புகைப்படமாய் " என் தெய்வம் "




முந்நூறு நாள் என்னை
மடி சுமந்தவள் நீ...

ஈன்ற பின்னும் என்னை நீ
மடி இறக்கியதில்லை...

விழுந்தால், கை கொடுத்து தூக்கியதில்லை
நானே எழ வேண்டும் என்று,
ஒன்றரை வயதில் எனக்கு
தன்னம்பிக்கை கற்று கொடுத்தவள் நீ...

நான் பள்ளியில் இருந்த நேரத்தை விட,
எனக்காக பள்ளிவாசலில் நீ
காத்திருந்த நேரமே அதிகம்...

பள்ளிப்படிப்பு படிக்கவில்லை என்றேன்,
பக்குவமாக எடுத்து சொன்னாய் என்
பாதை மாறக்கூடாது என்று....

நான் தேவை என்பதை எல்லாம்
நீ வாங்கி தந்ததில்லை, ஆனால் என்
தேவை அறிந்து வாங்கித்தந்தாய்...

நீ அழுது பார்த்ததில்லை ஆனாலும்
கண்ணீர் கண்டிருக்கிறேன், நான் அழும் போது
உன் கண்களில்...

எனக்கு தெரிந்த உலகம் நீ,
உனக்கு உலகமே நான் தான்..

பொறியியல் படிக்க வேண்டுமென்றேன்,
பதிலேதும் சொல்லாமல் உன் பொன்
நகை விற்று படிக்கவைத்தாய்...

நான் காதலிப்பதை சொன்னேன்,
கவனத்தை சிதறவிடாதே என்றாய் .. கண்டிப்போடு

நான் இன்று பட்டம் பெறப்போகிறேன்,
சாதித்துவிட்டாய் என்கிறார்கள் என்
ஆசிரியர்களும், நண்பர்களும்..

எப்படி புரிய வைப்பேன் அவர்களுக்கு
சாதித்தது நான் இல்லை என்பதையும்

இந்த பட்டம் பெற
எனக்கு தகுதி இல்லை என்பதையும்..


புற்றுநோயை உன் புன்னகையால்
மறைத்த நீ...

இப்போதும் அதே
புன்னகையுடன் என் பூஜையறையில்

புகைப்படமாய் .......

13 comments:

cheena (சீனா) said...

அன்பின் வெறும்பய

அன்னையின் நினைவு - நல்லதொரு மகனைப் பெற்ற நல்லதொரு தாய்.

அவர் உன்னுடன் கூட எப்பொழுதும் இருப்பார் - உன் நலம் பேண !

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிக்க நன்றி சகோதரா..

வால்பையன் said...

மனிதனின் கர்ப்பக்காலம் 280 நாட்கள் தான் தோழர்!

சும்மா ஒரு கணக்குக்கு தான் பத்துமாதம்!

கவிதை நல்லாயிருக்கு!

ஜீவன்பென்னி said...

காலத்துக்கும் அழியாத நினைவுகள அழக எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

புற்றுநோயை உன் புன்னகையால்
மறைத்த நீ...

இப்போதும் அதே
புன்னகையுடன் என் பூஜையறையில்//
சோகமான முடிவு

செல்வா said...

///
நான் தேவை என்பதை எல்லாம்
நீ வாங்கி தந்ததில்லை, ஆனால் என்
தேவை அறிந்து வாங்கித்தந்தாய்...///

அருமைங்க..!

//
புற்றுநோயை உன் புன்னகையால்
மறைத்த நீ...
இப்போதும் அதே
புன்னகையுடன் என் பூஜையறையில் ///

சிலிர்க்குதுங்க .. மனம் லேசாக வலிக்கிறது ... கண்களில் கண்ணீர் ..!!!

Admin said...

அழகான வரிகள். தாயின் பெருமை சொல்ல வார்த்தைகள் போதாது... ஒவ்வொருவரது முன்னேற்றத்திலும் தாயின் பங்கு மிகப் பெரியது.

ஆர்வா said...

அழ வைக்காதீங்க சார்......

Ahamed irshad said...

கவிதை உணர்ச்சி நண்பா..

முனியாண்டி பெ. said...

என்னை மிகவும் நெகிழவைத்தது. என் தாயை கண்முன் கொண்டுவந்தது கவிதையின் வெற்றி.

பனித்துளி சங்கர் said...

////////நீ அழுது பார்த்ததில்லை ஆனாலும்
கண்ணீர் கண்டிருக்கிறேன், நான் அழும் போது
உன் கண்களில்...
/////////


எவளவு விலை கொடுத்தாலும் வாங்க இயலாத ஒரு பொக்கிஷம்தான் தாய் . மிகவும் உணர்வுபூர்வமாக உணர்ந்து எழுதி இருகிறிர்கள் என்பது உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது . மிகவும் அருமை பகிர்வுக்கு நன்றி

ஜில்தண்ணி said...

கடைசி வரிகள் படிக்க இயலவில்லை

வலிதான் மிச்சம்

ஆழ்மனதிலிருந்து வந்த வார்த்தைகள்

எவனோ ஒருவன் said...

அழ வச்சுட்டீங்க அண்ணா....