கடைசியாய் ஒரு கடைசிக்கவிதை...



மெளனம் தவிர்
கண்ணீர் துடை 
மெல்ல எழு
நாட்க்குறிப்பை திற
கூர்முனை பேனா எடு 
கவிதையொன்றை துவங்கு 
பாதியில் நிறுத்து 
பேனாவை 
கைகளுக்கு பின்னால் மறை 
என்னைப்பார் 
நெருங்கி வா 
கண்களில் காமம் காட்டு 
கட்டியணை
என்னை நான் மறக்க செய்
குறிபார் 
பேனாவை 
என் கழுத்தில் சொருகு 
அலற விடாமல் 
இதழ் மீது இதழ் பத்தி 
இறுக்கம் கூட்டி 
திமிறல் தவிர்
மெல்ல அடங்க 
மெதுவாய் ஒதுங்கு 
பேனாவை சரிபார் 
விட்ட கவிதையை 
மீண்டும் தொடர்

எனக்கான அந்த 
கடைசிக்கவிதையின் 
முடிவில் முற்றுப்புள்ளியொன்றை 
மறவாமல் என் 
உதிரம் தொட்டு வை  . 



காத்திருக்கும் காதல்..




உன்னைக் காண 
நானும்
என்னைக் காண 
நீயும் 
ஒருவரை ஒருவர் 
முந்திக்கொண்டு வந்தடைகிறோம் 
வழக்கமாய் நாம் சந்திக்கும் 
கொன்றை மரத்தடி 
பார்க் பெஞ்சருகில், 

அங்கு 
நமக்கு முன்னால் 
நம்மைக்காணும் ஆர்வத்தில் 
வந்து காத்திருக்கிறது 
நம் காதல்.. 

எண்ண ஓட்டங்கள்



எப்போதேனும்  இயக்கமில்லாமல் 
இருக்கும் பொழுதில் என்னுள் எழும் 
எண்ண ஓட்டங்களை ஒருங்கிணைக்க 
எத்தனிக்கையில் சிதறி ஓடுகின்றன  
திசைக்கொன்றாய் 

எதை துரத்த 
எங்கனம் பிடிக்க என்று 
சிந்திக்கும் சமய சந்தினூடே 
குழப்பத்துடன் தூரத்தில் 
ஒற்றை புள்ளியாய் தேயத் தொடங்கும் 
ஓர் எண்ணத்தை துரத்துகிறேன் 

அவள் 
அவன் 
அது 
காதல் 
காமம் 
காடு 
கடல்
தென்றல் 
திங்கள் 

என என் எண்ணம்  
எல்லாவிடத்தும் ஏறிப் பயணிக்கிறது, 
துரத்திய படி நானும் 
அப்பயணத்தில் அதனூடே 

ஓட்டமும் துரத்தலுமாய் 
துரத்தலும் ஓட்டமுமாய் 
யுகங்களை போல 
உருமாறிய நிமிடங்கள் 
காற்றி கரைந்தோட 

முடிவில்லா மனதில 
முடியா பயணத்தின் 
முடிவில் முடிவாய் 
கரிய கற்களால் கட்டப்பட்ட 
உருவமில்லா ஓர் சுவற்றில் மோதி 
மூச்சுத் திணறி உயிரற்று விழுகின்றன 

ஏமாற்றத்துடன் 
திரும்பி வருகிறேன் 
பழைய இடத்திற்கு 

மீண்டும் 
ஒருங்கிணைக்கிறேன் எண்ணங்களை
சிதறுவதற்கு தயாராகின்றன  அவை..

மழையின் விழுதுகள்..




தென்றலை துணைக்கழைத்து 
சா
ரம் திறந்து 
மெதுவாய் மெலிதாய் 
உள்நுழைகின்றன 
மழையின் விழுதுகள் 

இவர்களெப்படித்தான் 
அறிகிறார்களோ 
அவள் 
என்னறை நுழைவதை...

♦♦

ன்னல் வழியாய் 
மெதுவாய் நுழைந்து 
வெட்க்கத்துடன் உள்ளே வருகின்றன 
மழைத் துளிகள் சில 

முன்பொரு மழைநாளில் 
என்னறை ஜன்னலில் அவள் நின்று 
மழை ரசித்த 
ஞாபகத்தில் வந்திருக்கலாம் 

அடுத்த மழைக்கும் 
வரக்கூடும் துளிகள் சில 
அவளைத் தேடி.. 

♦♦

சாரம் வழியாய் சன்னமாய் 
கசிந்து வருகிறது 
எப்போதுமவள் விரும்பிக்கேட்கும் 
மெல்லிசையொன்று 

வெளியில் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
உருவம் தொலைக்கிறது 
சிறு மழையொன்று 
பெருமழையாய் 

உள்ளில் 
சத்தமே இல்லாமல் சலங்கை கட்டி 
பேயாட்டம் ஆடத் தொடங்குகின்றன 
அவளுடனான 
மழைக்கால நினைவுகள்.. 

♦♦