எண்ண ஓட்டங்கள்



எப்போதேனும்  இயக்கமில்லாமல் 
இருக்கும் பொழுதில் என்னுள் எழும் 
எண்ண ஓட்டங்களை ஒருங்கிணைக்க 
எத்தனிக்கையில் சிதறி ஓடுகின்றன  
திசைக்கொன்றாய் 

எதை துரத்த 
எங்கனம் பிடிக்க என்று 
சிந்திக்கும் சமய சந்தினூடே 
குழப்பத்துடன் தூரத்தில் 
ஒற்றை புள்ளியாய் தேயத் தொடங்கும் 
ஓர் எண்ணத்தை துரத்துகிறேன் 

அவள் 
அவன் 
அது 
காதல் 
காமம் 
காடு 
கடல்
தென்றல் 
திங்கள் 

என என் எண்ணம்  
எல்லாவிடத்தும் ஏறிப் பயணிக்கிறது, 
துரத்திய படி நானும் 
அப்பயணத்தில் அதனூடே 

ஓட்டமும் துரத்தலுமாய் 
துரத்தலும் ஓட்டமுமாய் 
யுகங்களை போல 
உருமாறிய நிமிடங்கள் 
காற்றி கரைந்தோட 

முடிவில்லா மனதில 
முடியா பயணத்தின் 
முடிவில் முடிவாய் 
கரிய கற்களால் கட்டப்பட்ட 
உருவமில்லா ஓர் சுவற்றில் மோதி 
மூச்சுத் திணறி உயிரற்று விழுகின்றன 

ஏமாற்றத்துடன் 
திரும்பி வருகிறேன் 
பழைய இடத்திற்கு 

மீண்டும் 
ஒருங்கிணைக்கிறேன் எண்ணங்களை
சிதறுவதற்கு தயாராகின்றன  அவை..