மன்னாதி மன்னன் 2 - பாபர் - தொடர்பதிவு..

அன்பானவர்களுக்கு வணக்கம்.. இந்த மன்னாதி மன்னன் தொடர்பதிவின்முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம் .. முதல் பாகத்தை படித்தவர்களுக்கு தடையில்லை தொடரலாம்..



விதியின் விளையாட்டால் அலைக்கழிக்கப்பட்ட பாபரின் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசத்தொடங்கியது.. இந்த சமயத்தில் சொல்லிவைத்தது போல ஆப்கானிஸ்தானில் காபூல் மன்னன் திடீரென இறந்து விடவே, சரியான வாரிசு இல்லாத காரணத்தால் அந்நாட்டை பாபர் கைப்பற்ற திட்டமிட்டார். வெறும் 200 பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் காபூலை நோக்கி புறப்பட்டார். போகும் வழியில் பாபரின் தன்னம்பிக்கையை கண்டு வழிநெடுகிலும் உள்ள பல கிராமங்களிருந்து இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். கி.பி 1504 ல் காபூல் அரியணையில் அமர்ந்தார் பாபர். அப்போது அவருக்கு வயது இருபத்தியிரண்டு.



காபூல் நகரில் கூடும் ஒரு பெரும் சந்தையில் வந்திறங்கும் கலைநயமிக்க மற்றும் பல வியக்கத்தக்க பொருட்களை பார்த்ததும் பாபரின் கண்கள் அகல விரிந்தது.. கேள்வி எழுந்தது.. எங்கிருந்து ... பதில் வந்தது இந்தியா என்று.. மெதுவாய் படர்ந்தது ஆசை இந்தியாவையும் ஆள வேண்டும் என்று..

அதிர்ஷ்ட காற்று பாபரை அரவணைத்து வீச ஆரம்பித்தது.. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் சொல்லி வைத்தது போல டெல்லியை கடங்கோலாட்சி புரிந்த இப்ரகாம் லோடியை வீழ்த்த தௌலத்கான் என்பவரிடமிருந்து "எங்களுக்கு உதவ முடியுமா" என்று ஒரு கடிதம் வந்து சேர்ந்தது பாபரின் கைகளுக்கு.. இது தான் தக்க சமயம் என்றெண்ணி ஒரு பெரும் படையோடு புறப்பட்டார் பாபர் இந்தியாவை நோக்கி..

உதவி செய்ய வரும் பாபர் நமக்கொரு உபத்திரபமாக மாறிவிடுவாரோ என்று பயந்த தௌலத்கான் சில சிற்றரசர்களை ஓன்று சேர்த்து பாபருக்கு எதிராக போரிட்டான், ஆனால் அனுபவமும் ஆவேசமும் கொண்ட பாபரின் படைக்கு முன் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை..இவர்களை வென்ற வீரமுகத்தொடு டெல்லியை நோக்கி புறப்பட்டது பாபரின் படை...



நேரம் கடத்தாமல் தயாரானது பாபரின் படை இப்ரகாம் லோடியுடனான போருக்கு.. போர் முரசு கொட்டப்பட்டது டெல்லிக்கு சுமார் 50 மைல் தூரத்திலுள்ள பானிபட் என்ற கிராமத்தில்.. யானைப்படை, குதிரைப்படை மற்றும் தரைப்படை என இப்ரகாம் லோடியின் படைகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்ச்சத்திக்கு மேல்.. ஆனால் பாபரின் படையின் எண்ணிக்கை வெறும் 12 ,000 தான்... துவங்கி ஆறு மணி நேரம் கூட நீடிக்கவில்லை இந்த வரலாற்று பிரசித்தி பெற்ற பானிபட் யுத்தம்.. இந்த யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 கும் மேல். (இந்த போருக்கு பின் சுமார் ஏட்டு லட்சம் பேர் சிறை பிடிக்கப்பட்டார்கள் என்பது கேட்டறிந்த செய்தி) இந்த பானிபட் யுத்தத்தில் முக்கிய தளபதியாக இருந்து வெற்றிக்கு பெரிது உதவியது பாபரின் பதினேழு வயது மகன் ஹீமாயூன்..
பானிபட் கிராமத்தில் போர் நடந்த மைதானத்தில் இப்ரகாம் லோடியின் பாழடைந்த கல்லறையை இன்றும் காணலாம்.

பானிபட் யுத்தம் முடிந்த கையோடு ஹீமாயூன் தலைமையில் ஒரு படை ஆக்ராவை கைப்பற்றியது. இந்த நேரத்தில் தான் உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம் ஹீமாயூன் கைகளுக்கு வந்தது. (கோஹினூர் வைரத்தின் வரலாறு பற்றி நீங்கள் இங்கே படிக்கலாம்). நாட்கள் செல்ல செல்ல ஹீமாயூன்மற்றும் சில தளபதிகளின் சாமர்த்தியத்தால் பாபரின் படைகள் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி டெல்லி சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரித்தனர்..




ஆனால்...

என்ன தான் நமக்குள் பூசல் இருந்தாலும் ஒரு அந்நியன் நம் நாட்டை கைப்பற்றுவதா என்று சில தேசப்பற்று மிகுந்த அரசர்கள் படையுடன் கிளம்பியதன் விளைவை.. அடுத்த பதிவில் பார்க்கலாம்...

"அவனோடு தான் அவளும் வருவாள்".

அதிகாலை நேரம்.. அரைகுறை தூக்கம் .. அவசர அவசரமாய் எழுந்தேன்.. தட்டு தடுமாறி இருட்டில் தேடிப்ப் பிடித்து அலாரத்தை எடுத்து நேரத்தை பார்த்தேன்..இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது வழக்கமாய் நான் தூங்கம் கலைக்கும் நேரத்திற்கு.. தினமும் ஓலமிட்டு அடங்கும் அலார சத்தத்திற்கு பதிலாக துடிக்க ஆரம்பித்துவிட்டது என் இதயம்.. அவன் வருவான்..

"அவனோடு தான் அவளும் வருவாள்".

முதல் பார்வையிலேயே எனக்குள் ஊடுருவி என்னையும் என் எண்ணங்களையும் கலைத்து போட்ட பாதகி அவனுடன் தான் வருவாள்..


கடமைக்காக குளித்தேன். அம்மா ஆசையாய் கொடுத்த இட்லிகளில் ஒன்றை எடுத்து ஓரமாய் கடித்து மீதி வைத்து.. தேடி எடுக்க நேரமில்லாமல் கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்துவிட்டேன்..

தினமெனக்கு தகவல் சொல்லும் பூக்கடை நண்பனிடம் விசாரித்தேன்.. அவன் வந்து விட்டானா..? என்று.. இல்லை என்றான்.. நிம்மதி பெருமூச்சுடன் என்னை நானே நிதானப் படுத்தி சுதந்திரமாய் சுவாசித்தேன்..அவனுக்கு முன் வந்த கர்வத்துடன் காத்து நின்றேன்.. அவனுடன் வரும் அவளுக்காக..

"அவன்".. இப்பொழுதெல்லாம் முன்பு மாதிரியில்லை நேரம் தவறாமல் வருவது கிடையாது.. அவனுக்கு வயது கொஞ்சம் அதிகம், அதனால் தானோ என்னவோ எதற்கும் அவசரப்படுவதில்லை.. நண்பர்களால் அவனுக்கு கிடைத்த பெயர் கட்டபொம்மன், ஆனால் அதற்கேற்ற வீரம் அவனிடம் இல்லை.. முப்பது மைல் வேகம் தாண்டினால் மூச்சு நின்று விடுவது போல சத்தமிடுவான்.. இதயம் நின்று விடக் கூடாதென்பதற்காக இடையிடையே இளைப்பாறிக் கொள்வான்..

யாரோ வருகிறார்கள்.. அது... அவன் தான்.. அவனே தான்..

கரும்புகையை காற்றிக்கு காணிக்கை கொடுத்துவிட்டு.. புழுதிப் படலங்களுக்கு மத்தியில் பூவைப் போல அவன் வந்து நிற்கிறான் என் முன்னால்..அவளும் அவனுடன் தான் வந்திருக்கிறாள்..

நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை காதுக்கு பின்னால் சிறைவைத்துவிட்டு.. ஒரு புன்னகையால் என்னையும் சிறைபிடித்து கிளம்பிவிட்டாள், அவள் அவனுடன்..

நாளையும் "அவள் அவனுடன் தான் வருவாள்"...

மன்னாதி மன்னன் - பாபர் - தொடர்பதிவு..

போர்க் களங்கள், மாமன்னர்கள், அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள், காதல் காவியங்கள், குதிரைப்படை, யானைப்படை , நாகரீகம், கலாச்சாரம் என வகை வகையாய் வகுத்து வந்தவர்களையும், வென்றவர்களையும், வாழ்ந்தவர்களையும் பற்றி கூறும் வரலாறுகள் படிக்கவும் அவர்கள் பெருமை பேசவும் யாருக்கு தான் பிடிக்காது...

பள்ளிச் சீருடை அணிந்த காலத்தில் மனதில் பதிந்தவை இந்த வாள் வீச்சு வீரர்களும் அவர்களின் வரலாறுகளும். புத்தகத்தில் படித்த மன்னர்களையும் வீரர்களையும் மனதில் உருவகப்படுத்தி அட்டையால் வாள் செய்து சிறு வயதில் விளையாடிய நினைவுகள் இன்னும் நீங்கவில்லை.

இலக்கணங்களும், இலக்கியங்களும், வரலாறுகளும் கற்றுக் கொடுத்த புத்தகங்களோடு பிணைந்திருந்த பள்ளிக்காலத்திலிருந்து விடு பட்டு கல்லூரியில் கால் வைத்த நாள் முதல் இலக்கியங்களும், இலக்கணங்களும் உருமாறி இயற்பியலும், இயந்திரவியலுமாயின. வரலாறு புத்தகங்கள் உருமாறி என் கையில் வாகனங்களின் உதிரிபாகங்கள் ஆனது. இப்படி ஏறக்குறைய மறந்தே போன வாசிப்புகளும் வரலாறுகளும் இந்த பதிவுலகத்தினால் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியோடு.. மன்னாதி மன்னன் என்ற தலைப்பில் என்னை தொடர் பதிவு அழைத்த நண்பன் ஜில்ல்தண்ணி யோகேஷுக்கு நன்றியுடன் தொடர்கிறேன்..

******************************


மன்னாதி மன்னன் - பாபர்



நாகரீகமும், கல்வியறிவும் ராஜதந்திரமும் கொண்ட துருக்கிய ரத்தமும், எதற்கும் அஞ்சாத போர் வீரம் கொண்ட மங்கோலிய ரத்தமும் சேர்ந்தால் எப்படி இருக்கும்.. அதற்கு உதாரணம் தான் பாபர். ஆகையால் தான் சாதாரண மனிதர்களால் எண்ணிப் பார்க்க முடியாத சோதனைகளை கடந்து, இந்தியாவில் ஒரு புகழ் பெற்ற சாம்ராஜ்யத்தை துவங்கி புகழ் பெற முடிந்தது. (ஒரு வேலை பாபர் இந்தியாவிற்கு வராவிட்டால் இன்றளவும் உலகம் முழுவதும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் நமக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..)

துருக்கிய மன்னன் தைமூரின் பரம்பரையில் வந்த உமர் ஷேக் மிர்சா என்ற சிற்றரசனுக்கும், மங்கோலிய மாவீரன் செங்கிஸ்தான் பரம்பரையில் வந்த குத்லூக் நிகார் என்பவருக்கும் பிறந்தவர் தான் பாபர்.

1494 ல் பாபரின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விடவே பர்கானா என்ற சிற்றரசின் பொறுப்பை பாபர் ஏற்றுக் கொண்டார். அப்போது பாபருக்கு வயது பதினொன்று மட்டுமே. இத்தனை கேள்விப் பட்ட அண்டை நாட்டு சிற்றரசர்கள் ஒரு சிறுவன் தானே என்று படையெடுத்து வந்தவர்களை வென்று சின்னஞ்சிறு வயதிலையே தான் வீரத்தை நிலை நாட்டினார் பாபர். அதோடு நின்று விடாமல் தான் பதிமூன்றாம் வயதில் சாமர்கண்ட் நகரையும் கைப்பற்றினார்.



சாமர்கண்ட் நகரில் திடீரென தோன்றிய பஞ்சத்தால் பாபர் மக்களின் செல்வாக்கை இழந்ததோடு மட்டுமல்லாமல் சாமர்கண்ட் நகரையும் இழந்தார். அதே சமயம் அண்டை நட்டு அரசர்களின் சூழ்ச்சியால் தனது சொந்த நாடான பெர்கனாவையும் இழந்தார் பாபர். பின்னர் சில நாட்களிலையே ஒரு சிறு படையை திரட்டி பெர்கானாவை கைப்பற்றினார். இது போன்று பலமுறை இழப்பதும் பெறுவதுமாக வதியின் காலடியில் மிதிபடும் பந்தாக பலமுறை சிக்கிக் கொண்டு அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டார் பாபர்.



இப்படி விதியின் விளையாட்டினால் அலைகழிக்கப் பட்ட பாபர் எப்படி மீண்டும் மன்னரானார் என்றும், இந்தியாவில் எவ்வாறு சாம்ராஜ்யம் அமைத்தார் என்பதையும் கூடிய விரைவில் மீண்டுமொரு பதிவில் தொடருகிறேன்....

என்னடா இவன் தொடர்பதிவுக்கே தொடரும் போட்டு எழுதுறானே அப்படீன்னு பாக்குறீங்களா.. வேற என்னங்க பண்றது.. எல்லாம் நம்மாளுங்க பண்றது தான்.. ஆமாங்க பதிவ கொஞ்சம் நீளமா பெருசா எழுதினா அதை படிக்காமலையே ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க.. இப்படி பின்னூட்டம் போட்டுட்டு போயிடுறாங்க.. அதனால தான் நீங்க கஷ்டப் படக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த தொடரும்..

மன்னாதி மன்னனுக்கு உதவிய மதனின் வந்தார்கள் வென்றார்களுக்கு நன்றி..

தோழியின் கிறுக்கல்கள் - நட்பாக மா(ற்)றிய காதல்..




மெதுவாய் புலரும் பனிக்கால
பொழுதாய் புலர்ந்தது
உனக்கும் எனக்குமான நேசம்!
குளிர் துடைக்கும் சூரியக்கதிர் போல்
விரிகிறது அதன் எல்லைகள்..

ரோஜா இதழ் போல்
முகிழும் உன் வார்த்தைகளும்
கொட்டும் அருவிபோல்
குதிக்கும் என் வார்த்தைகளும்
போஷித்து வளர்க்கின்றன
நம் நேசத்தை..

புன்னகையை
பகிர பலர் இருந்தாலும்
கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்..

துணையா..!!! இணையா..!!!
என என்னிதயம்
கண்ணாமூச்சி ஆடும்போதெல்லாம்
எல்லைகளை சுட்டி
தெளிய வைக்கிறாய்!

மலர்ந்து மணம் பரப்பும்
மலரை விட
வெடித்து பரவும் விதையே
மண்ணிற்கு தேவையென்பதை
உணர வைத்த உனக்கு
காதல் தாண்டிய
என் நட்பை
காணிக்கையாக்குகிறேன்!

நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்
பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்
நட்பாக மா(ற்)றிய காதல்..

அறிந்தும் அறியாததும் 7 - கோஹினூர் வைரத்தின் வரலாறு...

வைரங்களில் முதன்மையானது, விலை உயர்ந்ததும், புகழ் பெற்றதுமான வைரம் கோஹினூர் வைரம் ஆகும். இதை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதன் வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வழியில்லை.

verumpaye

கோஹினூர் - என்றால் மலையளவு ஒளிவீச்சு என்று பொருள். இந்த விலைமதிப்பில்லா வைரத்திற்கு கோஹினூர் என்று பெயரிட்டவர் நாதிர்ஷா எனும் ஒரு பாரசீக மன்னன். 15 ம் நூற்றாண்டுகளிலையே இந்த வைரத்தின் மதிப்பு கேட்டால் பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவளிக்க முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்தியாவின் ஆந்திராவிலிருந்து அலாவுதீன் கில்ஜி எனும் மன்னனின் தளபதி மாலிக் கபூரால் கைப்பற்றப் பட்டது. இங்கிருந்து தான் கொஹினூரின் நாடோடி வாழ்க்கை ஆரம்பமானது. பின்னர் இந்த வைரம் குவாலியர் மன்னர் விக்ரம் ஜித்தின் கைகளுக்கு சென்றது. மாமன்னர் பாபருடன் நடந்த போரில் டெல்லியை ஆண்ட இப்ரஹாம் லோடி என்ற மன்னனுடன் விக்ரம்ஜித்தும் இறந்து விட, உயிருக்கு பயந்த உறவினர்கள் வைரத்தை பாபரின் மகனான ஹீமானிடம் அன்பளிப்பாக கொடுத்தனர்.(ஹீமான் பேரரசர் அக்பரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது)

பின்னர் பாரசீக மன்னரான தாமஸ்ப் கைகளுக்கு சென்றடைந்தது. பிற்பாடு தட்சன பீட பூமியை ஆண்ட நிஜாம் ஷாவை அடைந்தது. புகழ் பெற்ற இந்த வைரமானது மீண்டும் பாபர், அக்பர் பரம்பரையில் வந்து இன்றளவும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

1739 ல் டெல்லியை சூறையாடி நாதிர்ஷா எனும் பாரசீக மன்னன் கைப்பற்றினான்.(கோஹினூர் என்ற பெயரும் நாதிர்ஷாவால் தான் வந்தது) பின்னர் இவன் பரம்பரைகளை அலங்கரித்த கோஹினூர் வைரத்தை இந்தியாவிலுள்ள பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் ரஞ்சித்சிங் கைவசம் வந்தது. மெல்ல மெல்ல நுழைந்து மொத்த இந்தியாவையும் தங்கள் கைவசம் கொண்டுவந்த ஆங்கிலேயர்களின் கீழ் பஞ்சாப் போன பின் கோஹினூர் வைரம் சர்.ஜான்.லாரன்ஸ் கைகளை சென்றடைந்த பின் பிரிடீஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது..



கோஹினூர் வைரம் மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, அது அதற்கு நிலையான இடமாகவும் மாறி இன்று வரை கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.


நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள்..

பதிவுலகில் வெறும்பய எப்படிப்பட்டவன்..



தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் கனவு பட்டறை சீமான்கனி மற்றும் ரசிகன் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.. (காத்திருக்கேன்..எப்பவாவது மாட்டுவீங்க)



1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வெறும்பய


2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை, எனது உண்மையான பெயர் ஜெயந்த்..

பதிவு எழுத ஆரம்பிக்கும் போது இந்த பதிவுலகத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.. ஏன், எதற்கு, எப்படி என்று எதுவுமே தெரியாது..(இப்ப தான் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன்) நம்ம மேல் மாடி (அது தாங்க மூளை) எப்பவுமே காலி தான்... யோசிச்சு பார்த்தேன்.. இது தான் நமக்கு பொருத்தமா இருக்குமுன்னு தோணிச்சு.. அதனால தான் இந்த வெறும்பய...

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..


பதிவுலகத்தை பற்றி எனக்கு தெரியாமல் இருந்த காலத்தில் இப்படி ஓன்று இருக்கிறது.. இதில் உன் எண்ணங்கள், கருத்துக்கள், கற்பனை, காதல் என்று எதை பற்றி வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த மேடையை எனக்கு சுட்டிக்காட்டியவர் என் அறைத்தோழர் சரவணன் என்பவர் தான்..( இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்). பதிவுலகில் நான் படித்த முதல் இடுகை வெளியூர்காரனின் .ஐ லவ் யு பை சைந்தவி மற்றும் மீ டூ சைந்தவி...! - சைந்தவி புருஷன். என்ற இடுகையும் என்னை மிகவும் கவர்ந்தது. ( படிச்சு பாருங்க.. உங்களுக்கும் பிடிக்கும்). இது போன்ற நான் படித்து ரசித்த பல இடுகைகள் தான் காரணம்...



4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா.. நானா... அட போங்க சார்.. காமெடி பண்ணிக்கிட்டு..

தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில இணைத்ததால் கொஞ்சம் பேருக்கு தெரியும், பின்னர் தீராத பக்கங்கள் மாதவராஜ் அண்ணன் மற்றும் வலைச்சரத்தில் சகோதரர் தேவா மற்றும் KRP செந்தில் ஆகியோர் புதிய பதிவர் என்று அறிமுகப்படுத்தினார்கள்.. இதனால் இன்னும் கொஞ்சம் பேருக்கு தெரியும்.. யூத்புல் விகடன் பரிந்துரைத்த இன்றைய இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன் சிலரை அழைத்து வந்தது.. மத்தபடி நான் வெறும்பய தான்..

பிரபலம்ன்னா என்ன.. பிரபலம் ஆக என்ன பண்ணனும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு..உங்களுக்கு புண்ணியமா போகும்..


5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில இடங்களில் மட்டும் சொந்த விசயங்கள் இலைமறை காயாக வந்து போனதுண்டு.. காரணம் சொல்லத் தெரியவில்லை..அதோட விளைவு படிச்ச உங்களுக்கு தான் தெரியும்..


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சொன்னா நம்ப மாட்டீங்க.. ரெண்டு BMW கார், OMR ல ஒரு பங்களா வாங்கியிருக்கேன்.. (சும்மா கடுப்புகள கிளப்பிகிட்டு)

பொழுது போக்கிற்காக எழுத ஆரம்பித்தது தான் ஆனால் இப்போது மொத்த பொழுதும் இதில் தான் போய் கொண்டிருக்கிறது..
சம்பாத்தித்து என்றால் நல்ல நட்புகள், சகோதரர்கள், சகோதரிகள் என ஏராளமான நல்ல இதயங்களை தான்...


7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு தான்.. அதுவும் தமிழில் தான் இருக்கு.. இத கட்டி மேய்க்கிறதுக்கே படாத பாடு படவேண்டியிருக்கு..


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கண்டமேனிக்கு கோபம் வந்திருக்கிறது.. சாதி மாதம் என்ற பெயரில் சாடுபவர்கள் மீதும், சண்டையிடுபவர்கள் மீது கோபம் .. குறையவில்லை இன்னும் இருக்கிறது..

பொறாமை.. நான் படிக்கும் அத்தனை பதிவர்கள் மீதும் வந்ததுண்டு..எல்லோருமே அருமையா எழுதுறாங்க..(என்ன பாக்கிறீங்க.. உங்களை பற்றி தான் சொல்லிகிட்டிருக்கேன்)


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பட்டாபட்டி.. said...
வாங்கய்யா வெறும்பயலே.. வந்தாச்சு.. இருந்தாச்சு.. போயாச்சுனு இல்லாம, நீங்களாவது நல்லா எழுதுங்க..
இது தான் எனக்கு வந்த முதல் பின்னூட்டம்.. இதில் மேற்கூறிய வார்த்தைகள் தான் என்னை இன்றும் எழுத வைத்து கொண்டிருக்கிறது..

முதலில் தொடர்பு கொண்டு பாராட்டியவர் ! பனித்துளி சங்கர் ! அவர்கள் தான்.. அடுத்தது அலைவரிசை அஹமது இர்ஷாத், தேவா அண்ணன், நண்பன் ஜில்ல்தண்ணி என எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது...


10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

என்னை பற்றி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்லங்க.. அந்த அளவு நான் இன்னும் வளரவும் இல்ல..




நண்பர்களும் நினைவுகளும்...



வேண்டா வெறுப்பாக
நுழைந்த கல்லூரியின்
முதல் நாள்..

(முதல் நாளே
நேரம் தவறி சென்றதாய்
ஞாபகம்..)

உள் நுழைந்தால்
அறியாத முகங்கள் அத்தனையும்
புன்னகையோடு..

இருக்கை தேடியபோது
இல்லவசமாய் கிடைத்தது
கடைசி பெஞ்ச்..

அறிமுகப்படுத்திக் கொண்டோம்
அன்பாய் கை குலுக்கினோம்..

இடைவெளிகள் இருந்ததில்லை
இருக்கைகளிலும் - எங்கள்
இதயங்களிலும்...

பகிர்ந்து கொண்டோம்
பல வீட்டு சுவைகளை
ஒற்றை இலையில்...

சின்ன சின்ன
சண்டைகள் - சில
நொடிகளில் சாமதானம்..

சிறுக சிறுக
சிகரத்தை எட்டிய
எங்கள் நட்புடன் கூடவே வந்த

மூன்றாம் மாடி முதல்
வகுப்பறை..

காலேஜ் கேண்டீன்
கடைசி டேபிள்..

பஸ் ஸ்டாப்
டீக்கடை பெஞ்ச்...

தினம் காலை மாலை
ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு
சேர்க்கும் நகரப் பேருந்து..

கல்லூரி நாளில்
கடைசியாய் பார்த்த
ஆட்டோகிராப் படம்...

எங்கள் சேட்டைகளையும்
சில்மிசங்களையும்
பொறுத்துக்கொண்டு வாழ்க்கையின்
வெற்றிப்படியில் கை பிடித்து ஏற்றி விட்ட
குருக்கள்..

என

இனி என் வாழ்வில் கிடைக்காத
நொடிகள்,
நிமிடங்கள்,
நாள்கள்
ஆண்டுகள்..

என் கல்லூரி வாழ்க்கைக்கும்,
நான் எழுதிக்கொண்டிருக்கும்
இந்த வார்த்தைகளுக்கும்
முற்றுப்புள்ளி வைத்து விடலாம்...

ஆனால்

என் நினைவுகளுக்கும்...

வாழ்கையின் தேவைகளுக்காக
இவ்வையகத்தின் நான்கு புறமும்
சிதறி கிடந்தும்
வார விடுமுறை நாளில்

"என்னடா மச்சான் எப்படியிருக்க"

என்று கேட்கும் அந்த உயர்ந்த நட்புகளுக்கும்...

இனிய நண்பர்கள் தின நாள் வாழ்த்துக்கள்...


என்ன இவன் கூட படிச்ச பசங்களுக்கு மட்டும் தான் வாழ்த்து சொல்றான்.. அப்போ நாங்கெல்லாம் யாரு உனக்கு நண்பர்கள் இல்லையான்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது... எப்படிங்க நான் உங்களை மறப்பேன்...

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை ..
(இது வாடகை சரக்கு)

மெதுவாய் புலரும்
பனிக்கால பொழுது போல
நமக்கிடையே விரிந்தது
நட்பு..



குளிர் துடைக்கும் சூரியனின்

கதிர்
போல நீளட்டும் - நம்
நட்பின் எல்லைகள்..

என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்களோடு..
வெறும்பய
நட்பின் நினைவாக இந்த ரோசாப் பூ
..

யாரும் சண்ட போடாம, கையில முள்ளு குத்தாம எடுத்துக்குங்க...