ரஜினியை எப்படி பிடிக்கும், எப்போதிலிருந்து பிடிக்கும் எனக்கேட்டால் அதற்கு என்னிடம் பதிலிருக்காது.. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரஜினியை பிடிக்கும்.. நான் பார்த்த முதல் ரஜினி படம் "நினைத்தாலே இனிக்கும்".. என்னை பொறுத்த வரை நான் பார்த்த முதல் படமும் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.. இந்த படத்தில் ரஜினியும் கமலும் நடித்திருந்தாலும் என்னை கவர்ந்தது ரஜினியின் ஸ்டைலும், குறும்புகளும் தான்.. குறிப்பாக சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கும் காட்சிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை.
ரஜினி படங்களிலேயே என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படம் என்றால் அது பாட்ஷா படமாகத் தான் இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக ஸ்கூலுக்கு மட்டம் போட்டு பார்த்த படம், அதற்காக வீட்டில் வீட்டில் வாங்கிய பிரம்படிகளின் அடையாளம் இன்னும் மறைய வில்லை.
1990 களில் எங்கள் ஊரில் ரஜினிக்கு அடுத்த படியாக விஜயகாந்த்துக்கு தான் ரசிகர்கள் அதிகம். (இப்போதைய நிலவரம் எனக்கு தெரியவில்லை). அதிலும் கோவில் திருவிழாக்களில் நாடகங்களல்லாமல் திரைப்படங்கள் போடுவதென்று முடிவு செய்தால் ரஜினி படமா இல்லை விஜயகாந்த் படமா என்று பெரிய பஞ்சாயத்தே நடக்கும். இந்த ரசிகர்கள் ஒரு புறமிருக்க பள்ளிகளில் நாங்கள் தனியாக ரசிகர் மன்றங்கள் வைத்திருப்போம். ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களாகிய எங்கள் எதிரிகளுக்கும் அடிக்கடி மோதல்கள் வெடிப்பதுண்டு.. சில சமயங்களில் அது கைகலப்பாகவும் மாறிவிடும். இவையெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை தான். இப்பொழுது அந்த நண்பர்களை பார்த்தால் (பழைய எதிரிகள்) பழைய பள்ளி நினைவுகளைச் சொல்லி சிரிப்பதுண்டு.
ரஜினி நடித்த படங்களில் 95 % படங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த சில படங்கள் இங்கே.
முள்ளும் மலரும் :- எப்போதாவது எனக்கு நல்ல படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் என் கண்கள் தேடி அலைவது முள்ளும் மலரும் படத்தை தான்.. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களை தேர்வு செய்தால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் (ஏன் முதலிடமாகவே) இந்த படம் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை..
ஆறிலிருந்து 60 வரை :- பல காட்சிகளில் கண்களில் கண்ணீரை எட்டி பார்க்க வைத்த படம். உறவுகளால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏழை அண்ணனின் கதையை அருமையாக படமாக்கியிருப்பார் எஸ்.பி. முத்துராமன் ... ரஜினியின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஓன்று.
எங்கேயோ கேட்ட குரல் :- இந்த படத்தில் நடித்தது வில்லனாகவும், வெடிக்கும் வசனங்களுடனும், வேகமான கை கால் அசைவுகளையே புது ஸ்டைலாக மாற்றும் ரஜினி தானா என்று பலரையும் கேட்க வைத்த படம். இந்த படத்தில் தலைவர் நடித்தார் என்பதை விடவும் வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்புடன் கூடிய ரஜினியின் மற்றொரு அற்ப்புத படைப்பு.
நினைத்தாலே இனிக்கும் :- நான் பார்த்த முதல் ரஜினி படம்.. என்னை ரஜினியின் ரசிகனாக மாற்றியதும் இந்த படம்.. படத்தில் தலைவரின் குறும்புகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.. இந்த படத்தில் ரஜினி வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது. சிகரெட் பிடிக்கும் பந்தைய காட்சியை பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டுமென்றில்லை.(சுஜாதா சாரின் கதை)
தில்லு முல்லு :- ஆக்சன் செண்டிமெண்ட், தமிழ் சினிமாவின் மசாலாக் கலவைகள் என எதுவுமில்லாமல் எடுக்கப்பட்ட முழு நீள நகைச்சுவை திரைப்படம்.. மீசையுடனும், மீசை இல்லாமலும் தேங்காய் சீனிவாசனுடன் தலைவர் செய்யும் லூட்டிகள் ஒவ்வொன்றும் செம கலக்கல். இந்த படத்தை பார்த்து சிரிக்காதவர்கள் நரசிம்மராவுக்கு சொந்தக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும்.
தம்பிக்கு எந்த ஊரு :- கிராமத்தை பற்றி எதுவும் தெரியாமல் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞனின் கதை. பாம்பை கண்டு பயப்படும் காட்சி, வயலில் கதிரறுக்கும் காட்சி, பால் கறக்கும் காட்சி, துணி துவைக்கும் காட்சி, ஆற்றில் மாடு கழுவும் காட்சி என ஒவ்வொன்றும் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பவை. தம்பிக்கு எந்த ஊரு படத்தின் மற்றொரு சிறப்பு "காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே" பாடல்..
தளபதி :- ரஜினியும் மம்மூட்டியும் இணைந்து மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடித்த படம்.. நட்புக்கு இலக்கணம் சொல்லும் ஒரு படைப்பு. இந்த படத்தை நான் எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. தளபதி படத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
வீரா :- இரண்டு பொண்டாட்டிக்காரனின் கதை. அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு அறிமுகப் பாடல் இல்லாமல் வந்த படம். பாடகர், பிளேபாய், மற்றும் இரு பெண்களின் கணவன் என்ற எல்லா கதாப்பாத்திரங்களையும் நகைச்சுவையால் நிறைவு செய்திருப்பார்.. படத்தில் ரஜினி செய்யும் காமெடி போதாதென்று இவருடன் ஒரு காமெடி பட்டாளம் வேறு.. கேட்க்கவா வேண்டும் காமெடிக்கு..
குரு சிஷ்யன் :- ரஜினியுடன் பிரபுவும் இணைந்து கலக்கிய படம்.. பிரபுவும் ரஜினியும் சேர்ந்து வீட்டில் ரைடுக்கு செல்லும் காட்சி, மனோரமா வினு சக்கிரவர்த்தியை மிரட்டும் காட்சி, கௌதமியுடனான காதல் காட்சிகள் மற்றும் ராதாரவியிடம் ரவுடியாக வேலைக்கு சேரும் காட்சி என காமெடிக்கு பஞ்சமில்லாத ஒரு படம்.
ஊர்க்காவலன் :- சத்யா மூவீசின், மனோ பாலா இயக்கிய படம். ராதிகாவின் காமெடி, சங்கர் கணேஷின் பாடல்கள், ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதை என அனைத்தும் அருமையான கலவையாக வந்த படம். ( ரஜினி ஹேர் ஸ்டைல் மாத்தினது இந்த படம்தானாம்)
பாட்ஷா :- தலைவரின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் முதலிடம் வகிக்கும் படம் இது. ஆக்சன், காமெடி, பஞ்ச் டயலாக், செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த ஒரு பக்கா கமெர்சியல் படம்.. என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படமும் கூட..
என்ன தான் தலைவரின் படங்கள் ஆக்சன், அதிரடி வசனங்கள் என நிறைந்திருந்தாலும் தலைவரிடம் என்னை கவர்ந்தது நகைச்சுவை தான்.. தமிழ் நடிகர்களிலேயே தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..
( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா )