குறி தவறும் "குறிகள்"


இனி எந்த பிரயோசனமுமில்லை 
அவர்கள் தருவதற்கோ நீங்கள் 
பெறுவதற்கோ ஒன்றுமில்லை
இனியும் தாமதப்படுத்த வேண்டாம் 

எடுத்துக்கொள்ளுங்கள் ஆளுக்கொரு 
கத்தியை கையில்  
பேனா கத்தி, 
வெட்டுக்கத்தி 
வீச்சருவா, 
வாள் என்று எதுவாக இருந்தாலும் 
ஏன் 
கதிரறுக்கும் அருவாவாக 
இருந்தாலும் பரவாயில்லை, 

அச்சம் தவிருங்கள், 
மனதை தெளிவாக்கி 
குறிதவறிப்பாயும் எந்த "குறி"யாக 
இருந்தாலும் ஒவ்வொன்றாக 
வெட்ட ஆரம்பியுங்கள் 

தந்தை 
மகன் 
கணவன், 
மாமனார் 
வழிப்போக்கன் 
கூடவே பயணிப்பவன், 
ஒரே அலுவலகத்திள் வேலை வார்ப்பவன், 
பக்கத்து இருக்கையில் அமர்ந்து படம் பார்ப்பவன்  
எவனா இருந்தாலும் பாரபட்சம் வேண்டாம் 

யோசிக்காதீர்கள் 
"குறி" தவறுவதாக  இருந்தால் 
குறி தவறாமல் 
வெட்டிக்களைந்து விடுங்கள்
களைகளை களைவது போல..

காதல் கொன்று ராகம் தின்பவள்..




மனம் கலைத்துக்களைந்த மனிதர்களால்
அரங்கம் நிரம்பியிருக்கிறது,
தானே செய்த இசைக்கருவியொன்றை
கையில் எந்தியிருக்கிறாள் அவள்
இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த
இசைக்கருவியில் என்
மூளையிலிருந்து இதயத்திற்கு வரும்
நரம்புகளை மட்டும் தனியாய்
பிரித்தெடுத்து நேர்த்தியாய்
வரிந்து கட்டியிருக்கிறாள்,
நரம்புகளை மீட்ட
விரலிடுக்குகளில்
என் நாவின் நுனியை
இதய வடிவில்
கத்தரித்து கவ்வியிருருக்கிறாள்,
கூச்சலும் குழப்பமுமாய்
குழுமியிருந்த அரங்கம்
உயிர் பிரியும் வேளையில் தோன்றும்
அமைதியை போல்
மௌனம் கொள்கிறது
அவள் இசைக்கருவியை கையிலேந்தி
வாசிக்க துவங்குகிறாள்
ஒரு சில துளிகளுடன்
மௌனமாய் ஆரம்பித்து
அதிகம் நீளாமல் ஆர்ப்பரித்து அடங்கும்
பெருமழையை போல ஒலிக்க ஆரம்பிக்கிறது
இசை என்ற பெயரில்
என் அலறல் சத்தம்,
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி
அமைதியாய் அரங்கின் ஓரமாய்
கிடக்கிறது அவள்
முன்னெச்சரிக்கையாய் பறித்தெடுத்த
என் இதயம்
கூடவே துணையாய்
என் காதலும்.

"மழை"யாலானவை..



நீ அடங்க மறுத்த
பொழுதுகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது
ஒவ்வொரு அடை மழையும்.. 





என்றோ மழை நாளில் 
நீ வந்து சென்ற ஞாபகத்தை 
பத்திரமாய் பதித்து வைத்திருக்கிறது 
என் வீட்டு முற்றம் 
உன் காலடி சுவடுகளாய். .






பெய்யும் முதல் மழையில் 
மண் வாசம் வீசுமாம் 
எனக்கோ 
விழுகிற ஒவ்வொரு துளியிலும் 
உன்வாசமே வீசுகிறது 







கவிதைகள் கரையும் 
சிறு தூறல்களுக்கு 
கொஞ்சம் கூட 
சளைத்ததாய் இல்லை 
எங்கிருந்தோ காற்றில் 
ஆடியசைந்து வரும் 
சில இறகுகள்..







மழை 
எப்போதும் போல 
சுயம் தொலைக்காமல் 
மழையாகவே 
பெய்து கொண்டிருக்கிறது 
நான் தான் 
கரைந்து கொண்டிருக்கிறேன் 
துளி 
து
ளி
யா
ய்.







HUNT FOR HINT 2 - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம் ,

பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடைபெற்ற ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அந்த போட்டி மேலும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.


Terror Kummi count down starts......
Are you ready.... :-)



ஆம், நண்பர்களே உங்கள் அறிவுத்திறனை சோதித்துப்பார்க்கும் தருணம் வந்துவிட்டது.... நாளை புதன் கிழமை (12/09/2012) காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டி தொடங்க இருக்கிறது. மொத்தப்பரிசு ரூ. 10,000....


நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக ’முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ வெற்றியாளர் நீங்களாககூட இருக்கலாம். போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

புதிர் போட்டிப்பற்றிய  மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள 


கொலையும், தற்கொலையும் பின்னே ரைட்டர் நாகாவும்


தோழர்  "ரைட்டர் நாகா" அவர்களுக்கு வணக்கம்,

தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த அவளும் அவனும் பின்னே ரைட்டர் நாகாவும்! என்ற பதிவை படித்தேன், தங்கள் எழுத்துக்களிலுள்ள உயிரோட்டத்தை பார்த்த அந்த நொடியில்.அகம் மகிழ்ந்தேன் அதனால் சுயம் தொலைத்தேன்.தங்களை நான் ஒரு முறை கூட பார்த்ததில்லையாததால்  தங்களுக்கு நான்கைந்து முறை தொலையாடி பேசியிருக்கிறேன், தங்களின் மெதுவான பேச்சு, பேச்சிலுள்ள லாவகம், பேச்சினூடே தாங்கள் இலைமறை காயாக சொல்லும் தகவல்கள் போன்றவற்றை கேட்ட மாத்திரத்திலே "மொழி" திரைப்படத்தில் மண்டையில் மணி அடிப்பது போன்று எனக்கும் எனக்கும் ஒரு சத்தம் கேட்டது. மிக அருமையான சத்தம் உன்னித்து என் சிந்தையை கூர்மையாக்கி கேட்டதில் அந்த சத்தம் சில நொடிகள் ஒப்பாரி சத்தம் போலவும், சில நொடிகள்  பறை கொண்டாடிக்கும் சாவு மேளம் போலவும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னலோரத்தில் அமர்ந்து அதிவேகத்தில் பயணிக்கும் அழகு பதுமையின் முகம் போன்று தெளிவில்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தது அப்போதே நான் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன் தங்கள் மிக விரைவில் மிகச்சிறந்த எழுத்தாளனாகி ரைட்டர் ஆவீர்கள் என்று, ஞானிகள் சொல் பலிக்காமல் போகாது என்பார்கள்.

கடந்த சில காலங்களாக தங்களிடம் சரிவர தொலைபேச முடியவில்லை. தங்களை தொடர்பு கொள்ள நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தொல்வியிலையே வெற்றிகரமாக முடிந்தன. அப்பொழுது தான் நான் தாங்கள் தங்களை செம்மையாக்கி, சீர்படுத்தி, சிகையலங்காரம் செய்து ஒரு சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் ரைட்டர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கலாம் என்னை அறியாமல் எண்ணிக்கொண்டேன். ஒரு வேளை அக்காலகட்டத்தில் தங்களை நான் தொந்தரவு செய்திருந்தால் தாங்கள் எழுத்தாளர் என்று சொல்லக்கூடிய ரைட்டர் ஆக முடியாமல் போயிருக்கலாம். எந்திரன் படத்தில் வரும் ரஜினி முந்தைய அசத்தல் பிகரும் இப்போதைய அட்டுபிகருமான ஐஸையும் மறந்து வசீகரன் என்ற ரோபோ ரஜினியை குளோனிங் செய்து உருவாக்கியது போன்று தாங்கள் அனைவரையும் மறந்து ஆற்றங்கரை, குளத்தங்கரை, மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் விடுதிவாசல்கள் போன்ற இடங்களில் காத்திருந்து அனைத்தையும், அனைவரையும்  மறந்து எழுத்தாளர் ஆவதற்கு தாங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் முயற்சிகள், உழைப்புகள் போன்றவற்றை நான் கேள்விப்பட்ட வேளையில் உள்ளம் உடைந்து வெந்து வெம்பிப்போனேன் தோழரே. 

இப்படி வெம்பிப்போன மனதுடன் தும்பிகளை துணைக்கழைத்து கொஞ்சி குலாவி கொண்டிருந்த நல்லதொரு வேலையில், பொழுதினில், நேரத்தில் சமயத்தில் தான் தாங்கள் எழுதிய இலக்கிய செறிவு வாய்ந்த படைப்பை பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற எண்ணம் என் மனதில் ஒரு மின்னல் போல வந்து மறைந்தது என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்ள வெட்க்கப்படவோ வேதனைப்படவோ வருத்தப்படவோ இல்லை. 

இனி தங்கள் இலக்கிய செறிவு மிகுந்த கட்டுரைக்கு வருவோம்..

தோழரே தங்கள் பதிவின் முதல் வரியையே "அங்கிங்கெனாதபடி" என்று ஆரம்பித்தது தான் எனக்கு  அளப்பரிய ஆச்சர்யத்தையும் வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இப்படி ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாங்கள்  சாயங்காலம், மழைக்காலம், வெயில்காலம் போன்ற எத்தனை விதமான காலங்களிலுள்ள ஏடுகளையும் கல்வெட்டுகளையும் புத்தகங்களையும் இணைய பக்கங்களையும் புரட்டியிருப்பீர்க்ள என்பதை நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறது ஆகையால் கொஞ்சம் பொறுத்திருங்கள் தோழரே நீர் அருந்திவிட்டு வருகிறேன். 

நிற்க...

மீண்டும் வருவோம் முதல் வரிக்கே... தங்கள் கட்டுரையின் முதல் வரியிலையே நான் பார்த்த மாத்திரத்தில வாய்திறந்து சுவாசிக்க வைத்த இன்னொரு விஷயம் ஊழல்  என்ற வரத்தை தான். ஊழல் பற்றி தெரிய வேண்டுமானால் தாங்கள் அரசியலில் எத்தனை பழங்களை தின்று கோட்டை போட்டிருப்பீர்கள் என்று நினைக்கும் போது எனக்கு விழி பிதுங்குகிறது. 

அடுத்தடுத்த வரிகளை பற்றி எனக்கு என்னசொல்வது என்றே தெரியவில்லை தோழரே. உணவு, உடை, இருப்பிடம் என்பனவற்றை பார்க்கும் போது தங்களின் வாரிக்கொடுக்கும் வள்ளல் குணம் எனக்கு தெரியவந்தது. அதற்கடுத்த வரிகளில் தாங்கள் எழுதியிருக்கும் சிலவார்த்தைகளை பார்க்கும் போது யாரையோ கன்னாபின்னாவென்று திட்டுவது போன்று தோன்றியது, அதுவே எனக்கு தங்கள் மிகவும் கோபக்காரர் என்பதையும் சொல்லாமல் சொல்லிற்று. 

அதற்கு பிந்தைய வரிகளை எவ்வளவு தரம் வாசித்தும் என் சிறு மூளையின் ஒரு மூலைக்கு கூட எதுவும் பிடிபடவில்லை. தமிழ் போன்ற சாயலில் வேற்று மொழிகள் கலந்து எழுதலாம் என்பதையும் அங்கு தான் நான் தெரிந்து கொண்டேன். எனக்கு கொரிய மொழியில் எழுதும் ஒரு சகோதரரை நன்றாக தெரியும் அவரின் எழுத்துக்களை படித்து படித்து தற்போது சிறிதளவு கொரிய மொழி கட்டுரைகள் என்னால் படிக்க முடிகிறது ஆனால் தங்களின் இந்த கட்டுரையின் பிந்தைய பகுதிகளை  நான் இதுவரையில் கேள்விப்படாத ஒரு மொழியில் தான் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்பது எனது அனுமானம். இவற்றை எல்லாம் பார்த்தால் நாம் என்ன மாதிரியான சூழலில் வாழ்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.  ஆகையால் நானறிந்த விஞ்ஞானிகளும் அறிஞர்களுமான டெரர்கும்மி நண்பர்களிடம் தங்களின் கட்டுரையை ஆராய்ச்சிக்கு அனுப்பலாம் என்று என் ஒரு மனதுடன் முடிவு செய்திருக்கிறேன். 

இவற்றையெல்லாம் வைத்து பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஆண்டடிகளை சைட்டு அடிக்கும் தொலை நோக்கு பார்வையுடன் கொஞ்சம் தூரமாக நின்று பார்த்தால் தாங்கள் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் என்று இலக்கியவாதிகளால் கூறப்படும் ரைட்டர் என்பதில் எந்த ஐயமில்லை. 

மன்னிக்கவும்  தோழரே  தங்களை பற்றியும், தங்களின் எழுத்துக்களை பற்றியும் இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டும் போல தான் தோன்றுகிறது ஆனால் தங்களின் அந்த இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிக்க கட்டுரையை பற்றி யோசிக்கும் தருவாயில் கூடவே கொலை மற்றும் தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து தொலைக்கின்றன ஆகையால் என் உயிருக்கு பயந்து நான் இந்த புலம்பலை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.  

"மீண்டும் சந்திக்க முயற்ச்சிக்கிறேன்"
நன்றி. 


ஆனாலும் We Miss you DAD..



நான் பிறந்தவுடன் என்னை வாரியெடுத்து 
நீ உச்சி முகர்ந்திருக்க்லாம் 

உன் தோளிலும் மாரிலும் கிடத்தி 
தாலாட்டு பாடி உறங்க வைத்திருக்கலாம் 
நான் தவழ ஆரம்பித்த பொழுதுகளில் 
நீ எல்லையில்லா ஆனந்தமடைந்திருக்கலாம் 
தட்டு தடுமாறி எழ முயற்சித்து 
கீழே விழுந்த நாட்களில் 
அழுத என்னை அரவணைத்துவிட்டு 
நீ அழுதிருக்கலாம் 
நான் நடை பயில 
நீ உருட்டுவண்டியாகியிருக்கலாம் 
நான் நடக்க துவங்கிய பின் 
உன் விரல்கள் பிடித்து 

நான் உன்னையோ 
நீ என்னையோ 

பின் தொடர்ந்திருக்கலாம் 

இவ்வளவும் செய்திருக்கலாம் நீ 
ஆனாலும் 

என்ன செய்ய 
நினைவுகளை தேக்கி வைக்கும் 
பருவம் நான் அடையும் முன்னரே 
நாங்கள் வேண்டாமென அனாதைகளாக்கிவிட்டு 
இறைவனடி சேர்ந்த உன்னை வணக்குவதை விட 

நீயில்லாத நாள் முதல் நீயாகவும் மாறி 
நீயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நினைப்பை 
இன்று வரை எங்களுக்கு வரவிடாமல் 
 தாய் என்ற பந்தத்தில் இருக்கும் எங்கள் தெய்வத்தை 
என்றும் வணங்கினாலும் இன்று ஒரு முறை கூடுதலாக 
உன் சார்பாக வணங்குகிறேன் அப்பா. 

ஆனாலும் We Miss you DAD ...

புது வீடு - நனவாகிய என் முதல் கனவு

கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஆயிரம் இருந்தாலும் எல்லாவற்றையும் பின் நிறுத்தி முதல் வரிசையில் இருமார்ப்புடன் நின்றுகொண்டிருந்தது மனதிற்கு பிடித்த மாதிரி பிறந்த மண்ணில் எனக்கே எனக்காக என்று சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை. கடைசியாக பல இன்னல்களை வெகு சிரத்தையுடன் கடந்து ஒவ்வொரு அங்குலமும் எனக்கு பிடித்த மாதிரி அழகாய் மாளிகை ஒன்றை செதுக்கி கடந்த மாதம் இறுதி நாளில் கிரக பிரவேஷமும் செய்து விட்டு மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இப்போது எனது சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

இதுக்கு மேல மொக்க போட்டா நல்லாயிருக்காது வாங்க வீட்டை பார்க்கலாம். 





வாங்க, வாங்க என்ன அங்கேயே நின்னுட்டீங்க நம்ம வீடு தான் தைரியமா உள்ள வாங்க 




கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சம்பிரதாயங்களை முடிச்சிட்டு வீட்டை சுற்றிப்பார்ப்போம் 






நல்லபடியா முடிஞ்சாச்சு வாங்க வீட்டை பார்ப்போம். 



இது தாங்க ஹால்.. 


வாங்க ரூம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் 




நமக்கு எல்லாருக்கும் பிடித்தமான இடமான டைனிங் ஹால் பார்க்கலாம் வாங்க 








இனி நாம போகப்போறது தன மிக முக்கியமான இடம், என்ன புரியலையா  கல்யாணத்துக்கு அப்புறமா பசங்க எப்பவும் இருப்பாங்களே அந்த இடம் தான்.  அட கிச்சன் தாங்க..




ஹேலோ ஹேலோ எங்கே கிளம்பிட்டீங்க, இன்னும் முடியல வாங்க என் கூட மாடிக்கு போலாம்




வாங்க வாங்க இது மேல் மாடி தான்



இது தான் மேல் மாடியிலுள்ள ரூம்.

இனி நம்ம பார்க்க போறது தான் ஸ்பெசல் இடம். நண்பர்கள் நீங்கெல்லாம் வரும் போது விடிய விடிய உக்கார்ந்து அரட்டை அடிக்க ஏதுவான இடம் இது தான்




இதை திண்ணைன்னு சொல்லி வந்தவங்க இப்போ சிட்டவுட் ன்னு சொறாங்க.


வாங்க கீழே போலாம்



பார்த்து சூதானமா இறங்கி வாங்க



வீட்டை சுற்றி பார்த்தாச்சா , எப்படியிருக்குன்னு சொல்லுங்க


என்னங்க அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. கொஞ்ச நேரம் உக்காந்து என் கூட பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி கால்ல சக்கரத்தை கட்டிட்டு கிளம்புறீங்களே.. நீங்க வீட்டுக்கு வந்ததில எனக்கு ரொம்ப சந்தோசங்க.

நண்பர்கள் உங்களுகாக என் வீட்டு கதவுகள் எப்போது திறந்தே இருக்கும். 

கற்றை நினைவுக்கு ஒற்றை மீன்..




காலம் தொலைத்த 
வருடத்திலொரு 
நாளொன்றின் இரவில்
யாருமில்லை என்றறிந்து 
என் வீட்டிற்கு 
வலது கால் வைத்து 
உள் நுழைந்தாய்  

பொறுமையாய் வீட்டை சுற்றிக்காட்டிக் 
கொண்டிருந்தேன் 
நான் 
எதிலும் நாட்டம் காட்டவில்லை 
நீ..

கடைசியாய் 
வா உன்னை பிரதிஷ்டை செய்யப்போகும் 
கருவறையை காட்டுகிறேன் என்றழைத்தேன் 
சட்டென்று ஒட்டிக்கொண்டது 
பூரண நிலவாய் புன்னகையும் 
வெளித்தெரியா வெட்கமும் 

மௌனமாய் 
பின் தொடர்ந்து
நடந்தாய் 
சில அடிகள் தாண்டியதும் 
தழுவிக்கொண்டது
நம் கைகள்

அறை 
நெருங்க நெருங்க 
நீ என்னிடம் நெருங்க
நான் நொறுங்க 
நாம்
கட்டிலை நெருங்கினோம்
நானுன்னை பிரதிஷ்டை செய்ய 
ஆடைகள் களைந்தேன் 

முத்த அபிஷேகத்தில் 
துவங்கி 
வியர்வை அபிஷேகத்தில் முடிந்தது

காற்றுபுகா இடைவெளி 
கணநேர மௌனம் 
எக்கச்சக்க முத்தங்கள் 
இதயங்கள்
இடம் பெயர்ந்தன 

சிறிய இடைவேளைக்கு பின்னர் 
என்னை விடுதலை செய்து 
கருவறையை 
கண்களால் அளவெடுத்துக்கொண்டே  
வெட்க்கம் கலந்த முகச்சுளிப்புடன்  
"என்ன மட்டமான டேஸ்ட்டா உனக்கு" 
என்னை திட்டிக்கொண்டே 
நீ
சன்னல் திரைச்சீலை 
புக் செல்ப் 
கம்ப்யூட்டர் டேபிள் 
பெட் கவர் 
........
.........
.......... etc.. etc  
என்று எல்லாவற்றையும் சரி செய்து
உனக்கு பிடித்த வெண்மை நிறத்தையும்  
அறை முழுவதும் விதைத்து சென்றாய்

ஆண்டுகள் கடந்தபின்
கண்ணாடித் தொட்டியில்  
உன் பெயரிட்டு 
ஒற்றை மீனொன்று வளர்க்கிறேன் 

உன்னோடு சேர்ந்து
எல்லாம் மாறின
இன்னும் மாறாத என்னையும் 
உன் வாசம் விட்டுப்போகாத 
என்னறையையும் 
மீண்டும் ஒரு முறை 
வந்து பார்த்துவிட்டு போ!

வரும் போது 
என் பெயர் சுமந்த உன் 
குழந்தையையும் கூட்டி வர மறவாதே....

அஸ்தமனம் - விடியல் - கனவு


நான் என்ன  எழுதினாலும் அதற்கு நக்கலும் நையாண்டியுமாக எதிர்கவிதை எழுதுவதில் வல்லவர்கள் எனது நண்பர்கள். அதே போன்று  நண்பர்கள் இருவர்  நக்கல் நையாண்டி இல்லாமல் நாசூக்காய் எழுதிய கவிதைகளை இங்கே ..  



அஸ்தமனம் 

முற்று பெறாத நாளொன்றின்  
இறுதி நேரத்தில் வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப்பூக்கும் செடி 
பிரசவித்த தலைப்பூவொன்றின் வாசம் 
கருமையைக் கவ்விப்பிடித்த இரவின் 
ஓரங்களை கிழித்துக்கொண்டு 
என் தூக்கம் கலைக்கிறது

நீங்காமல் நீளும் பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் தழுவும் ஆழப்புகை
நெஞ்சம் பற்றியெரியும் நாட்டு வாற்றுச்சாராயம் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த இரவும் அஸ்தமிக்கும் 
அக்ககணத்தில் அவள் 
கல்லறைக்கு பக்கத்திலிருக்கும் 
அந்த செடியும்.. 


விடியல் - எஸ்.கே  

தொடங்கி விடாத நாளொன்றின்  
வைகைறை நேரத்தில் வந்தவன் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப் பூவொன்றின் 
மலர்ந்திடும் ஓசை 
வெண்மையைக் கவ்விப்பிடித்த விடியலின் 
கதிர்களை ஒருபுறம் தள்ளி
என் தூக்கம் கலைக்கின்றது

புத்தம் புதிதாய் நித்தம் நீளும் 
பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் முழுதும் தென்றலின் வாசம்
நெஞ்சம் பற்றித்தழுவும் வண்ணக் கனவுகள் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த விடியலும் தொடங்கும் 
அக்ககணத்தில் அவன் 
மனக் கோயிலுக்குள்ளிருக்கும் 
தூணாய் நான்...


கனவுகள் -  வைகை  

முற்று பெறாத நிமிடத்தின்
இறுதி நொடியில்  வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
கனவு பூக்கும்  செடி 
பிரசவித்த காதல்கனவின்  ஒளியில்
வெறுமையைக்  கவ்விப்பிடித்த மனதின்  
பாரங்களைக்  கிழித்துக்கொண்டு 
என் சோகம்  கலைக்கிறது

நினைவுக்குள்  நீளும் பல கனவுகளுக்கு மத்தியில் 
வெற்றுமார்பு தழுவும் உன் நினைவு
நெஞ்சத்தை நெகிழ்ச் செய்யும் உன் புன்னகை  
முன்னிலையில் முடிவெடுக்கிறேன்

இந்த கனவுகள் முற்றுப்பெறும் 
அக்ககணத்தில் அவள் 
கண்களுக்கு உள்ளிருக்கும் 
என்னைப்பற்றிய கனவுகளும்.......



உனக்கானவை சில - நிர்வாண நிலவு..


விரக்தியுடன் ரசிக்கிறேன் 
நான் ,
உன் நினைவுகளுடன்..