அறிந்ததும் அறியாததும் 3 - தமிழிசை & தமிழிசைக் கருவிகள்

தினமும் புதிதாய் வந்து கொண்டிருக்கும் நவீன இசையை கேட்டு ரசித்து நாம் மறந்து போன தமிழனின் பாரம்பரிய இசை பற்றியும் , தமிழிசைக் கருவிகள் பற்றியும் இந்த பதிவு..



இசைகளிலேயே பழமையான இசை "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய தமிழுடன் பிறந்தது நம் தமிழிசை" .

உயிரும் உடம்பும் போன்றது நம் தமிழர்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு. தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு தாய் கருவுற்றால் நலுங்கு பாட்டு , குழந்தை பிறந்த்ததும் தாலாட்டுப் பாடல், சிறு வயதில் நிலாப்பாடல், இள வயதில் காதல் பாடல், திருமணத்திற்கு திருமணப் பாடல், மரணமடைந்ததால் ஒப்பாரிப் பாடல் என்று தமிழனின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றியிருந்த்திருக்கிறது. (தற்போதைய காலகட்டத்தில் நலுங்குப் பாடல், தாலாட்டு, நிலாப்பாட்டு, திருமணப் பாடல், ஒப்பாரி என்று எதுவும் வழக்கத்தில் இருப்பதாக தெரியவில்லை, பழைய தமிழ் படங்களை தவிர வேறெங்கும் இவற்றை நான் பார்த்ததுமில்லை, இவற்றில் இன்று வழக்கத்தில் இருப்பது காதல் பாடல்கள் மட்டும் தான், திரைப்படங்களில் மட்டும்.)

இலக்கியங்கள் படைத்த தமிழும், இசையும் இன்று இல்லாமல் போகும் நிலையில்....


* தமிழிசைக் கருவி - வீணை


வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.


* தமிழிசைக் கருவி - யாழ்




யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.
பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.


* தமிழிசைக் கருவி - பறை



பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்.

பறை கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.


* தமிழிசைக் கருவி - தவில்


தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும்.



* தமிழிசைக் கருவி - உறுமி மேளம்




உறுமி மேளம் ஒரு கொட்டும் இசைக்கருவியாகும். தமிழ்நாட்டு நாட்டுப்புற இசையிலும், கோவில்களிலும் , தமிழிசையிலும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.


* தமிழிசைக் கருவி - மிருதங்கம்



மிருதங்கம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.
* தமிழிசைக் கருவி - மத்தளம்.



இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ்ப்பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம். பலவையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும்.மத்தளத்தின் ஸ்ருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்ப்படுகிறது.


* தமிழிசைக் கருவி - முரசு




முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

முரசுகளில் வீர முரசு, தியாக முரசு, நியாய மிராசு என மூன்று வகை உண்டு. வீர முரசு போர்க்காலங்களில் பயன்படுத்தப்படும் முரசு, இந்த முரசி வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தியாக முரசு என்பது வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு, நியாய முரசு என்பது நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

* தமிழிசைக் கருவி - பேரிகை

பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

* தமிழிசைக் கருவி - தமுக்கு
தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம், நீதிமன்றம், கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அடிக்கும் ஒரு இசைக்கருவியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


உங்களுக்கு அரிய தவல்கள் சொல்லும் அறிந்த்ததும் அறியாத்ததும் தொடரும் ...


10 comments:

a said...

நல்ல தொகுப்பு...

இசைக்கருவிகள் இன்னும் நிறைய உள்ளன...
அவற்றை பற்றியும் எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்......

பனித்துளி சங்கர் said...

இசைக்கருவிகளுடன் கலந்த தகவல்கள் இன்னும் அழகைக் கூட்டுகிறது பதிவிற்கு . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

ஜெயந்த் கிருஷ்ணா said...

நன்றி வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...

நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

வந்தமைக்கும் வாசித்தமைக்கும் ..

Unknown said...

ஐயா,பார்ப்பனீயம்j திராவிட தமிழர்களின் இசையை மட்டும் திருடி ஒளித்து வைத்ததா அல்லது இசைக் கருவிகளையும் சேர்த்தே திருடியதா?காணாமல் போன இந்த சமாசாரங்களை திரு இராமதாஸ் ஐயா மீட்டு விட்டாரா என்று தெரியப் படுத்தவும்.

prabhadamu said...

இசைக்கருவிகளுடன் தகவல்கள் super நண்பரே.

பகிர்வுக்கு நன்றி நண்பரே !

ஜோதிஜி said...

தேவையான பதிவு போட்டிக்கு உகந்த பதிவும் கூட.

நீச்சல்காரன் said...

தமிழ் மண விருதுக்கு வாழ்த்துகள் நண்பா

உமர் | Umar said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் ஜெயந்த்.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள் நண்பா.

Anonymous said...

yazhum viiNaiyum paRRis silappathikaaaraththil sollap paddirukkiRathu. athan padi avai irandum onRe. Check it.