என் இனிய தீபாவளி

நினைவு தெரிந்த நாளிலிருந்து வருடந்தோறும் தீபாவளி தன் இயல்பு மாறாமல் வந்து போய்க் கொண்டே தானிருக்கிறது, நான் தான் பட்டாசுகள், பலகாரங்கள், புத்தாடைகள், புதுப்படங்கள், நண்பர்களுடனான கும்மாளங்கள், குடும்பத்தினருடனான கொண்டாட்டங்கள் என ஒவ்வொரு பருவத்திலும் ஏதாவது ஒன்றிற்கான தேடல்களுடனும், ஏக்கத்துடனும் ஒரு பார்வையாளனாகவே ஒவ்வொரு வருடமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இப்போதென்னிடம் எல்லாம் இருந்தும், எப்போதும் போலவே இப்போதும் கொண்டாடி மகிழ இயலாமல் அனைத்திலிருந்தும் தூரமாய் தனிமையில் நான் இருப்பதால் இம்முறை உன்னை சற்றே பெரிய ஏக்கத்துடன் அனுப்பி வைக்கிறேன். அடுத்த முறை உன்னை என் குடும்பத்துடன் சந்திக்கிறேன் இப்போது சென்று வா என் இனிய தீபாவளியே. :)

தொலைத்தும் தொலையா "இரவு"

April-02-2015


எல்லா இரவுகளைப்போலவும் இவ்விரவை என்னால் எளிதில் கடந்துவிட முடியுமென்று தோன்றவில்லை. கடந்த நான்கு வருடங்களாக உறக்கம் தொலைத்த இரவாகவே இருந்து வரும் இவ்விரவு இனியுள்ள காலங்களும் அவ்வாறே தொடரலாம். 

வருடந்தோறும் முயற்சிக்கிறேன்  எங்கனமேனும் இவ்விரவின் கருமையில் அவ்விரவு  நினைவுகளின் கரம் பற்றாமல் கடந்துவிட வேண்டுமென்று,

அவளெழுதிய கவிதைகளோ, அவளால் நான் எழுதிய கிறுக்கல்களோ எப்படியாவது கண்ணில் பட்டு விரதம் கலைத்து விடுகின்றன.

வெறும் கரும்போர்வையுடுத்திய  இவ்விரவைப்பற்றி  எழுதவோ சிலாகிக்கவோ என்ன  இருக்கிறதென்று பலமுறை யோசித்ததுண்டு அவ்விரவை நான் நானல்லாது கடக்கும் வரை

இரவு என்பது தொடக்கம் 
இரவு என்பது முடிவிலி
இரவு என்பது தொடர்ச்சி
இரவு என்பது துன்பம்  
இரவு என்பது இன்பம் 
இரவு என்பது இழப்பு
இரவு என்பது கொலைக்களம்
இரவு என்பது காமக்காடு 
இரவு என்பது காதல்
இரவு என்பது நல்ல ஆசான் 
இரவு என்பது வலி
இரவு என்பது துரோகம்

என்னை முதன்முதலில் தற்க்கொலைக்கு தூண்டியதும், 
என் முகம் தாடிக்கு பொருத்தமாக ஆரம்பித்ததும் 
காதலை தொலத்ததும் 
காதல் களைந்து எழுத ஆரம்பித்ததும் 
கடைசிக்கவிதைகள் ஆரம்பமானதும் 
கடைசியாய் சிரித்ததும் 
கண்ணீர் ஒழித்து வைத்து அழுததும்

என்று இரவு என்னில் எல்லாமுமாய் நின்றது அவ்விரவிலிருந்து தான். 

இவ்வொரிரவை கடப்பதென்பது எனக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல, நாட்களைக் கொன்று  தின்றபடி வருடங்கள் பல நகர்ந்தாலும் வருடந்தோறும் இவ்விரவின் மூர்க்க குணம் மட்டும் மாறாமல் அப்படியே இருப்பது தான் கொஞ்சம் கலக்கமூட்டுகிறது.

இன்னுமென்ன இருக்கிறது இவ்விரவைப்பற்றியெழுத, இதற்கு மேலும் இதனைத்தொடர்ந்தால் தற்கொலை எண்ணத்தை  தூசு தட்ட வேண்டுமென்பதைத் தவிர....

மழை தின்ற கடைசிக்கவிதைஉனக்கான கடைசிக்கவிதையை
எழுதலாமென வந்தமரும் வேளையில் 
அழையா விருந்தாளியாய் 
யன்னல் முட்டி உள்புகுந்து 
தன் வருகையை பதிவு செய்கிறது 
மழை

காலம் சில கடந்தும் 
ஒற்றைப் புள்ளியை மட்டுமே 
உள்வாங்கியிருந்த காகிதத்தில் கவிதைக்காய் 
சேகரித்த வார்த்தைகளைனைத்தையும் 
குவித்து வைத்து 
நம் முதல் சந்திப்பில் 
நீ எனக்கு பரிசளித்த 
பேனாவை துணைக்கமர்த்திச் செல்கிறேன்
மழை ரசிக்க 

நீ நனைந்தது 
உன்னால் நான் நனைந்தது 
மழையிரவு
மழை முத்தம் 
மழை பயணங்கள்  என 
மழையோடான நம்முறவை 
அசைபோட்டபடி நிற்கிறேன் நான் 

வந்த வேலை முடிந்ததென 
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை 
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது 
மழை 

மீண்டும் உனக்கான கவிதையை 
தொடரலாமென வந்தமர்கிறேன் 
நான் 
மழை ரசித்த கணத்தில் 
மெளனமாய் வந்து 
வார்த்தைகளை திருடி 
சாட்சிக்காய் சில துளிகளை 
தூவிச் சென்றிருக்கிறது 
மழை...


ஆகையால் உனக்காகன 
தொடரலாம்...