R-I-P - மழையாலானவை



இரவை எப்படியாவது துரத்திவிடலாம் என்ற முனைப்புடன் கருமையை துளைத்துக் கொண்டு மண் நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றன மழை எனும் மகா அஸ்திரங்கள், தூறலாய் ஆரம்பித்த பொழுதில் ஆனத்தமாய் மண் வீசிய வாசனைகளை முகர்ந்து, அப்போதையில் பெய்யான பெய்து அம்மண் மீதே புரண்டோடிக்கொண்டிருக்கிறது பெருமழையொன்று..

துளியாய் துவங்கி தூறலாய் முடிந்தாலும், தூறலாய் ஆரம்பித்து பேயாட்டம் ஆடி ஓய்ந்தாலும், தட்டி எழுப்பும் மண் வாசனையோடு அடி மனதில் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் நினைவுக்குப்பைகளையும் மனக்காற்றில் வீசியடித்துவிட்டு செல்ல மறப்பத்தில்லை இந்த மழையெனும் மாயக்காரி.

வார்த்தைப் புழுதிகள் போக்கிடம் அறியாமல் மனக்காற்றில் சுற்றியலையும் வேளைகளில் தான், நான் வேறுவழியின்றி அவற்றை காகிதங்களிலோ, கணிணிகளிலோ கவிதைகள் என்ற பெயரில் சேகரிக்கத் துவங்குகிறேன். எத்தனை சிரத்தையுடன் அவ்வார்த்தைப் புழுதிகளை சேகரித்தாலும் அறிந்தோ அறியாமலோ சில வார்த்தைகளை எப்போதும் தவறவிட்டு விடுகிறேன்.

நான் இக்கணமும் அந்த வார்த்தைப் புளுதிகளைத்தான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன், வழக்கம் போலவே சிலவற்றை தவரவிட்டுக்கொண்டே.ஆகையால் இன்றும் கை, கால் இழந்து ஊனமுற்ற கவிதைகள் பிறக்கலாம். எல்லாம் சரியாய் அமைந்து ஆரோக்கியமாய் பிறக்கும் கவிதைகளுக்கே இங்கே வாழ வழியில்லை என்பதால் என் ஊனக்கவிதைகளை கருணைக்கொலை செய்துவிடலாம் என்றிருக்கிறேன். அது உங்கள் பார்வையில் கொலையாகப்படினும் எனக்கதில் ஆட்சேபனைமொன்றுமில்லை.

பெரும்பாலும் இதனை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில் என் ஊனக்கவிதைகள் உயிரற்று சடலமாகியிருக்கலாம், ஆகையால் இப்போது நீங்கள் உங்களை கண்களை மூடி என் கவிதைகளுக்காக சில நொடிகளாவது அஞ்சலி செலுத்திவிடுங்கள்.

இனிவரும் ஏதேனும் மழைநாட்களில் என்றேனும் என் ஊனக்கவிதைகள் உங்கள் மனக்கதவுகளை தட்டினால் பதற்றத்துடன் என்னைத்தேடியலைந்து உங்கள் நேரத்தை விரயமாக்காமல் அவற்றை கொன்று புதைத்துவிட்டு எனக்கு சொல்லியனுப்புங்கள், நான் இங்கிருந்தபடியே அஞ்சலி செலுத்துகிறேன் என் மழைக்கவிதைகளுக்கு...

ஆமென் :(.




படம் : இணையத்திலிருந்து

பெருமழைக்காலம் - மழையாலானவை




து
ளி
து
ளியாய்
தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்த
மழையை
ரசித்துக்கொண்டிருந்தவள்,
பொறுமையிழந்து 
மெதுவாய் சாரளம் திறந்து
கைநீட்டி துளி தொட ஆரம்பித்த,
அடுத்த கணத்தில்
அதற்க்காகவே காத்திருந்தது போலவே
பெய்யெனப் பெய்யத் துவங்குகிறது
பெருமழையொன்று...

படம் : இணையத்திலிருந்து

பால்யகால கிரிக்கெட்


உங்களுக்கு எப்படியென்று தெரியவில்லை,  இது வரையில் நான் பார்த்த எந்த திரைப்படமும் என்னில எந்த மாற்றத்தையும் உருவாக்கியதில்லை இனி மேல் உருவாக்கப்போவதுமில்லை. திரைப்படங்கள் என்னைப் பொறுத்தவரையில் பொழுதுபோக்கிற்கான ஒரு அம்சமே தவிர வேறொன்றுமில்லை.மாறாக பல படங்கள் மனதில் அடி ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் நினைவுக்குப்பைகளை கிளறி விட்டு செல்வதுண்டு. சில காதல் படங்கள் மற்றும் பள்ளி கல்லூரி சம்மந்தப்பட்ட படங்கள் நம் மனதை விட்டு அகன்று விடுவதில்லை, அதற்கு பள்ளி கல்லூரிகளில் நாம் செய்த சேட்டைகளையும், காதலால் நாம் அனுபவித்த இன்ப துன்பங்களையும் பிரதிபலிப்பதும் தான் காரணமாக இருக்கும். இவ்வாறு நம்மை கவரும் சில படங்களை பார்க்கும் போது ஐயோ இந்த வாழ்வை தவற விட்டு விட்டோமே என்று வருத்தப்பட  வைப்பதுண்டு, பல படங்கள் நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டுமொருமுறை செல்ல மாட்டோமா என்று எங்க வைக்கவும் செய்யும். அவ்வாறு மனதின் நினைவுக்குப்பைளை கிளறிவிட்டு மீண்டுமொருமுறை வந்து செல்லாதா  அது போன்றொரு பொற்காலம் என்று தோன்ற வைத்தாது சமீபத்தில் பார்த்த 1983 என்ற மலையாள படம். 


கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 1983 படம். கிரிக்கெட் மீதுள்ள  ஆர்வத்தால் தன படிப்பு, காதல் என  எல்லாவற்றையும் தொலைத்தவன் தன மகன் மூலம் கனவுகளை நனவாக்க முயற்சிப்பது போன்று வடிவமைக்கப்பட்ட படம். சொல்ல வந்த விசயங்களை தெளிவாக ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிவிட்டு கூடவே நம்மையும் கடந்த காலத்திற்குள் நாமறியாமல் நகர்த்திவிட்டு சென்று விடுகிறார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் பாத்திர தேர்வுகள். படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் நீங்கள்  சந்தித்திருக்கலாம்  ஒரு காலத்தில நீங்களும் ஒரு கிரிக்கெட் பைத்தியமாக கிரிக்கெட் பேட்டும் சைக்கிளுமாக சுற்றி திரிந்தவர்களாக இருந்திருந்தால்.

 
நாங்கள் 96 களில் தென்னை மட்டை மற்றும் பிளாஸ்டிக் பந்துகள் வைத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் அல்லது மரத்தில ஸ்டம்ப்ஸ் வரைந்து ஆரம்பித்த கிரிக்கெட்  எங்கள் வீட்டு முற்றங்களை  தாண்டியதில்லை. இன்று நம்மை ஆக்கிரமித்திருக்கும் அதிநவீன பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சமே இருக்காது. விடுமுறை நாட்கள் என்றால்  நாங்களே ராஜாக்கள் நாங்களே மந்திரிகள், 98-களின் துவக்கத்தில் தான் நாங்கள் முற்றைத்தை விட்டு காலியிடங்கள் தேடி புறப்பட ஆரம்பித்தோம். இந்த காலகட்டத்தில் தான் அதுவரை பாடங்களில் அண்டை நாடாக நாங்கள் அறிந்திருந்த பாகிஸ்தான் எங்களுக்கும் எதிரி நாடாக மாற்றியது.   

எங்கு நோக்கினும் பச்சை பசேலென மரங்கள் படர்ந்திருக்கும் எங்கள்  ஊரில் விளையாடுவதற்கு ஏற்ற காலியிடங்களை தேடிப்பிடிப்பதென்பது சாதாரண விஷயமில்லை. ஒரு பிட்ச் வைக்குமளவிற்கு இடம் கிடைத்தாலே அந்த இடத்தில் கூடாரம் அமைத்து விடுவோம். ஆள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் சிறிய இடங்கள் வசப்பட்டாலும்   ஒன்  பிச் கேட்ச், சிக்ஸ் அடித்தால் அவுட் என்று இட வசதிக்கேற்ப விளையாட்டை வடிவமைப்போம். விடுமுறை நாட்களில் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும், நேரமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற சிறிய இடங்களை காலி செய்து வேறு இடம் தேட ஆரம்பித்து விடுவோம்.வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் போர்க்களமும் அதற்க்கு தகுந்தாற்போல இருந்தால் தானே நன்றாக இருக்கும். 


 
இந்த இடம் தான்  என்று இல்லாமல் வயல், வற்றிப்போன குளம், தென்னந்தோப்புகள், கோவில் மைதானங்கள், மயான பூமிகள்  என எல்லா இடங்களிலும் எங்கள் ராஜ்ஜியம் நடக்கும். பெரும்பாலும் நாங்கள் விரும்பி தேர்ந்தெடுப்பது எளிதில் யாரும் சொந்தம் கொண்டாட வராத வகையில் ஏதாவது பிரச்னையால் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டிருக்கும் நிலங்ககளாகத் தான் இருக்கும். யாருடனாவது பெட்டிங் மேட்ச் என்றால் அது எங்கள் ஊர் பள்ளி மைதானத்தில் தான் நடக்கும்,  சில சமயம் யார் எந்த டீம், யார் அடித்த பந்து வருகிறது என்று கூட தெரியாத அளவிற்கு ஒரே நேரத்தில் நான்கைந்து மெட்ச்களும் நடக்கும்.
 
ஊரில் தென்னை மரங்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ஆரம்ப காலத்தில் தென்னை மட்டையில் செதுக்கப்பட்ட பேட்களுக்கு பஞ்சமிருக்காது. பிளாஸ்டிக் பந்துகளிலிருந்து ரப்பர் பந்துகளுக்கு மாறும் போது தான் தென்னைமட்டை பேட்களின் பலவீனம் புரிந்து  மெதுவாக மரப்பலகைகளை தேடியெடுத்து அவற்றை செதுக்கி விளையாட ஆரம்பித்தோம்.  பின்னர்  சிறுக சிறுக பணம் சேர்த்து எங்கள் டீமுக்கென ! ஒரு நல்ல  பேட் வாங்கினோம்.

 
அந்த காலத்தில் நாங்கள் மிகவும் மெனக்கெடவும் கவலை கொள்ளவும் வேண்டியிருந்தது பந்துகளுக்காக தான். மற்ற அணிகளுடன் போட்டியிடும் போதும் எங்களுக்கு பந்தையப்பொருளும் பெரும்பாலும் பந்தாகத தானிருக்கும். பந்து வாங்குவதற்கென்றே வசூல் வேட்டைகள் நடக்கும், பந்துகளின் விலை 7 ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்குள் தான் இருக்குமென்பதால்   ஆள் ஒன்றிக்கு 50 காசு அல்லது ஒரு ரூபாய் தான் அதிகபட்சமாக இருக்கும். (இப்போது வழக்கொழிந்துவிட்ட 50 காசெல்லாம்  அப்போ  எங்களுக்கு பெரிய காசுப்பா)   இதற்க்கு காசு தராதவர்களை காசு தரும் வரையில் டீமில் சேர்க்க கூடாதென்று சட்டமும் இருந்தது. பந்து வாங்கும் போது எங்களின் விருப்பத்தேர்வு "stumper" பந்துகளாகத் தானிருக்கும்.  மற்ற பந்துகளை  இவையே கொஞ்சம் அதிகம் தாக்குபிடிக்க கூடியவை.  இப்படி இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன சொல்வதற்கு.

படாத இடத்தில் பட்டு ஹாஸ்பிட்டல் போய் அங்கு இருந்த லேடி டாக்டடிடம் என்ன சொல்வதென்று புரியாமல் முழித்த நாட்கள், காரணமேயில்லாமல் உருவாகும் சண்டைகள் , கிரிக்கெட்டால் ஊர் தாண்டியும் கிடைத்த நண்பர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் ஊர் சுற்றுவதற்கு எங்களுக்கு இருந்த சுதந்திரம், எங்களை சுமந்து திரிந்த சைக்கிள்கள், அவுட் ஆனாலும் இல்லையென்று சிறுபிள்ளைகள் போல சாதிக்கும் பெருசுகள், செவனேன்னு ஓரமா போகிறவர்கள் மீது பந்தடித்து விட்டு திட்டுகள் வாங்கியது, உடைத்த வீட்டுக்கூரை ஓடுகள் மற்றும் பல்புகள், தோப்புகளில் விளையாடும் பொது யாருமறியாமல் காணாமல் போகும் இளநீர் குலைகள், ஆசை ஆசையாய் வாங்கிய பேட், பரிட்சை நேரங்களில் விளையாட விதிக்கப்படும் தடைகள், அதையும் மீறி விளையாடப்போனதால் வெட்டி சின்னாபின்னமாக்கப்பட்ட பேட்,  கிரிக்கெட் வீரர்களின் விவரங்களை அச்சடித்து வரும் அட்டைகளை சேகரிப்பதற்காகவே வாங்கப்படும் "Big Fun" bubble gums, செய்திதாள்களில் வரும் கிரிக்கெட் வீரர்களின் படத்தை நோட்டுபுத்தகங்களில் ஒட்டியதால் பள்ளியில் ஆசிரியரிடமிருந்து வாங்கி கட்டிக்கொண்டவை, மழைக்காலங்களில் வயலில் முட்டியளவு தண்ணீரில் விளையாடும் கிரிக்கெட், நடுரோட்டில் விளையாடி ஊர்வம்பை விலைக்கு வாங்குவது...... என்று  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கிரிக்கெட் பற்றிய நினைவுகளை.
 

இன்று களமிறங்கி கிரிக்கெட் விளையாடுபவர்களை விட, மொபைலில் விரல் வித்தை காட்டி கிரிக்கெட் விளையாடுபவர்களும், டிவிக்கு முன்னால் அமர்ந்து நொறுக்குத்தீனியையும்  வைத்துக் கொண்டு என்னய்யா இது இவனுக்கு அடிக்கவே தெரியல அங்கே  அடிக்க வேண்டிய பந்தை இங்கே அடிக்கிறான் பாரு, அந்த பந்தை இப்படி திருப்பி விட்டிருக்கலாம், இந்த கேட்சை ரெண்டடி முன்னால்  போய்  நாலடி அந்தரத்தில் பறந்து பிடித்திருக்கலாம் என்று வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் பிதாமகர்களே அதிகமாக உள்ளனர்.
 
கிரிக்கெட்  எங்கள் பால்ய காலத்தை ஆக்கிரமித்திருந்தது, நாங்கள் கிரிக்கெட்டை காதலித்தோம்.
 
 


கிழிக்கப்பட்ட பக்கங்கள் - என் டைரியிலிருந்து



 April-02-2011
எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் உன்னை மட்டுமே நினைக்க வைத்து நீ என்னை ம(று)றந்து போன பின்னரும் என் உடம்பிலுள்ள எண்ணிலடங்கா செல்களில் ஓரிரு செல்களிலாவது உந்தன் நினைவுகள் நிழல் போல ஒட்டியிருப்பதால் உன்னை ஒரேடியாக ஒதுக்கித்தள்ள முடியாமலும், அதே சமயம் ஒட்டி உறவாடவும் முடியாமல் என் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் இங்கே ஒரு ஓரமாக கொட்டி வைக்கிறேன்.  என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில்....

உனக்காக கடிதம் எழுதும் முயற்ச்சியில்  வெற்றுக் காகிதங்களுடன் போட்டியிட்டு ஒரு புள்ளி கூட வைக்காமல் தோல்வியுடனே திரும்பத் துவங்கி நாட்கள் நூறு தன்னை மாய்த்துக் கொண்டு விட்டன. எனக்கு எழுத கற்றுக்கொடுத்தவள் நீ, உன்னை பற்றி எழுதுவதென்றால் எப்போதும் போல ஏதாவது சும்மா கிறுக்கி வைத்து விட முடியுமா என்ன !!!

உனக்கும் எனக்குமான அறிமுகத்தை நான் இங்கே சொல்லி தான் நீ அறிய வேண்டுமென்றில்லை. உன்னை காதலிக்க வழியில்லாமல் போனதால் உன்னை எனக்கு அறிமுகம் செய்த எழுத்துக்களை காதலிக்க கற்றுக்கொண்டுவிட்டேன். அவற்றை நான் வெறுத்தொதுக்கினாலன்று என்னை தனிமையில்  விட்டு சென்று விடாது.  இப்போதெல்லாம் என்னுடன் நீயில்லாத குறையை இவ்வெழுத்துக்கள் தான் ஓரந்தள்ளி ஒழித்து வைக்கின்றன. ஆனாலும் நான் உன்னை நினைப்பதற்கு மறப்பதில்லை.

மறந்தால் தானே உன்னை நினைப்பதற்கு நான் செய்யும் ஒவ்வொரு செயல்கும் உன்னை தான் நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. இப்போது என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவை தான். ஒவ்வொன்றும் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டது தான். உனக்கு தெரியுமா என்று தெரியவில்லை. வீட்டில் நான் இப்போது  மிகவும் நல்ல பிள்ளையாகிவிட்டேன்.  என்னில் நிறைய மாற்றம் இருக்கிறது என்கிறார்கள், பெரியவர்களை மதித்து நடந்து கொள்கிறேனாம்யாரிடமும் எதிர்த்து பேசுவதில்லையாம், வீட்டு நிர்வாகங்களை கூட நான் நன்றாக பார்த்து கொள்கிறேனாம், என்னை மெச்சுகிறார்கள் பெற்றோர்கள். அவர்கள் இதை சொல்லும் போதெல்லாம் என்னிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே வெளிப்படுகிறது.  கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளால் வடிவமைத்து என்னுள் பல மாற்றங்கள் செய்த உனக்கல்லவா இந்த பாராட்டுகள் சேர வேண்டும். 

ஒரு தாயின் பொறுமை உனக்கு. இல்லையென்றால் யாருக்குமே உதவாமல் இருந்த இந்த களிமண்ணை பக்குவமாய் பிடித்து ஒரு சிலையாக்கியிருக்க முடியமா..  இந்த களிமண்ணிலும் காதல் கனியச் செய்தவள் நீ. கவிதைகள் கற்று தந்தாய். கவிதையினூடே காதலிக்கவும் கற்று தந்தாய்.

நீ என்னிடம்  காதலை கூறிய நாள் உனக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது. இந்த சொல்லை கேட்ப்பதற்க்காகத் தானா நான் பிறந்தேன் என்று நினைத்து கொண்ட அக்கணம் என்னுடல் இவ்வுலகம் விட்டு பிரியும் வரை மறவாது கண்மணி. ஈரம் வேண்டி வெகுநாள் காத்திருந்த மண் பெய்யும் மழைத்துளிகளை உள்வாங்கிக்கொள்வது போல உன் வாயிலிருந்து உதிர்ந்த அந்த வார்த்தைகளை உள்வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொன்டது உன்னைத்தவிர எவரும் நுழைய முடியாத என் இதயக் கருவறை.

ஒவ்வொரு ஆணும் காதலிடமும் காதலியிடமும் கோழைகள் தான் என்பதை அக்கணம் நானறிந்து கொண்டேன். என்றேனும் உள்ளத்தில் உள்ளதை உள்ள படி சொல்வாயா என்று ஏங்கியிருந்த நாட்களில் எல்லாம் என்னை மெலும் ஏங்க வைத்தாய், ஒரு வழியாய் தைரியத்தை தத்தெடுத்து உன்னிடம்  இன்று சொல்லியே ஆக வேன்டும் என்று வந்த நாளில் என்னையும் முந்திக்கொன்டு நீ காதலை முன் மொழிந்த  அந்த கணத்தில் என் இதயத்துடிப்பின் வேகத்தையும், நான் சொல்ல வந்ததை நீ சொல்லிவிட்டபடியால் என்ன சொல்வதென்று அறியாமல் தடுமாறிப் போய் குளறியபடி வார்த்தைகளை மறந்த என் நாவையும் இன்று நினைத்தாலும் மனதிற்க்குள் எதோ இனம் புரியாத உணர்வு ஒன்று என்னை உருக்குலைக்கிறது.  

அந்நாள் வரை காதல் கவிதைகள் கண்டால் "இதை எழுதியவன் நிச்சயமாக ஒரு பைத்தியமாகத் தானிருப்பான் என்று சொல்லி வந்த என்னுள்ளம் கவிதைக்காக வையகமெங்கும் வார்த்தைகளை தேடியலைந்து சேகரிக்கத் துவங்கியதையும் நான் உண்ர்தேன். சில நாட்களில் உனக்கான கவிதைகளுக்கு தமிழில் வார்த்தைகள் போதாது என்பதையும் தெரிந்து கொன்டேன். ஒருவனை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது காதல்.
ஆணை பெண்ணாக்கும் வித்தை காதலுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறென். ஆம்.. பல தடவை காதல் முன்னும் அவள் கண்கள் முன்னும் நான் ஒரு ஆண் என்பதை மறந்திருக்கிறேன். ஆண்மைக்குள்ளும் அச்சம் மடம், நாணம் என எல்லா குணங்களும்    ஒருவருமறியாமல் ஏன் நானே கூட அறியாமல் ஒளிந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன். ஆனால் அது நான் உன் கண்பார்த்து பேசும் தருணங்களில் மட்டும் தான் தலைகாட்டி என்னை தடுமாற வைக்கிறது.  

பள்ளிக்கு முன்னும், கோவில் வாசலிலும், காலேஜ் பஸ் ஸ்டாப்களிலும் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாய் நிற்ப்பது காதல் எனும் பேய் பிடித்து பிசாசுகளுக்காக காத்திருக்கும் பெண் பித்தர்களாக தான் இருக்கும் என்று நண்பர்களிடம் சொல்லி சிரிக்கும் போது எனக்கு தெரிந்திருக்கவில்லை இப்படி உனக்காக நானும் ஒரு நாள் கோவில் வாசலிலும், பஸ் ஸ்டாப்பிலும் உனக்காக காத்திருக்க போகிறேன் என்று. ஆனால் நான் ஒரு பிசாசுக்காக காத்திருக்கவில்லை, தேவதைகளும் பொறாமை கொள்ளுமளவு அழகுடைய தேவதைக்காக காத்திருந்தேன், ஒரு பெண் பித்தனாக காத்திருக்கவில்லை. ஒற்றை பார்வையில் சித்தம் கலங்க செய்து இனி என் வாழ்வின் மொத்தமும் அவள் தான் என்று நினைக்க வைத்த என் தேவைதையின் ஒரு பக்தனாக காத்திருந்தேன். 

அரை மணி நேரம் தாமதனாய் வந்த நண்பன் அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லியும் சமாதானமாகாமல் கோபித்துக்கொண்ட நான், காலையில் வருவாய் என்று உனக்காக காத்திருந்த ஒரு நாள் அரை நாள் தாமதமாய் வந்த உன்னிடம் அதிர்ந்து கூட பேசாமல் அடங்கிப்போனதன் அர்த்தம் தான் காதல் என்று அழகாக அழுத்தி சொன்னது என்னுள்ளம்.

உன் வருகைக்காக நான் காத்திருக்கும் தருணங்களில் என்னை பற்றிக்கொள்ளும் தனிமையை துரத்திவிட்டு உன் நினைவுகள் வந்து ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக்கொண்ட நினைவுகள் ஒரு ஓரமாய் ஒதுங்கி நிற்காமல் என்னுள் நான் ஒழித்து வைத்திருக்கும் வார்த்தைகளை ஓன்று சேர்த்து உன்னை பற்றி எழுதத் துவங்கும். உன்னை பற்றி என்ன எழுதினாலும் அவை கவிதையாகவே உருமாறிவிடுகின்றன.



"காத்திருப்புகள் வலியைத்தான் தருமாம், 
உனக்கான காத்திருப்புகளனைத்தும்  
எனக்கு 
கவிதைகளை மட்டுமே தருகின்றன".


என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...


கவிதை தேவதைக்கானது..




நேற்றைய பொழுதில் எழுதி முடித்த கவிதையை செப்பனிட நேரம் கொஞ்சமதிகமானதால் நள்ளிரவு தாண்டி நித்திரைதேவியின் மடியில் முகம் புதைத்து கனவில் காலடியெடுத்து வைத்த அடுத்த கணத்தில் ஏனித்தனை தாமதமென்று கண்களில் கோபம் கொப்பளிக்க என் முன்னால் வந்து குதித்தாள் என் கனவு தேவதை,

கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த பின்னரும் சினம் தணியா தேவதையின் கண்களின் கருவிழி நிறமும், கடைவாய்ப்பற்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறுவதை கவனித்தேன், இன்னும் தாமதமானால் தேவதையவள் ரட்ஷஸாக உருமாறி விடுவாள் என்பது ஏற்கனவே நானறிந்த விசயமானதால் தாமதிக்காமல் என் வலக்கரம் கொண்டு சிரம் பற்றி, இடக்கரம் கொண்டு இடை பற்றி அவளிதழொற்றி உயிருஞ்ச, ரட்ஷஸ் காணமல் போக தேவதையானவள் வெட்கமுடுத்தி விலகி நின்றாள் கனவுகலத்தையும் மறந்து,

தேவதை  தேவதையாகத்தான் இருக்கிறாள் என்று உறுதியானப்பின் உனக்காய் கவிதையொன்றை எழுதி எடுத்து வைத்திருக்கிறேனென்றேன், மெல்லிடை அசைத்து கவிதையாய் நடந்து என்னருகில் வந்து என் கிறுக்கலை (அவள் முன் அவளைத்தவிர வேறேதும் கவிதையென கொள்ளப்படாது) கையிலேந்தி, என் கண்களுக்கு முன் அவள் வேல்விழிகளை நிறுத்தி "பொழுது புலர இன்னும் ஒரு நாழிகையே இருக்கிறது நானிப்போது செல்கிறேன் நாளைய கனவில் உனக்கான கவிதையுடன் மீண்டும் வருகிறேன் என்று கூறி என் நெற்றியில் முத்தம் பதித்த அடுத்த கணம் என் காது கிழித்த அலறல சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன் நான், எமனாய் என்னருகில் அலாரம் என்ற பெயரில் அலறிக்கொண்டிருந்தது என் அலைபேசி.

இன்றும்  வரலாம் என் தேவதை எனது அல்லது எனக்கான கவிதையுடன்.. 


# படம் இணையத்திலிருந்து