ஓரமாய் ஒன்றிரண்டு

அடைத்து வைத்த மனிதர்களிடமும்
அன்பாய் பழகுகின்றன
அப்பாவி பறவைகள்...

-------------------------------------------------------------------------------------------------


வீசும் தென்றல்
பொழியும் மழை
வேட்டையாடும் வெயில்
பௌர்ணமி நிலவு
அமாவாசை இருள்
என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை...

-------------------------------------------------------------------------------------------------

ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..???

-------------------------------------------------------------------------------------------------

"பெண் மனசு"..

"பெண் மனசு" என்ற தலைப்பில் பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்டுத்தும் பாடல் பற்றி எழுத அழைத்த "வார்த்தைகளை வசியப்படுத்திஅவற்றை கவிதைகளாக மாற்றி தெளிவான நீரோடை போன்று கருத்துக்களை கூறும் சகோதரி அன்புடன் மல்லிகா" அவர்களுக்கு நன்றி..

பெண்மனசு என்ற பெயரை பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தது அதற்கு சற்று முன் கேட்ட ஈசன் படத்திலிருந்து ஒரு பாடல் தான். ஒரு விலைமகள் தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்பததை கூறும் படியாக அமைந்திருந்தது இந்த பாடல்.

மானத்தை விற்று வாழும் பெண்களுக்கும் மனசு என்று ஓன்று இருக்கிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். இவர்களில் எவரும் இத்தொழிலை விரும்பி செய்வதில்லை, உறவுகள், குடும்பம், குழந்தை, பசி, காதல், ஏமாற்றம், போன்ற பல காரணிகளாலும் காரணங்களாலும் தான் இந்த நரகத்தில் வந்து விழுந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை. இப்படி குடும்ப சூழ்நிலையால் ஒரு சான் வயிற்றை நிரப்ப தன்னையே தானமாக கொடுக்கும் ஒரு பெண் தன்னை பற்றி தானே கூறுவது போன்று எழுதியிருக்கிறார் மோகன்ராஜன் அவர்கள். குரல் கொடுத்திருக்கிறார் தஞ்சை செல்வி..

என்னால் முடிந்தவரை பாடலை வார்த்தைகளாக்கி இங்கே பதிந்துள்ளேன். பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.வந்தனமாம் வந்தனம்
எல்லோருக்கும் வந்தனம்
மனமணமாம் சந்தனம்
சந்தனத்த பூசிகிட்டு சந்தோசமா கேக்கணும்
கலகலப்பா ஆடணும், விசிலு தாளம் போடணும்

ஜில்லா விடு ஜில்லா வந்த
பொண்ணு கதைய கேளையா
நான் தூத்துக்குடி பொண்ணையா
என் கதைய கேளையா

சுகத்த விக்குற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்த
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்..

எட்டாவதா பெத்தெடுத்த
எங்கப்பனுக்கு தெரியல
சொக்கனும் அத கேக்கல..

வளைந்து நிக்குற தென்னையா
வக்கணையா நானின்னேன்

ஏழையும் கரை சேத்ததாலே
ஏழரையா நானானேன்.

அங்கெ சுத்தி இங்கே சுத்தி
வந்தானையா மாப்பிள
சீக்காளிக்கு மறுபுள்ள
பழைய பாயா என்ன சுத்தி
போனானையா மாப்பிள
அவன் துப்பில்லாத ஆம்பிள

அஞ்சாந்நாளு மூட்டு வலியில
மாப்பிள தான் படுத்திட்டான்
என் கனவையெல்லாம் ஒடச்சிட்டான்

காச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நிலம் வித்தேன்
வித்ததேல்லாம் போக மிச்சமாக
நான் நானின்னேன்
அட எச்சமாக நானின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்ன சுத்தி வந்திச்சு
இள மனச கெடுத்திச்சு

உசிர விட மானம் பெருசு
புத்திக்கு தான் தெரிஞ்சிச்சு.
வயிறு எங்கே கேட்டிச்சு

ஒரு சாணு வயித்துக்கு தான்
எல்லாத்தையும் விக்குறேன்
நான் எல்லாத்தையும் விக்குறேன்

இப்ப இங்கே நிக்குறேன்
என் கதைய முடிக்கிறேன்


--------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------


ஒரு தொடர்பதிவு எழுதினால் குறைந்தது இரண்டு பேரையாவது தொடர்ந்து எழுத கை (மாட்டி) காட்டி விடவேண்டும் என்பது பதிவுலகின் எழுதப்படாத சட்டமாக இருப்பதால் வேறு வழியின்றி


ஆகியோரை தொடர அழைக்கிறேன்.. நேரமின்மை காரணமாக இங்கே ஒரு பாடலை தான் என்னால் குறிப்பிட முடிந்தது.. இத்தொடர் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.


ஒருத்தி..

பள்ளிக்கு முன்
பஸ் காத்து நிற்கிறார்கள்
இளம்பெண்கள்..

குடையிலும், கைப்பையிலும்,
செருப்பிலும், சீருடையிலும்
எத்தனை அடக்கியும்
தெறிக்கும் உடல்கள்..

வாக்கிலும், நோக்கிலும்
நிற்பிலும், நடப்பிலும்
எத்தனை மறைத்தும்
வெளித் தெரியும்
துடிக்கும் இதயம்...

நிறுத்தாமல் போகும்
பஸ்ஸுக்கு பின்னால்
ஓடித் திரும்புகின்றன
பதற்றம்
மையிட்ட கண்கள்..

இவர்களில் ஒருத்தி
வேலைக்கு போவாள்
குடும்பம் காப்பாள் ஒருத்தி
வழி தவறுவாள் பிறிதொருத்தி..

ஒருத்தி
கைக்குழந்தையுடன்
பஸ்ஸில் இருந்து
இவ்வழி செல்கையில்
அவள் படித்த பள்ளி என்று
கணவனுக்கு சுட்டுவாள்..

ஒருத்தி
அப்போதும்
அங்கேயே
பஸ்ஸுக்காகக் காத்து நிற்ப்பாள்..


**********
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் (மலையாள மொழிபெயர்ப்பு) என்ற கவிதை தொகுப்பில் பி.பி.ராமச்சந்திரன் அவர்கள் எழுதிய கவிதைகளில் நான் மிகவும் ரசித்த கவிதை இது..

ஏக்கம்...

நீ விட்டு சென்ற
நினைவுகளை
வார்த்தைகளாக்கும்
முயற்சியில் நான்..

பசியால் அழும் சிறு
பிள்ளை போல,
அரவமற்ற வேளையில்
அதிர்வுடன் அலறியடித்தது
என் அலைபேசி
உன்னில் என்னை சுமந்து..

என் மெய் கலந்த
கவிதை நீ
பேசத் துவங்கியதும்..

காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..

நமக்கினி இங்கேது
வேலையென..

அறிந்ததும் அறியாததும் 8 - "கர்ப்பமும் காட்சியும்"..

"கர்ப்பம்" இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணி பெண்ணை டிவி யில் காட்டவும் தடை இருந்தது. 1953 ம் ஆண்டு லூசில்லே பால் என்ற அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நடிகை தயாரித்து நடித்த "ஐ லவ் லூசி" என்ற தொடர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லூசில்லே பால் கர்ப்பமானார். அந்த காரணத்திற்க்காக தொடரை பாதியிலேயே நிறுத்த மனமில்லாமல் அந்த தொடரிலுள்ள லூசில்லே பாலின் கதாப்பாத்திரம் கர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றி அமைத்தார் டைரக்டர். ஆனாலும் கர்ப்பம் என்ற வசனமும், கர்ப்பிணியின் திரை தோற்றமும் ஆபாசமானது என்று கூறி தடை விதித்தனர் டிவி நிலையத்தினர்.
பாதிரியார்கள், யூத மத குருக்கள் என பலரை சந்தித்து கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை, இது மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை இல்லை என்றும் இதனை தாரளமாக டி வி யில் கட்டலாம் என்று விளக்கம் கொடுத்தார் லூசில்லே பால். இதை தொடர்ந்து பாதிரியார்களும், மத குருக்களும் லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள். இதற்கு பின்னர் லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு சம்மதித்த டிவி நிலையம் கர்ப்பம் என்ற வசனத்தை மட்டும் சென்சார் செய்துவிட்டது.உலகிலேயே டிவி யில் தோன்றிய முதல் கர்ப்பிணி பெண் "லூசில்லே பால்" தான்.

*******

1896 ம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயாலஸ்" மண்டபத்தில் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம்" ஆடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதுவே தான் "வைட்டாஸ்கோப்" என்ற ஆரம்ப கால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

*******

உதவிய உயிருக்கு நன்றி..

ரஜினியின் ரசிகனாக..

ரஜினியை எப்படி பிடிக்கும், எப்போதிலிருந்து பிடிக்கும் எனக்கேட்டால் அதற்கு என்னிடம் பதிலிருக்காது.. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரஜினியை பிடிக்கும்.. நான் பார்த்த முதல் ரஜினி படம் "நினைத்தாலே இனிக்கும்".. என்னை பொறுத்த வரை நான் பார்த்த முதல் படமும் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.. இந்த படத்தில் ரஜினியும் கமலும் நடித்திருந்தாலும் என்னை கவர்ந்தது ரஜினியின் ஸ்டைலும், குறும்புகளும் தான்.. குறிப்பாக சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கும் காட்சிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை.
ரஜினி படங்களிலேயே என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படம் என்றால் அது பாட்ஷா படமாகத் தான் இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக ஸ்கூலுக்கு மட்டம் போட்டு பார்த்த படம், அதற்காக வீட்டில் வீட்டில் வாங்கிய பிரம்படிகளின் அடையாளம் இன்னும் மறைய வில்லை.
1990 களில் எங்கள் ஊரில் ரஜினிக்கு அடுத்த படியாக விஜயகாந்த்துக்கு தான் ரசிகர்கள் அதிகம். (இப்போதைய நிலவரம் எனக்கு தெரியவில்லை). அதிலும் கோவில் திருவிழாக்களில் நாடகங்களல்லாமல் திரைப்படங்கள் போடுவதென்று முடிவு செய்தால் ரஜினி படமா இல்லை விஜயகாந்த் படமா என்று பெரிய பஞ்சாயத்தே நடக்கும். இந்த ரசிகர்கள் ஒரு புறமிருக்க பள்ளிகளில் நாங்கள் தனியாக ரசிகர் மன்றங்கள் வைத்திருப்போம். ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களாகிய எங்கள் எதிரிகளுக்கும் அடிக்கடி மோதல்கள் வெடிப்பதுண்டு.. சில சமயங்களில் அது கைகலப்பாகவும் மாறிவிடும். இவையெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை தான். இப்பொழுது அந்த நண்பர்களை பார்த்தால் (பழைய எதிரிகள்) பழைய பள்ளி நினைவுகளைச் சொல்லி சிரிப்பதுண்டு.
ரஜினி நடித்த படங்களில் 95 % படங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த சில படங்கள் இங்கே.


முள்ளும் மலரும் :-
எப்போதாவது எனக்கு நல்ல படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் என் கண்கள் தேடி அலைவது முள்ளும் மலரும் படத்தை தான்.. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களை தேர்வு செய்தால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் (ஏன் முதலிடமாகவே) இந்த படம் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை..

ஆறிலிருந்து 60 வரை :-
பல காட்சிகளில் கண்களில் கண்ணீரை எட்டி பார்க்க வைத்த படம். உறவுகளால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏழை அண்ணனின் கதையை அருமையாக படமாக்கியிருப்பார் எஸ்.பி. முத்துராமன் ... ரஜினியின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஓன்று.
எங்கேயோ கேட்ட குரல் :- இந்த படத்தில் நடித்தது வில்லனாகவும், வெடிக்கும் வசனங்களுடனும், வேகமான கை கால் அசைவுகளையே புது ஸ்டைலாக மாற்றும் ரஜினி தானா என்று பலரையும் கேட்க வைத்த படம். இந்த படத்தில் தலைவர் நடித்தார் என்பதை விடவும் வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்புடன் கூடிய ரஜினியின் மற்றொரு அற்ப்புத படைப்பு.
நினைத்தாலே இனிக்கும் :- நான் பார்த்த முதல் ரஜினி படம்.. என்னை ரஜினியின் ரசிகனாக மாற்றியதும் இந்த படம்.. படத்தில் தலைவரின் குறும்புகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.. இந்த படத்தில் ரஜினி வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது. சிகரெட் பிடிக்கும் பந்தைய காட்சியை பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டுமென்றில்லை.(சுஜாதா சாரின் கதை)
தில்லு முல்லு :- ஆக்சன் செண்டிமெண்ட், தமிழ் சினிமாவின் மசாலாக் கலவைகள் என எதுவுமில்லாமல் எடுக்கப்பட்ட முழு நீள நகைச்சுவை திரைப்படம்.. மீசையுடனும், மீசை இல்லாமலும் தேங்காய் சீனிவாசனுடன் தலைவர் செய்யும் லூட்டிகள் ஒவ்வொன்றும் செம கலக்கல். இந்த படத்தை பார்த்து சிரிக்காதவர்கள் நரசிம்மராவுக்கு சொந்தக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும்.
தம்பிக்கு எந்த ஊரு :- கிராமத்தை பற்றி எதுவும் தெரியாமல் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞனின் கதை. பாம்பை கண்டு பயப்படும் காட்சி, வயலில் கதிரறுக்கும் காட்சி, பால் கறக்கும் காட்சி, துணி துவைக்கும் காட்சி, ஆற்றில் மாடு கழுவும் காட்சி என ஒவ்வொன்றும் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பவை. தம்பிக்கு எந்த ஊரு படத்தின் மற்றொரு சிறப்பு "காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே" பாடல்..

தளபதி :-
ரஜினியும் மம்மூட்டியும் இணைந்து மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடித்த படம்.. நட்புக்கு இலக்கணம் சொல்லும் ஒரு படைப்பு. இந்த படத்தை நான் எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. தளபதி படத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
வீரா :- இரண்டு பொண்டாட்டிக்காரனின் கதை. அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு அறிமுகப் பாடல் இல்லாமல் வந்த படம். பாடகர், பிளேபாய், மற்றும் இரு பெண்களின் கணவன் என்ற எல்லா கதாப்பாத்திரங்களையும் நகைச்சுவையால் நிறைவு செய்திருப்பார்.. படத்தில் ரஜினி செய்யும் காமெடி போதாதென்று இவருடன் ஒரு காமெடி பட்டாளம் வேறு.. கேட்க்கவா வேண்டும் காமெடிக்கு..
குரு சிஷ்யன் :- ரஜினியுடன் பிரபுவும் இணைந்து கலக்கிய படம்.. பிரபுவும் ரஜினியும் சேர்ந்து வீட்டில் ரைடுக்கு செல்லும் காட்சி, மனோரமா வினு சக்கிரவர்த்தியை மிரட்டும் காட்சி, கௌதமியுடனான காதல் காட்சிகள் மற்றும் ராதாரவியிடம் ரவுடியாக வேலைக்கு சேரும் காட்சி என காமெடிக்கு பஞ்சமில்லாத ஒரு படம்.
ஊர்க்காவலன் :- சத்யா மூவீசின், மனோ பாலா இயக்கிய படம். ராதிகாவின் காமெடி, சங்கர் கணேஷின் பாடல்கள், ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதை என அனைத்தும் அருமையான கலவையாக வந்த படம். ( ரஜினி ஹேர் ஸ்டைல் மாத்தினது இந்த படம்தானாம்)
பாட்ஷா :- தலைவரின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் முதலிடம் வகிக்கும் படம் இது. ஆக்சன், காமெடி, பஞ்ச் டயலாக், செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த ஒரு பக்கா கமெர்சியல் படம்.. என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படமும் கூட..
என்ன தான் தலைவரின் படங்கள் ஆக்சன், அதிரடி வசனங்கள் என நிறைந்திருந்தாலும் தலைவரிடம் என்னை கவர்ந்தது நகைச்சுவை தான்.. தமிழ் நடிகர்களிலேயே தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..
( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா )

மழைக்கால நினைவுகள்..

வாரத்தின் இறுதி நாள்..

பகலை துரத்தியடித்து
இருள் தன் வெற்றியை
கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரம்...

ஜன்னலின் வழியே
அனுமதியின்றி நுழைந்து
எனை வருடிச்சென்ற
தென்றலையும்,

மேகங்களுக்கிடையில்
ஒளிந்து விளையாடும்
நிலவையும்,

தூரமாய் தெரிந்த
இரண்டு நட்ச்சத்திரங்களையும்
ரசித்துக்கொண்டிருந்த தருணம்....

நெற்றியிலும்
கன்னத்திலும்
விழுந்து சிதறியன இரண்டு
மழைத்துளிகள்...

சிதறிய அத்துளிகளுடன்
வெடித்துப் பரவியது
என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...

இனிதாய் இயல்பாய் இழப்பில்லாமல்..

அதிகாலை எழுந்து
எண்ணை தேய்த்துக்குளித்து
புத்தாடை அணிந்து
கோவிலுக்கு போய் சாமி தரிசனம் முடித்து
வித விதமாய் பலகாரங்கள் சுவைத்து
விடிய விடிய பட்டாசுகள் வெடித்து
என இதுவரை கொண்டாடாத
தீபாவளியை போன்றே
இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது

*********

எல்லா வருடங்களை போன்றே எந்த ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த வருட தீபாவளியும் வந்து சென்றாலும் ஒரு சில சம்பவங்களால் மறக்க முடியாத ஒரு நாளாகவே மாறி விட்டது. அன்று நடந்தவற்றை எளிதில் மறந்து விடவும் முடியாது.


* அதிகாலை 10 மணிக்கே என் தூக்கம் கலைத்த மொபைல் போன்.


* ஏன் இன்று வேலைக்கு வரவில்லை என்று போனில் ருத்திர தாண்டவம் ஆடிய என் மேலதிகாரி..


* பஸ் பயணத்தின் போது ஒரு வேளை நான் அருகில் அமர்ந்து விடுவேனோ என்று இருவர் அமரும் இருக்கையில் ஒரே ஆளாய் ஆக்கிரமித்த தோலின் நிறம் பார்த்துப் பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)


* முந்தைய நாளிரவு தீபாவளி கொண்டாட்டத்தின் மயக்கம் தெளியாததால் நேரம் தவறிச் சென்று விமானத்தை தவற விட்ட நண்பர் ஒருவர்..


* மாலை நேரம் டிவி யில் ஏதாவது நல்ல நிகழ்சிகள் இருக்கிறதா என்று ஒவ்வொரு சேனல்களாக துரத்தியடித்துக் கொண்டிருக்கையில் எதோ ஒரு சேனலில் கரையேற முடியாமல் நீந்திக் கொண்டிருந்த "சுறா" படம்..(அடுத்த சேனலில் "சிங்கம்" சீறிக்கொண்டிருந்தது)


இவ்வாறு அன்று நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் மறக்க முடியாதவைகளாகவே அமைந்தாலும் எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி..