அஸ்தமனம் - விடியல் - கனவு


நான் என்ன  எழுதினாலும் அதற்கு நக்கலும் நையாண்டியுமாக எதிர்கவிதை எழுதுவதில் வல்லவர்கள் எனது நண்பர்கள். அதே போன்று  நண்பர்கள் இருவர்  நக்கல் நையாண்டி இல்லாமல் நாசூக்காய் எழுதிய கவிதைகளை இங்கே ..  



அஸ்தமனம் 

முற்று பெறாத நாளொன்றின்  
இறுதி நேரத்தில் வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப்பூக்கும் செடி 
பிரசவித்த தலைப்பூவொன்றின் வாசம் 
கருமையைக் கவ்விப்பிடித்த இரவின் 
ஓரங்களை கிழித்துக்கொண்டு 
என் தூக்கம் கலைக்கிறது

நீங்காமல் நீளும் பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் தழுவும் ஆழப்புகை
நெஞ்சம் பற்றியெரியும் நாட்டு வாற்றுச்சாராயம் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த இரவும் அஸ்தமிக்கும் 
அக்ககணத்தில் அவள் 
கல்லறைக்கு பக்கத்திலிருக்கும் 
அந்த செடியும்.. 


விடியல் - எஸ்.கே  

தொடங்கி விடாத நாளொன்றின்  
வைகைறை நேரத்தில் வந்தவன் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப் பூவொன்றின் 
மலர்ந்திடும் ஓசை 
வெண்மையைக் கவ்விப்பிடித்த விடியலின் 
கதிர்களை ஒருபுறம் தள்ளி
என் தூக்கம் கலைக்கின்றது

புத்தம் புதிதாய் நித்தம் நீளும் 
பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் முழுதும் தென்றலின் வாசம்
நெஞ்சம் பற்றித்தழுவும் வண்ணக் கனவுகள் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த விடியலும் தொடங்கும் 
அக்ககணத்தில் அவன் 
மனக் கோயிலுக்குள்ளிருக்கும் 
தூணாய் நான்...


கனவுகள் -  வைகை  

முற்று பெறாத நிமிடத்தின்
இறுதி நொடியில்  வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
கனவு பூக்கும்  செடி 
பிரசவித்த காதல்கனவின்  ஒளியில்
வெறுமையைக்  கவ்விப்பிடித்த மனதின்  
பாரங்களைக்  கிழித்துக்கொண்டு 
என் சோகம்  கலைக்கிறது

நினைவுக்குள்  நீளும் பல கனவுகளுக்கு மத்தியில் 
வெற்றுமார்பு தழுவும் உன் நினைவு
நெஞ்சத்தை நெகிழ்ச் செய்யும் உன் புன்னகை  
முன்னிலையில் முடிவெடுக்கிறேன்

இந்த கனவுகள் முற்றுப்பெறும் 
அக்ககணத்தில் அவள் 
கண்களுக்கு உள்ளிருக்கும் 
என்னைப்பற்றிய கனவுகளும்.......



உனக்கானவை சில - நிர்வாண நிலவு..


விரக்தியுடன் ரசிக்கிறேன் 
நான் ,
உன் நினைவுகளுடன்..