எப்போதாவது எதேச்சையாக
சந்திக்க நேர்கிறது
உன்னைப்போல் ஒருத்தியை
சிரிப்பது
முறைப்பது
நெற்றி விழும் ஒற்றை முடியை
விரல் சுருட்டி விளையாடுவது
முன்னிருக்கையில் இருக்கும்
குழந்தையிடம்
குழந்தையாய் மாறி
சேட்டைகள் செய்வது
ஜன்னலை கொஞ்சமாய் திறந்து
முகமப்பிய மழைத்துளிகளை
முத்தமிடுவது
என
ஏதாவது ஒன்றிலோ
அல்லது அனைத்திலுமோ
அவள்(கள்)
உன்னை எனக்கு
திரும்ப திரும்ப
நினைவூட்ட
முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள்
உன்னுடனான
முதல் சந்திப்பு
தோழமை
காதல்
கோபம்
வெறுப்பு
பிரிவு
என நம் கடந்த கால
பக்கங்களை புரட்டி
திரும்பும் வேளைகளில்
பெரும்பாலும்
வாழ்க்கை பயணத்தில்
நீயும் நானும்
இறங்கி சென்றது போல
நீயல்லாத உனக்கோ
அல்லது எனக்கோ
இறங்கும் நிறுத்தம் வந்தடைகிறது
இனி
நினைவுகளின்
மொத்த பாரத்தையும்
மனதில் சுமந்தபடி
மீதியுள்ள தூரத்தை
திரும்ப திரும்ப
கடந்து கொண்டிருப்பேன்
அடுத்த பயணத்தில்
நீயல்லாத உன்னை
சந்திக்கும் வரை...