாபகம் வந்தது.

" எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா , வா போலாம் " என்று செல்வாவை அழைத்துக்கொண்டு சென்றார்.

இது போன்ற ஏராளமான கதைகளை நீங்கள் செல்வா கதைகள் என்ற தளத்தில் படிக்கலாம். இந்த கதைகளை படிக்கும் அந்த தருணங்களிலாவது நீங்கள் உங்களையும் உலகத்தையும் மறந்து சிரித்து செல்லலாம் என்பது உறுதி. செல்வாவின் கதைகளுக்காக நீங்கள் நீண்ட  நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.  நம்பிக்கையுடன் சென்று தினம் ஒரு கதை படிக்கலாம்.  இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க சீக்கிரம் போய் படிங்க செல்வா கதைகளை.

தேங்க்ஸ் டு தேவா அண்ணா

கிறுக்கனின் கிறுக்கல்கள்..2பி.கு 1  - படங்களை பெரிதாக பார்க்க படங்களின் மேல் கிளிக்செய்யவும்
பி.கு 2 - படங்கள்  அனைத்தும் பல்வேறு இணைய தளங்களிலிருந்து கிடைத்தவை.

கிறுக்கனின் கிறுக்கல்கள்..

தனிமையை துணைக்கு அழைத்து நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் தருணங்களில் மனதில் தோன்றும் கவிதையல்லாத கிறுக்கல்களை  தொகுத்து அவற்றை  சில படங்களோடு இணைத்து இங்கே  பகிர்ந்துள்ளேன், இங்கே நான் பகிர்ந்துள்ள சில ஏற்கனவே நீங்கள் இந்த தளத்தில் படித்திருக்கலாம் ஆனால் படங்களின் இணைப்பில்லாமல், இவற்றில் சிலவற்றிக்கு எழுதிவிட்டு படத்தை தேடியிருக்கிறேன், சில கிடைத்த படங்களுக்கு ஏற்ப கிறுக்கியவை. இதோ இந்த கிறுக்கனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக..
பி.கு 1  - படங்களை பெரிதாக பார்க்க படங்களின் மேல் கிளிக்செய்யவும்
பி.கு 2 - படங்கள்  அனைத்தும் பல்வேறு இணைய தளங்களிலிருந்து கிடைத்தவை.. 


இது ஒரு மென்பொருள் காதல்!

சில  வருடங்களுக்கு முன் MP4 பிளேயர் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு  அதில் MP3  பாட்டுக்களை மட்டுமே கேட்டு வந்தேன், காரணம் அதற்கு ஏற்ற வீடியோக்கள் கிடைக்க வில்லைநமக்கு தேவையான அனைத்து வீடியோ க்களும் youtube ல் இருந்தாலும் அதை  தரவிறக்கி  MP4 ல் play ஆகும் ஃபார்மெட்டா  மாற்ற முடியவில்லைமேலும் பெரிய வீடியோக்களிலிருந்து தேவையான பகுதியை வெட்டியெடுக்கும்படியாகவும் எந்த  மென்பொருளும் கிடைக்கவில்லை. அப்போது வரப்பிரசாதமாக கிடைத்த இரண்டு மென்பொருட்களை பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மென்பொருள் மூலம் Youtube, google, Yahoo, Metacafe, Dailymotion & Megavideo போன்ற தளங்களிலுள்ள  வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் டவுன்லோட் செய்யும் போதே அந்த வீடியோக்களை நமக்கு தேவையான ஃபார்மெட்டில் மாற்றிக்கொள்ளலாம்.

முதலில்
Search Video என்ற பகுதியை select செய்து விட்டு search என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான வீடியோ சம்மந்தப்பட்ட சுட்டியை கொடுங்கள்,

Sites என்ற பகுதியில் கிளிக் செய்து உங்களுக்கு எந்த தளத்திலிருந்து வீடியோ வேண்டுமோ அதை தேர்வு செய்யலாம். இல்லையென்றால் All  தேர்வு செய்து Search செய்யலாம்.  மேலும் maxresult என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான எண்ணிக்கை தேர்வு செய்யலாம்.நீங்கள்
search செய்தவுடன் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் வலது புறத்தில் வரும், அதில்  தேவையான வீடியோவை தேர்வு செய்யும் போது இடது பக்கத்தில் preview  வரும்வீடியோவை சரிபார்க்க வேண்டுமானால் Play செய்தும் பார்க்கலாம்.


வீடியோவை டவுன்லோட் செய்யும் முன்னர் மேலே உள்ள
Tube Downloader என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள், அப்போது கீழே  படத்தில் உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்.இந்த பகுதியில் உங்களுக்கு தேவையான Video Format, Video Size, Bit Rate, Video Codac, Frame rate, Audio மற்றும் Output path போன்றவற்றை இங்கு தேர்வு செய்து டவுன்லோடை ஆரம்பிக்கலாம்.

PSP, 3G2, 3GP, WMV. MP4. AVI. MPEG2, போன்ற FORMET களில் வீடியோக்களை கன்வெர்ட் செய்யலாம்.  மேலும் ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் வசதியும் இதில் உள்ளது.இந்த
FLV Converter ல் ஏற்க்கனவே நாம்மிடம் இருக்கும் வீடியோக்களை FLV போர்மெட்ல் மாற்றலாம். அது போன்றே  நம்மிடம் இருக்கும் FLV வீடியோக்களை நமக்கு தேவையான ஃபார்மெட்டில் மாற்றலாம். இதற்கான வசதி Conversion from FLV & Conversion to FLV என்றும் காட்டப்பட்டுள்ளது. வீடியோக்களை நமக்கு தேவையான  பார்மெட்டில்  எளிதில் கன்வெர்ட் செய்ய  இந்த மென்பொருள் மிகவும்  உபயோகமாக இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் 3g2, 3gp, Asf, Avi, DVD (NTSC), DVD (PAL), Flv, ipad, iphone, Mp4, Mpeg-1, Mpeg-2, P3, PSP, WMV, Zune
      போன்ற பார்மெட்களில் வீடியோக்களை  கன்வெர்ட் செய்து கொள்ளலாம்.வீடியோக்களில் ஒவ்வொரு பார்மெட்டிலும் வேறு வேறு codec உள்ளது. உதாரணமாக Avi  ல்  DIVX, DIVX5, H 263, MPEG-4, இது போன்று இன்னும் பல codec உள்ளன.  MP4 , DVD player , PSP , போன்றவற்றில் உபயோகமாவது AVI format ல் உள்ள வீடியோவாக இருந்தாலும் அவை இந்த codec-களை பொறுத்து  வேறுபடுகின்றன.  இது போன்று Audio codec களும் வேறுபடுகின்றன. இதில் கன்வெர்ட்டர்ல் வீடியோக்களை add செய்து, அது என்ன ஃபார்மட் என்றும் அதன் video codec , audio codec, bitrate  போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம் மேலும் வீடியோவிலிருந்து நமக்கு தேவையான பகுதியை மட்டும் தனியாக வெட்டியெடுக்கும் வசதியும் உள்ளது.

இந்த இரண்டு மென்பொருளையும் நீங்கள் KoyoteSoft.com ஒரே தளத்திலிருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம், இவை மட்டுமல்லாமல் இந்த தளத்தில்Audio Converter, HD Converter, FLV Player, Free Easy CD DVD Burner, Videos To DVD மற்றும் பல மென்பொருட்கள் உள்ளன, இதில் பெரும்பாலானவை இலவசமே. சிலவற்றில் சில Advance option களுக்கு மட்டுமே நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆப்சன்கள் பெரும்பாலும் நமக்கு தேவைப்படாது. மொத்தத்தில் இந்த சாஃப்ட்வேர் சாதாரண நபர்களுக்கு பெரும் பயன் அளிக்க கூடியவைகளாகும்.