தொலைத்தும் தொலையா "இரவு"

April-02-2015


எல்லா இரவுகளைப்போலவும் இவ்விரவை என்னால் எளிதில் கடந்துவிட முடியுமென்று தோன்றவில்லை. கடந்த நான்கு வருடங்களாக உறக்கம் தொலைத்த இரவாகவே இருந்து வரும் இவ்விரவு இனியுள்ள காலங்களும் அவ்வாறே தொடரலாம். 

வருடந்தோறும் முயற்சிக்கிறேன்  எங்கனமேனும் இவ்விரவின் கருமையில் அவ்விரவு  நினைவுகளின் கரம் பற்றாமல் கடந்துவிட வேண்டுமென்று,

அவளெழுதிய கவிதைகளோ, அவளால் நான் எழுதிய கிறுக்கல்களோ எப்படியாவது கண்ணில் பட்டு விரதம் கலைத்து விடுகின்றன.

வெறும் கரும்போர்வையுடுத்திய  இவ்விரவைப்பற்றி  எழுதவோ சிலாகிக்கவோ என்ன  இருக்கிறதென்று பலமுறை யோசித்ததுண்டு அவ்விரவை நான் நானல்லாது கடக்கும் வரை

இரவு என்பது தொடக்கம் 
இரவு என்பது முடிவிலி
இரவு என்பது தொடர்ச்சி
இரவு என்பது துன்பம்  
இரவு என்பது இன்பம் 
இரவு என்பது இழப்பு
இரவு என்பது கொலைக்களம்
இரவு என்பது காமக்காடு 
இரவு என்பது காதல்
இரவு என்பது நல்ல ஆசான் 
இரவு என்பது வலி
இரவு என்பது துரோகம்

என்னை முதன்முதலில் தற்க்கொலைக்கு தூண்டியதும், 
என் முகம் தாடிக்கு பொருத்தமாக ஆரம்பித்ததும் 
காதலை தொலத்ததும் 
காதல் களைந்து எழுத ஆரம்பித்ததும் 
கடைசிக்கவிதைகள் ஆரம்பமானதும் 
கடைசியாய் சிரித்ததும் 
கண்ணீர் ஒழித்து வைத்து அழுததும்

என்று இரவு என்னில் எல்லாமுமாய் நின்றது அவ்விரவிலிருந்து தான். 

இவ்வொரிரவை கடப்பதென்பது எனக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல, நாட்களைக் கொன்று  தின்றபடி வருடங்கள் பல நகர்ந்தாலும் வருடந்தோறும் இவ்விரவின் மூர்க்க குணம் மட்டும் மாறாமல் அப்படியே இருப்பது தான் கொஞ்சம் கலக்கமூட்டுகிறது.

இன்னுமென்ன இருக்கிறது இவ்விரவைப்பற்றியெழுத, இதற்கு மேலும் இதனைத்தொடர்ந்தால் தற்கொலை எண்ணத்தை  தூசு தட்ட வேண்டுமென்பதைத் தவிர....