நிர்வாண நிலவு..

நிர்வாணமாய் நிலவு..
வெட்கமில்லாமல் ரசிக்கிறோம்
நீயும்..
நானும்...





மன்னாதி மன்னன் - தொடரும் தொடர்பதிவு..

மன்னாதி மன்னன் தொடர்பதிவிற்கு ஆதரவு தந்த நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

ஒரு மன்னனுடைய வரலாற்றை பற்றி படிக்கும் போது அம்மன்னனுடைய வீரத்தையும், அவனுடைய வாழ்க்கை முறையும் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, அந்நாட்டின் அந்த காலகட்டத்தின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, கட்டிடக்கலை, உடையமைப்பு, கல்வித்திறமை, ஆயுதங்கள், ஆபரணங்கள், போர் முறைகள் என பலதரப்பட்ட விசயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது..

பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ஒரு காலத்தில் மாணவ மாணவியர் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டனர் .. ஆனால் இன்று வரலாறு என்ற சொல் மட்டும் தான் வழக்கிலிருப்பதாக கருதுகிறேன்..(தமிழின் நிலை பற்றி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை).. என் பள்ளிப்பருவத்தில் வரலாறு பிரிவில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவே... அந்த மாணவர்களில் பலரும் குறைவான மதிப்பெண் பெற்றதாலும், வேறு பிரிவுகளில் சேர அனுமதி கிடைக்காததாலும் வரலாற்று பிரிவில் சேர்ந்தவர்கள்.. இது எட்டு வருடங்களுக்கு முன்புள்ள நிலையென்றால், இன்றைய நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

கல்லூரிகளில் வரலாறுகள் படும் பாடு பற்றி எனக்கு தெரியவில்லை.. ஆனால் என் நண்பர்களோ, எனக்கு தெரிந்தவர்களோ வரலாறு பாடம் எடுத்து படித்த ஞாபகமும் இல்லை... இப்போது படிப்பதாகவும் தெரியவில்லை.. இதற்கு நேர்மாறாக தொலை தூரக் கல்வியில் வரலாறு படிக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.. இவர்கள் படிப்பது வரலாறுகள் தெரிய வேண்டுமென்பதற்காக அல்ல...எப்படியாவது ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்று தான்...

நம்மை இணைக்கும் இந்த வலையுலகில் உள்ள நண்பர்கள், சகோதரிகள், சகோதரர்கள் என பெரும்பாலானோர் அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் கணினி போன்ற பலதரப்பட்ட துறைகளிருந்து தான் இருக்கிறார்களே தவிர வரலாறு படித்தவர்களோ, வரலாற்று துறை சம்மந்தப்பட்டவர்களோ மிகவும் குறைவு..(எனக்கு தெரிந்து என்னை தெரிந்தவர்கள் யாருமில்லை).. இன்றே இப்படியென்றால் நாளைய நிலை..???

சகலமும் கணினிமயமாக்கப்பட்ட இந்த உலகில் நமக்கு அடுத்த தலைமுறைகள் யாரும் வரலாறுகளையோ, வரலாற்று சம்மந்தப்பட்ட படிப்புகளை பள்ளி, கல்லூரிகளில் படிக்கப் போவதில்லை. ஒரு வேளை வரலாறுகள் அறிய ஆசைப்பட்டால் புத்தகங்களை கூட தேடிப்போக மாட்டார்கள்.. மாறாக இமைகள் தேடுவது இணையத்தை தான். ஆகையால் நமக்கு தெரிந்த, வாழ்ந்த, வீழ்ந்த வாழ்த்திய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவுலகம் எனும் வான்வெளியில் மின்னும் நட்ச்சத்திரங்களாகிய உங்கள் பதிவெனும் கல்வெட்டுகளில் பதித்து வையுங்கள்..

"மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடர்ந்து எழுத அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்" இப்படி வெறுமனமே சொல்லிட்டு போனால் யாராவது எழுத முன்வருவார்களா..?? நிச்சயமாக வரமாட்டார்கள்.. அதனால் எனக்கு தெரிந்த நல்லுங்களில் சிலரை மட்டும் கை கா(மா)ட்டி விடுகிறேன்.. (இந்த லிஸ்ட்ல நான் இருக்கா கூடாதேன்னு நீங்க சாமி கும்பிடுறது எனக்கு தெரியுது... கவலைபடாம தைரியமா போங்க... உங்க பெயரும் இருக்கும்) உங்களுக்கு இயன்ற பொழுதில் எழுதுங்கள்.. ஆனால் எழுதாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்..

நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என இந்த மன்னாதி மன்னன் தொடர்பதிவை தொடர அழைக்கும் நல்ல உள்ளங்கள்..


ஜெய்லானி

Warrior - தேவா


ரசிகன் - மகேஷ்

விந்தை மனிதன்

மனசு - சே.குமார்

இம்சை அரசன் பாபு

யாவரும் நலம் - சுசி

மல்லிகை - ஸ்ரீ அகிலா

நான் நானாக - அன்பரசன்

நிலவின் மடியில் - வினோ

கனவு பட்டறை - சீமான் கனி

மனதோடு மட்டும் - கௌசல்யா

கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா

புது(க்க)விதை - அண்ணாமலை..!!

இந்திராவின் கிறுக்கல்கள் - இந்திரா

என் மனச் சிதறல்கள் - பாலாஜி சரவணா




இதுக்கு மேல நான் யார் பெயரையாவது சொன்னா..... எனக்கு தெரியும் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு... அதனால இதோட முடிச்சிக்குறேன்.... (மேற்கூறிய எவர் மீதும் எனக்கு முன்விரோதமில்ல..) என்னடா இப்படி மாட்டி விட்டுட்டானேன்னு உங்களுக்கு என் மீது கோவம் இருந்தால் (இருக்கும்) நான் அழைக்காத மற்றும் உங்கள் நண்பர்களை பாரபட்சம் பார்க்காமல் கை கா(மா)ட்டி விடுங்கள்... என் மீதுள்ள கோவம் தானாக குறையும்..

பின்குறிப்பு:- மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடருபவர்கள்.. தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள்...


அன்பானவர்களே..சற்று தாமதமானாலும் எழுதுங்கள்.... எழுதாமல் புறக்கணிக்க வேண்டாம்...

மன்னாதி மன்னன் 4 - பாபர் - தொடர்பதிவு..

மன்னாதி மன்னன் பாபரின் வரலாறு பற்றிய முந்தைய பதிவுகள்..

எங்கள் வீட்டில் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம்... நாங்கள் அண்ணன் தம்பிகள் பார்த்துக் கொள்கிறோம்... இங்கே அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன வேலை.... எனபது போல..அந்நியர்கள் எங்கள் நாட்டை கூறு போடுவதா என்று வீறுகொண்டெழுந்தான் சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்.. இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப் பற்று கொண்ட மன்னர்களுக்கு கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையை சேர்த்த் கிளம்பினார் பாபரை வெல்ல...

கி.பி 1527 மார்ச் 16 ம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு மாபெரும் யுத்தம் துவங்கியது. பாபரின் தைரியம், அசாத்திய சாமர்த்தியம் மற்றும் அனுபவம் மிக்க போர் வீரர்களாலும் யுத்தம் துவங்கி 10 மணிநேரத்தில் பாபரின் கைகளை தழுவியது வெற்றிக்கனி.

கந்தேரிக் கோட்டை, வங்காளம் என ஏறக்குறைய மொத்த வட இந்தியாவையும் கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் பாபர். இக்காலகட்டத்தில் வங்காளத்தில் வாலாட்டிய ஆங்கிலேயர்களை அடக்கினார்.

தான் வாழ்நாளில் அதிகமான நாட்களை போர்க்களங்களில் தொலைத்த பாபர் போர்களில் அதிக நாட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் ஒரு சிறந்த மன்னனாகவே திகழ்ந்தார். இவரது ஆட்சிகாலத்தில இந்து முஸ்லிம் நட்புக்கு வித்திடப்பட்டது.

ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாடக்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், கலாச்சாரம், புவியல், தாவரங்கள், பூக்கள், ஜாதி, மாதம், மக்களின் கணிதத் திறமை மற்றும் கலைத் திறன் என எதையும் தன் நாட்குறிப்பில் குறிப்பிட மறக்கவில்லை. டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார்.மேலும் தாவரங்கள், பறவைகள் என பல நுணுக்கமான விவரங்களை பாபரின் சுயசரிதையில் காணலாம்..ஆனால் பாபர் காலத்தில் கட்டிடக்கலை எதுவும் சொல்லும் படியாக முன்னேறவில்லை..

நான்காண்டுகள் மட்டுமே டெல்லி அரியணையில் ஆட்சி செய்த பாபர் டிசம்பர் 26 கி.பி 1530 ம் ஆண்டு அதிகாலை மரணமடைந்தார்.. அப்போது அவருக்கு வயது 48 தான்..

பாபரின் உடல் பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்ட இடத்தருகே யமுனை நதிக்கக்ரையில் புதைக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகள் கடந்த பின்னர் பாபரின் உயிலின் படி காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு, முன்பு அவர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அழகான பெருந்தோட்டத்தில் மறுபடியும் புதைக்கப்பட்டது..

பாபர் என்ற மாவீரனின் சகாப்த்தம் முடிந்து விட்டாலும் அவருக்கு பின்னர் வந்த ஹீமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் மற்றும் ஒளரங்கஷீப் ஆகியோர் மொகலாய சாம்ராஜ்யத்தை மேலும் பரவ விட்டதோடு மட்டுமல்லாமல் கட்டிடக்கலைகளிலும் இந்திய பெயர் பெற காரணமாக இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை..

******************

ஒருவன் ஒரு பதிவு எழுதினாலே அதனை தங்கள் பணிச்சுமைகளின் காரணமாக படிப்பது கடினமான காரியம்... ஆனால் ஒரே பதிவாக எழுத வேண்டிய ஒரு மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து நான்கு பகுதிகளாக எழுதிய போதும்.. கோவப்படாமல், திட்டாமல், அன்போடு வந்து படித்து தங்கள் கருத்துக்களை கூறிச்சென்ற அனைத்து சக பதிவர்கள், நண்பர்கள் தோழிகள் என அனைவருக்கும் எனது நன்றிகள்..

மன்னாதி மன்னன் தொடரை எழுத மிகவும் உதவியாக இருந்த மதனின் வந்தார்கள் வென்றார்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி..

ஹெலோ... ஹெலோ...

இருங்க சார்.. எங்கே கிளம்புறீங்க.. நன்றி சொன்னா எல்லாமே முடிஞ்சிடுமா.. இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம்.. அதை மீண்டுமொரு பதிவில் தெரிவிக்கிறேன்..

..காத்திருங்கள் ஆவலுடன்..

மன்னாதி மன்னன் 3 - பாபர் - தொடர்பதிவு..

22 வயது பாபருக்கு 17 வயதில் மகனா..? என்று கடந்த மன்னாதி மன்னன் பதிவில் பெயர் தெரியாத அன்பர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.. பதிவின் நீளம் கருதி பாபரின் மண வாழ்க்கை, போர்முறைகள் உட்ப்பட பல விசயங்களை சுருக்க வேண்டியிருந்ததால் சொல்ல முடியாமல் போனது. கடந்த பதிவுகளில் சொல்லாமல் விட்டு போன வரலாற்று தகவல்கள் இவை..


பாபரின் முதல் திருமணம் 16 ம் வயதில் ஆயேஷா பேகம் என்ற பெண்ணுடன் நடந்தது, விதியின் விளையாட்டாலும், பல லட்சியங்கள் மற்றும் கனவுகளாலும் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் படுக்கையறையில் நுழைந்தேன், அதுவும் தான் தாயார் கண்டித்துக் கொண்டதால் தான் என்று பாபரே தான் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். (இது போன்ற காரணங்களால் சில ஆண்டுகளில் முதல் மனைவி பாபரை பிரிந்து சென்று விட்டதாக வரலாற்று செய்திகள் குறிப்பிடுகின்றன.)


கி.பி 1504 ம் ஆண்டு காபூல் அரியணையில் ஏறிய பாபர் காபூல் மற்றும் இந்தியாவில் எழு பெண்களை மணந்தார், இவர்களால் மொத்தம் 17 குழந்தைகள் பிறந்தன, அதில் ஏட்டு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. கி.பி 1508 ல் பாபரின் மனைவிகளில் ஒருவரான மாஹின் பேகம் என்ற பெண்மணிக்கு பிறந்தவர் தான் பானிபட் யுத்தத்தில் முக்கிய தளபதியாக இருந்து வெற்றிக்கு வழிவகுத்த ஹீமாயூன்.


கி.பி 1519 இந்தியாவில் நுழைந்த பாபரை, உதவிக்கு அழைத்த தௌலத்ஹான் எதிர்த்து நின்றதால் காபூலுக்கு திரும்பும் நிலை ஏற்ப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெரும் படையை திரட்டிக் கொண்டு டிசம்பர் 15 கி.பி 1525 பாபர் சிந்து சமவெளியை கடந்தா பாபர் முதல் வேலையாக எதிர்த்த தௌலத்ஹானை வென்று நண்பனாக்கிக் கொண்டார். தொடர்ந்து டெல்லியை ஆண்ட இப்ராஹாம் லோடியுடன் வரலாற்று பிரசித்தி பெற்ற பானிபட் யுத்தத்திற்கு போர் முரசு கொட்டியது ஏப்ரல் 21 - கி.பி 1526 . இந்த போரில் பல்லாயிரகணக்கான வீரர்களை கொன்று போரில் வென்று இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட கதை தான் உங்களுக்கு தெரியுமே... தெரியாதவர்கள் இதற்கு முன்பு எழுதிய மன்னாதி மன்னன் - பாபர் - தொடர்பதிவு.. மற்றும் மன்னாதி மன்னன் 2 - பாபர் - தொடர்பதிவு.. இந்த இரண்டு பதிவுகளை இயன்றால் படியுங்கள்...


டிஸ்கி:- என்றோ வாழ்ந்து செத்து போன மன்னனோட கதைய இப்படி போட்டு இழுத்தடிக்கிறான் என்று என் மீது கோபப்படும் அன்பு நெஞ்சங்களுக்கு... தொடரும் அப்படின்னு போட்டு சுவாரசியமா கொண்டு போறதுக்கு இது சிறு தொடர்கதையோ, சின்ன திரை சீரியலோ இல்லை.. வரலாறு..(வரலாறு முக்கியம் மக்களே) இதை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் முடியாது, விசயங்களை மறைக்கவும் முடியாது.. ஆகையால் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மகிழ்ச்சியுடன் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்...

...முந்தைய மன்னாதி மனனின் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்..

தோழியின் கிறுக்கல்கள் 2 - எங்கே கற்றாயடா...


இந்த நாள் இத்தனை
அழகாய் மலரும் என்று
நானறியவில்லை...

அடிவானின்
விடிவெள்ளியை கூட
வெற்றுப் பார்வையால்
துழாவிக் கொண்டிருந்தேன்...

தேர்வு தந்த
நட்ச்சத்திரங்களுக்கு கூட
என்னை உயிர்பிக்கும்
திராணியில்லை...

முந்தைய நாளின்
பாரங்கள் நெஞ்சை அழுத்த
இதயம்
விம்மிக் கொண்டிருந்தது...

தாங்கவொண்ண
ஒரு கணத்தில்
நான் உன்னை அழைத்தேன்...

அப்பொழுது கூட இந்த நாள்
இத்தனை அழகாய் விடியுமென
நினைக்கவில்லை...

அலைபேசி
உன் பெயர் சுமந்து
அதிர ஆரம்பிக்க... என் இதயமும்..

ஹய்யய்யோ இதென்ன..

ஒட்டுமொத்த இனிமையும்
என் செவிப் பறைகளை
அடைந்து விட்டதா...

வார்த்தைகளெல்லாம்
தொண்டை குழிக்குள்
சிக்கிக் கொண்டனவா..

நீயோ சர்வ சாதாரணமாய்
கூல் என்கிறாய் ..
நான் இங்கே உறைந்து போனது
தெரியாமல்..

சிரிக்கிறாய்...
நான் இங்கே சிதறியதும்,
சிதறுவதும் தெரியாமல்..

வானவில்லும்,
வண்ணத்துப்பூச்சிகளும்,
வண்ணப்பூக்களும் மீட்டாத
என் வசந்தத்தை மீட்டி
சிரிக்கின்றன உன் வார்த்தைகள்..

குரலிலே
கரைத்து உயிர்பிக்கும் இந்த
வித்தையை
எங்கே கற்றாயடா ..