என்றும் எப்போதும் சகஜமாக செல்லும் இடமாக இருந்தாலும் இந்த முறை பதற்றமும், படபடப்பும் என்னை சூழ்ந்து கொள்ள, ஓட்டமும் நடையுமாய் என்னையிளுத்து சென்ற கால்கள் சட்டென வேகம் குறைத்தன அவள் வகுப்பறை வாசல் வந்தவுடன்..
பொற்றாமரை குளத்தின் மத்தியில் பூத்திருக்கும் ஒற்றை தாமரை போல தோழிகளின் நடுவில் அமர்ந்திருந்த "ஜோதி"யை பார்த்ததும் நான் வந்து விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்வது போன்று சிரித்து விட்டு வெளியில் வந்து வராண்ட்டாவில் நிற்று வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்..
பாவை ஒருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மலையடிவாரத்தில் அழகாய் ஆரவாரமில்லாமல் இருக்கும் கிருஷ்ணன் கோவில், பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், நடுவில் வானம் தொடும் உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு என ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட அனைத்தும் இன்றெனக்கு அழகாகவும், புதிதாகவும் தெரிந்தன.
இயற்கையின் இளமைக்கு முன் சிறு பிள்ளையாய் மாறிக்கொண்டிருக்கையில் கொலுசு சத்தத்தால் கவனம் கலைத்து இரண்டடி இடைவேளை விட்டு என்னருகில் நின்றவள், எதுமறியாதவள் போல் வானம் பார்த்தாள், நானோ இயற்கையை மறந்து என் இதயத்தை ரசிக்கத்துவங்கினேன்.
சிறிய தூக்கணாங் குருவிக் கூடு போன்று அவள் காதுகளில் தொங்கிகொண்டிருந்த ஜிமிக்கியின் அசைவுகளால் உருவான மெல்லிய இசையும். அவளின் தேகம் தழுவி கேசம் கலைத்த தென்றலின் சுகந்தமும் என்னை மெய் மறக்கச் செய்த தருணம் வார்த்தைகள் வந்தன என் வாழ்கையை முடிவு செய்ய..
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெயந்த், உன்னோட பேச்சு, எல்லாத்தையும் சமாளிக்கிற சாமர்த்தியம், உன்னோட தைரியம், கேலி கிண்டல்,கலாட்டாக்கள், ஏதாவது சின்ன விசயங்களுக்காக கூட என்னை விட்டு கொடுத்து பேசாத குணம், எப்பவாவது என் முகம் வாடிப் போயிருந்தா நீ சொல்ற ஆறுதல்கள், என்னோட விசயங்களில் நீ எடுத்துக்கிற உரிமை இப்படி சொல்லிகிட்டே போகலாம் உன்னை எனக்கு பிடிக்கிறதுக்கான காரணங்கள். இந்த அன்பு நட்பா இல்ல காதலான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.
ஒரு தெளிவான குளத்தங்கரையில் உட்க்கார்ந்து ஒரு சின்ன கல்லை தண்ணியில போட்டா அழகான வட்டங்களா சலனங்கள் விரியும் இல்லையா, அது மாதிரி தான் நீ பண்ற ஒவ்வொரு விசயமும் என் மனசுல சலனத்த உண்டாக்கும், அந்த சலனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த சலனங்கள் கரையை தொடத் தொட மறைஞ்சிடும்.. ஆனாலும் கொஞ்ச நேரம் உயிர் வாழும் அந்த சந்தோசம் போதும் ஜெயந்த் எனக்கு.
நான் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சிறிய மௌனத்திற்கு பின் தொடர்ந்தாள்..
ஜெயந்த் உனக்கும் எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு, உன்னை பெற்றவங்களும், என்னை பெற்றவங்களும் எவ்வளவு எதிர்பார்ப்போடு நம்மை படிக்க அனுப்பியிருப்பாங்க.? எத்தனை கனவுக் கோட்டை கட்டி வச்சிருப்பாங்க? முதல்ல அவங்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு ஒரு நல்ல நிலைக்கு வருவோம்.
இப்போ நமக்கு 21 வயசாகியும் அப்பா அம்மா கைய புடிச்சுகிட்டு தான் நடக்குறோம், இந்த பருவத்தில உனக்கும் சரி எனக்கும் சரி பெற்றவங்களோட துணை வேணும் ஜெயந்த். முதல்ல நல்லா படிச்சு, அதுக்கேற்ற மாதிரி ஒரு நல்ல வேலைய தேடி அம்மா அப்பாவை நம்ம கையை புடிச்சு நடக்க வைப்போம், நாம் அவங்களுக்கு துணையா இருப்போம்.
இது எதுக்குமே அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.
நான் இப்போ ரொம்ப தெளிவா இருக்கேன்.
நேற்றைக்கு கேட்டது மாதிரியே உன் ஆசைப்படி வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாகவோ இல்லை ஒரு நல்ல தோழியாகவோ கண்டிப்பா வருவேன்.
ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... என்று சொல்லி விட்டு வேகமாக நடந்து சென்று விட்டாள்..
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்..
அவளும் மறைந்தாள், அவளுருவமும் மறைந்தது...
நானும் திரும்பி நடக்கத் துவங்கினேன்..
அவளும் மறைந்தாள், அவளுருவமும்
நானும் திரும்பி நடக்கத் துவங்கினேன்..
நான் வரும் போது இருந்த படபடப்பும், பதற்றமும் என் நடையில் இல்லை, தூரமாய் தெரிந்த மலையும், கோவிலும், ஆலமரமும், ஓட்டுவீடும் இன்னும் அழகாய் தெரிந்தன.
***************************
ஜோதி கதையின் தொடர்ச்சியை காண ..
ஜோதி கதையின் தொடர்ச்சியை காண ..