கவிதை தேவதைக்கானது..
நேற்றைய பொழுதில் எழுதி முடித்த கவிதையை செப்பனிட நேரம் கொஞ்சமதிகமானதால் நள்ளிரவு தாண்டி நித்திரைதேவியின் மடியில் முகம் புதைத்து கனவில் காலடியெடுத்து வைத்த அடுத்த கணத்தில் ஏனித்தனை தாமதமென்று கண்களில் கோபம் கொப்பளிக்க என் முன்னால் வந்து குதித்தாள் என் கனவு தேவதை,

கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த பின்னரும் சினம் தணியா தேவதையின் கண்களின் கருவிழி நிறமும், கடைவாய்ப்பற்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறுவதை கவனித்தேன், இன்னும் தாமதமானால் தேவதையவள் ரட்ஷஸாக உருமாறி விடுவாள் என்பது ஏற்கனவே நானறிந்த விசயமானதால் தாமதிக்காமல் என் வலக்கரம் கொண்டு சிரம் பற்றி, இடக்கரம் கொண்டு இடை பற்றி அவளிதழொற்றி உயிருஞ்ச, ரட்ஷஸ் காணமல் போக தேவதையானவள் வெட்கமுடுத்தி விலகி நின்றாள் கனவுகலத்தையும் மறந்து,

தேவதை  தேவதையாகத்தான் இருக்கிறாள் என்று உறுதியானப்பின் உனக்காய் கவிதையொன்றை எழுதி எடுத்து வைத்திருக்கிறேனென்றேன், மெல்லிடை அசைத்து கவிதையாய் நடந்து என்னருகில் வந்து என் கிறுக்கலை (அவள் முன் அவளைத்தவிர வேறேதும் கவிதையென கொள்ளப்படாது) கையிலேந்தி, என் கண்களுக்கு முன் அவள் வேல்விழிகளை நிறுத்தி "பொழுது புலர இன்னும் ஒரு நாழிகையே இருக்கிறது நானிப்போது செல்கிறேன் நாளைய கனவில் உனக்கான கவிதையுடன் மீண்டும் வருகிறேன் என்று கூறி என் நெற்றியில் முத்தம் பதித்த அடுத்த கணம் என் காது கிழித்த அலறல சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன் நான், எமனாய் என்னருகில் அலாரம் என்ற பெயரில் அலறிக்கொண்டிருந்தது என் அலைபேசி.

இன்றும்  வரலாம் என் தேவதை எனது அல்லது எனக்கான கவிதையுடன்.. 


# படம் இணையத்திலிருந்து