நீ அல்லாத நீ !

ரயில் ஜன்னலோர இருக்கையிலிருந்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்

பஸ்ஸில் நடத்துனரிடம்
மீதி ஐம்பது காசுக்காக சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
பெண்

காதில் ஹெட்செட் பொருத்தி
பாடல் வெளியில் கேட்குமளவிற்கு சத்தம் வைத்து ரசித்துக் கேட்கும்
பெண்

தியேட்டரில் தனக்கு பிடித்த நடிகனை
சிறப்பு தோற்றத்தில் பார்த்ததும்
பரவசத்தில் விசிலடிக்கும்
பெண்

நேரமாகிவிட்டதென காலையுணவு சரியாக உண்ணாமல்
அம்மாவிடமிருந்து திட்டு வாங்கிக்கொண்டே
வீட்டிலிருந்து வெளியிலிறங்கும்
பெண்

பள்ளி செல்லும் வாய்பேசா சிறுகுழந்தைக்கு
தினமும் மறவாமல் ஒரு சாக்லெட்டும்
கூடவே மறவாமல் ஒரு முத்தமும் பரிமாறும்
பெண்

போக்குவரத்து நெரிசலில்
தன் ஸ்கூட்டியை முன்னால் நின்ற வண்டியில்
உரசிவிட்டு மன்னிப்பு கேட்கும்
பெண்

அலைகள் துரத்தியும்
அலைகளை துரத்தியும் விளையாடும்
பெண்

பூங்காவில் ஊஞ்சலை கண்டவுடன்
தன் வயது மறந்து சிறுமியாகும்
பெண்

என
எல்லா நாளும்
எல்லா இடத்தும்
யாராவது ஞாபகப்படுத்திக் கொண்டேதானிருக்கிறார்கள்
நீயல்லாத உன்னை.

0 comments: