கடுதாசி என்ற என் காதல் தறி..

உனக்காக கவிதை எழுதுகிறேன்  என்று இதுவரை புரிந்தும் புரியாமலும் பலவற்றை கிறுக்கிவிட்டேன் , அத்தனையும் நீ மட்டுமே படிக்க வேண்டுமென  என் மனமெனும் நிலவறையில் எவருமறியாமல் புதைத்து வைத்திருக்கிறேன். இதோ இன்று நமக்கு பிறந்த நாளானதால் முதல் முறையால் உனக்கொரு கடிதம் எழுதலாமென களத்தில் இறங்கியிருக்கிறேன். 



நான்  பிறந்தது வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா.. !! அப்படியிருக்கையில் எப்படி இன்றைய தினத்தை நம் பிறந்த நாள் என்று சொல்கிறேன்  என்று யோசிக்கிறாயா..!!!   எனக்கு தெரியும் நீ அப்படி தான் யோசிப்பாய் என்று...   உனக்கு என்னை நேசிப்பதை தவிர வேறென்ன தெரியும், எவரேனும் சூரியன் மேற்கில் உதிக்கிறது என்றாலும், வானவில்லின் வர்ணமிழந்து போய் விட்டது என்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க்காமல் அப்படியா..! என்று ஆச்சர்யமாய் கேட்ப்பது  போல உன்னிரு புருவம் நெருக்கி  பார்த்துவிட்டு மீண்டும் என் புகைப்படத்தின்  மீது முகம் புதைக்கும் பேதையல்லவா நீ..  

அடி மக்கு பெண்ணே சொல்கிறேன் கேள்..

இன்று நமக்கு மட்டும் பிறந்த நாளல்ல, காதலால் காதலிக்கப்பட்டு காதல் தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்ட உன்னையும் என்னையும் போல  உலகமெங்கும் காதலித்துக்கொண்டிருக்கும் அத்தனை  காதலர்களுக்கும் இன்று தான் பிறந்த நாள், அதானால்  தான் உனக்கும் எனக்குமில்லாத இந்த நமக்கான நாளில் உனக்கான எனது முதல் கடிதத்தை எழுதிகிறேன்.

கடிதம் எழுதுகிறேன் என்று வீராப்பாய் ஆரம்பித்துவிட்டேன் ஆனால் என்ன எழுதுவது எதை பற்றி எழுதுவது என்றறியாமல் எழுத்துக்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்.

உன்னையும் என்னையும், நம்மையும் பற்றி எழுத ஆயிரம் இருக்கிறது, ஆனால் எதை பற்றி எழுதுவது என்பது தான் குழப்பமாயிருக்கிறது..  

மாநகர பேருந்தின் பின்னிருக்கையில் ஜன்னலோரமாய் அமர்ந்து தென்றலுடன் பேசிக்கொண்டிருந்த தேவதையாய் உன்னை பார்த்த அந்த முதல் நாள்..  ஒவ்வொரு முறை வீட்டில் அம்மாவுடன் சண்டையிடும் போதும் கோபத்தில் "என்ன எதுக்குமா பெத்த" என்று கேட்ப்பது உன்னை பார்த்த அக்கணம் நினைவில் வர, இதோ இந்த தேவதைக்காக தான் நீ பிறந்தாய் என்று நீ பேசிக்கொண்டிருந்த தென்றல் வந்து காதோரமாய் சொல்லிப்போன அந்த நிமிடங்களை  பற்றி எழுதவா...

மறுநாள்  உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை 10 மணி வரை தூங்கும் பழக்கமுள்ள நான் நள்ளிரவு 6  மணிக்கே எழுந்து பேருந்து நிலையம் வந்து நீ எந்த பேருந்தில் வருவாயென்று  தெரியாமல் ஒவ்வொரு பேருந்தின் கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி உன்னைக் காணாமல் ஏமாந்து போய் திரும்பி வந்தததை பற்றி எழுதவா..

தேடல்களுக்கென  கரைந்து போன நாட்களில் ஒவ்வொரு நாளும் இன்றாவது உன்னை என் கண்ணில் காட்டு என்று பெயர் தெரியாத தெய்வங்களிடம் கூட வேண்டிக்கொண்டதையும்,  உன்னை காணாமல் ஏமாற்றங்களுடன் திரும்புகையில் அந்த தெய்வங்களை திட்டியதை பற்றி எழுதவா..

பிறிதொரு நாளில் தோழி ஒருத்தியை பார்க்க கல்லூரிக்கு வந்த போது தோழிகளின் நடுவில் தேவதையென  தாவணியில் உன்னை கண்ட அந்த நிமிடங்களை பற்றி எழுதவா..

அடுத்தடுத்த நாட்களில் உன்னை பார்க்க உன் கல்லூரிக்கு வந்ததால் பெண்கள் கல்லூரியில் உனக்கென்ன வேலையென்று உன் எதிரிலேயே வாட்ச்மேன் என் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது நீ சிரித்ததையும் நான் அப்போது குறுகிப்போனதை பற்றியும் எழுதவா..

அடிகளும், அவமானங்களும் தேவதை உனக்காக தானே என்று மீண்டும் உன் கல்லூரி வந்து ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி கொடுத்து வாட்ச்மேனை  தோழனாக்கிய கதையை பற்றி எழுதவா..

உன்னை தேடி அலைந்ததால் நான் தொலைத்த என் கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக அம்மாவும் அப்பாவும்  என் முதுகு வீங்கும் வரை பாராட்டு விழா  நடத்தியதை பற்றி எழுதவா..

எழுதவா....எழுதவா...இத்தனை தூரம் எழுதிவிட்டேன், இதையே தேர்வுகளில் எழுதியிருந்தால் என் முதுகாவது வீங்காமல் பிழைத்திருக்கும்...யார் கண்டது? என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்......இதை நீ படிக்கும்போது சிந்தும் கண்ணீர்த்துளியை ஏந்திக்கொள்ள  கைகளில்  உன் அருகில் நான் இருப்பேன்.....என்னைப்பற்றி என்னைவிட தெரிந்த உனக்கு இப்படி பொய்களை நம்புவதில் நியாயமில்லை,

உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில் காண்பிக்க போகிறேன்? 

எத்தனை பக்கங்கள் நான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் என்னைப்பார்த்ததும் அடித்துக்கொள்ளும் உன் இமைகளும், என் மூச்சு காற்றிலே மலர்ந்துவிடும் நம் காதல் பூக்களும், அத்தனை பக்கங்களையும் கிண்டலுடன் பார்த்துவிட்டு...நம் அனுமதி இல்லாமலே ஊர் சுற்ற சென்றுவிடும்.....

நம் காதலை கை கோர்த்து சுற்ற விட்டு விட்டு......இந்த எழுத்துக்களை மட்டும் யாருக்கு அர்ச்சனை செய்யப்போகிறேன்?

உன் கூந்தலை விட்டு வந்துவிட்டால் பூக்கள்கூட குப்பைதான்.....நம் காதலை சொல்லாத என் எழுத்துக்களும் எனக்கு எப்போதும் குப்பைதான்!

நீ வரும் தடம் பார்த்து என் எழுத்துக்களை தூவிக்கொண்டே வருகிறேன்.....அதுகூட அழுத்திவிட்டால் என்னிடம் சொல்....என் இதயத்தை எடுத்து வைத்து உன் பாதங்களில் ஒத்தி எடுக்கிறேன்!

  
இப்படிக்கு,
நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்.. 


ஜோதி - கடைசி பாகம்


  கதையின் முந்தைய பாகங்கள்.. 


  
டாக்டரை அனுப்பி விட்டு வெளியே கிளம்பினேன். போரடித்தது. சரி அருண் வீட்டு செல்லலாம் என கிளம்பினேன். அவன் மனைவி கூட ஊருக்கு போயிருக்காங்க. கொஞ்ச நேரம் பேசி விட்டு வரலாம் என கிளம்பினேன். நான் அவன் வீட்டிற்கு சென்றபோது உட்கார்ந்து, எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. என்னைப் பார்த்ததும், கையிலிருந்ததை மேஜை ட்ராயரில் போட்டுவிட்டு சகஜமாக பேச ஆரம்பித்தான்.

“என்னாடா வெளியே போகலையா இன்னைக்கு?”

“இல்லடா. போரடிச்சது அதான் பேசலாம்னு வந்தேன்.”

”சரி டீ சாப்பிடுறியா நான் கூட இன்னும் சாப்பிடலை. இரு போட்டு எடுத்து வரேன்.” என்று கிச்சனுக்குள் நுழைந்தான்.

“சார் போஸ்ட்”

“இங்க அருண் குமார்னு...”

“இந்த வீடுதான்” லட்டர் அவன் மனைவியிடமிருந்து வந்திருந்தது. லட்டரை மேஜை மேல் வைத்தேன். அப்போது அவன் டிராயரில் எதையோ மறைத்தது நினைவுக்கு வந்தது. பார்க்கலாமா வேண்டாமா? மனப்போராட்டத்திற்கு பிறகு மெதுவாக திறந்தேன். உள்ளே இருந்தவை...........




“டேய் அருண் என்னடா இது? இந்த வீடு நான் மதுரையில் பார்த்திருக்கேன். அந்த மேனேஜர் வீட்டுக்கு எதிர்வீடு இது. இந்த பையன் யாரு? அதை விடு இதென்ன ஜோதி கடத்தல், மகேஷ் வேதனைப்படுதல்னு என்னென்னமோ எழுதியிருக்கு அவளையும் மதுரையில்தான் கண்டுபுடிச்சோம். சொல்லுடா. இது என்ன? இதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

அருண் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேச ஆரம்பித்தான். “ஜெயந்த் என்னை மன்னிச்சிடுறா, நான் உன்கிட்ட சில விஷயங்களை மறைச்சிட்டேன். என் சொந்த ஊர் மதுரைன்னு உனக்கு தெரியும். நாம படிக்கிறப்ப சொல்லியிருக்கேன் ஞாபகம் இருக்கா. ஊர்ல எனக்கு சில நண்பர்கள் இருக்காங்க, அவங்க என்னை குமார்னு கூப்பிடுவாங்கன்னு”

  
“ஜோதி மகேஷ் கிட்ட சண்டை போடுகிட்டு ஷீலாவை பார்க்க போனா, ஆனா அவ மகேஷ் திட்டினதால ஊரை விட்டு போனது கேள்விப்பட்ட ஷீலா என்ன செய்யதுன்னு தெரியாம தற்கொலை செய்ய போனா. யதேட்சையா நான் பார்த்து தடுத்தேன். அவ மகேஷை அந்த நிமிசம் வெறுத்தா. வாழப் பிடிக்கலன்னு சொன்னா. நான் கொஞ்ச நாள் அவரை விட்டு பிரிஞ்சி இருக்கலாமேன்னு சொன்னேன். அவங்க அப்பாவும் இப்ப உயிரோட இல்ல. எங்க போறதுன்னு அவளுக்கு புரியலை. சொந்தக்காரங்க வீடுன்னா மகேஷ் தேடி வந்துருவாரே. நான் திருச்சியில எனக்கு தெரிஞ்ச விடுதியில ஜோதியை தங்க வச்சேன்”

“நான் முரளிகிட்ட இந்த விசயத்தை சொன்னப்ப அவன் வேற மாதிரி யோசிச்சான். இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஜோதி மனசு மாறிட்டா மகேஷும் ஜோதியும் சேர்ந்துடுவாங்க. அதனால ஜோதியை கடத்தி அடைச்சு வைக்கனும்னு நினைச்சான். எனக்கு அதில விருப்பம் இல்ல. ஆனா அவன் கணேஷ் நிலைமையையும் ஃபிரண்ட்ஷிப்பையும் காரணம் காமிச்சு என்னை அமைதியாக்கிட்டான்.”

“அவனே விடுதிக்கு போய் ஷீலா அழைச்சிட்டு வரச்சொன்னதா பொய் சொல்லி எப்படியோ ஜோதியை கடத்திட்டான். அவன் ஊர்ல அவனுக்கு செல்வாக்கு ஜாஸ்தி. ஜோதியை அங்க தந்திரமா கடத்தி வச்சிருந்தான். ஆனா ஒரு தப்பிக்கிற முயற்சியில அடிப்பட்டு ஜோதிக்கு நினைவு போயிருச்சு. முரளி அவன் ஹாஸ்பிடல்லேயே சேர்த்து பார்த்துகிட்டான். அவளை எங்கேயும் போக விடலை. அவளை யாரும் பார்க்கவும் வரலை. இதனால அவ அங்க இருக்கிறது யாருக்குமே தெரியலை. மகேஷ் நாளாக நாளாக ரொம்ப வேதனைப்பட ஆரம்பிச்சார். என்னைக்காவது அவரா தற்கொலை பண்ணி சாவார்னு முரளி காத்திருந்தான். ஆனா அப்பதான் நீ அவளை பார்த்து என்னென்னமோ ஆச்சு........”

“எல்லாம் சரி அருண் நீ சொன்ன கணேஷ்-ஆகாஷ் விசயத்துக்கும் ஜோதி-மகேஷ்க்கும் என்ன சம்பந்தம்?”

“மாலாவோட அண்ணன் வேற யாருமில்ல மகேஷ்தான்.”

”அன்னைக்கு மாலாவோட அண்ணன் திட்டி அவமானப்படுத்தினது தாங்க முடியாம ஆகாஷ் தற்கொலை பண்ணிகிட்டான். அதை கண்ணால கணேஷ் பார்த்தும் அவனால தடுக்க முடியலை. அந்த சம்பவம் அவன் மனநிலையை பாதிச்சிடுச்சு. இது முரளியை ரொம்ப கோவப்படுத்தியது. மாலாவோட அண்ணனை கொலையே பண்ணிடலாம்னு நினைச்சான் நான் தடுத்தேன். மாலாவோ கல்யாணம் பண்ணிகிட்டு நிம்மதியா இருக்கா. மகேஷ் அவர் ஊரை விட்டு கல்யாணம் பண்ணிகிட்டு எந்த ஊருக்கு போனாருன்னே தெரியலை. நான் இங்க குடிவந்தப்பதான் ஜோதி-மகேஷை பார்த்தேன்.”

அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ”அருண் முரளிதான் டாக்டர்னா. அவர் இப்பதானே ஜோதி-மகேஷை தேடி வந்து போனாரு”

“என்னடா சொல்றே, முரளி வந்தானா??”

“ஆமாண்டா ஏன் பதட்டப்படறே?”

“அய்யோ...ஜோதி இங்க வந்ததால என்ன பண்ணுறதுன்னே தெரியாம மறுபடியும் மகேஷை கொலையே பண்ணிடலாம்னு சொல்லிகிட்டு இருந்தான். நான் தடுத்து வச்சேன். அவன் இங்க வந்தானா அப்போ...”



   அந்த மதிய நேரத்தில் அதிக கூட்டமில்லை கோயிலில்.

”என்னங்க ஜெகன் நம்ம கூடத்தானே இருப்பான். எங்கேயும் போகமாட்டான் இல்ல?”

“இல்ல ஜோதி, ஜெகன் நம்ம கூடத்தான் இருப்பான்”

“ஆனா நீ இருக்க மாட்டே...!”

“யார் சார் நீங்க ”

“ஆகாஷ் ஞாபகமிருக்கா?..........” என ஆரம்பித்து முரளி எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

“நான் அப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கலை. ஆனா நீங்க அதுக்காக...”

“இதுக்குமேல உன்னை விடப் போறதில்லை” கத்தி போன்ற ஒரு ஆயுத்ததுடன் மகேஷை நோக்கி பாய்ந்த முரளியை பின்னாலிருந்து யாரோ பிடித்து இழுத்தார்கள்.

”வெங்கடேஷ் நீங்களா?”

“யார் சார் இவன்”

முரளி கோபமாக வெங்கடேஷை உதறித் தள்ள வெங்கடேஷ் ஜோதிமேல் விழுந்தார். ஜோதி தடுமாறி கோவில் சுவற்றில் முட்டிக் கொண்டு மயங்கினாள். முரளி மீண்டும் வேகமாக பாய்ந்தான். நடந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த ஜெகன் பலமாக அழ ஆரம்பித்தான். அவனை தூக்க குறுகே வந்த வெங்கடேஷை முரளியின் கத்தி பதம் பார்த்தது.

அப்போதுதான் நானும் அருணும் அங்கே போய்ச் சேர்ந்தோம். அருண் எப்படியோ முரளியை தடுத்தான். நான் ஜோதியையும் வெங்கடேஷ்-ஜெகனையும் கவனித்தேன்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் தழுதழுத்த குரலோடு பேசினார். “சாரி முரளி. நான் அன்னைக்கு இருந்த மனநிலைமையில் ஒரு மனிதன் தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு பேசியிருக்கக் கூடாது. அந்த குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுதும் இருக்க போகுது. அப்படி பார்த்து கல்யாணம் செஞ்சு வச்ச என் தங்கையும் இப்ப நிம்மதியா வாழலை. நீங்க செஞ்ச எதுவும் எனக்கு பெரிசா படலை. ஏன்னா என்னால இனி நடந்ததை மாற்ற முடியாது. இதுக்கு மேலயும் உங்களுக்கு என் மேல கோபம்னா என்னை கொன்னுடுங்க.”




ஆபிசில் விழா நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாஸ் தீனதயாள் ஒரு புதிய ஃபாக்டரியை திறந்து வைப்பதுடன் தன் மாப்பிள்ளை கார்த்திக்கை ஜேஎம்டியாக அறிவிக்கும் ஃபங்ஷன் அது.

வாழ்க்கை ஒரு சுவாரசியமான நாவல் போன்றது. எப்போது எந்த திருப்பங்கள் வருமென்றே தெரியாது. ஜோதி அந்த சம்பவத்தில் அடிப்பட்டு மீண்டும் நினைவு வந்ததும், அங்கே ஜெகனை பார்க்க அவர்களை பின் தொடர்ந்த வெங்கடேஷ் அவர்களை காப்பாற்றியதும், பின் மனம் மாறி இனி ஜெகன் அவர்களிடமே வளரட்டும், ஆனால் என்றாவது ஆசைப்பட்டு ஒரு வெளியாளாக வந்து பார்க்க அனுமதி கேட்டதும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

முரளி மனம் மாறவில்லை. ஆனால் அவர் இப்போது சாந்தமாகிவிட்டார். அதற்கு கணேஷ் தேறி வருவது கூட காரணமாக இருக்கலாம். அருண் ஜோதியிடம் மன்னிப்பு கேட்ட பின்பும் மனம் கேளாமல் அங்கிருந்து வீட்டை காலி செய்து கொண்டு வேறு பகுதிக்கு சென்று விட்டான். காலம் போடும் கணக்கு என்றைக்கும் புரிவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும் அன்பு அடிப்படையாக இருந்ததை உணர்ந்தேன்.

தூரத்தில் ஸ்வப்னாவும் கோகுலும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். காலம் நினைத்தால் அவர்கள் கூட இணையலாம்....

ஃபோன் ஒலித்தது.

“ஜெயந்த் அம்மா பேசறேண்டா”

“சொல்லும்மா”

“நாங்க உனக்கு பொண்ணு பார்த்திருக்கோம்டா... 

"என்னம்மா சொல்றீங்க... 

  "ஆமா அடுத்த வாரம் புறப்பட்டு வா. நீயும் பார்த்திடலாம். பொண்ணு நமக்கு சொந்தம்தான் பேரு ஜெயஸ்ரீ.”

(முற்றும்)


"ஜோதி" கதையை பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறிய அனைவருக்கும், மேலும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்கள் மற்றும் சில நேரத்தில் சேற்றில் மாட்டிக்கொண்ட குதிரையை போல கதை தத்தளித்த பொது எனக்கு உதவி செய்து பல ஆலோசனைகள் தந்த அன்பு நண்பர் எஸ்.கே அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஜோதி - XII



  கதையின் முந்தைய பாகங்கள்.. 




"நான் அவளை ஏமாத்திட்டேன்..அவ என்னால எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்கா. அவ சாகறப் போறப்ப கூட அவ கூட என்னால இருக்க முடியலையே....” கண்கலங்கினார் வெங்கடேஷ்.

அவரும் ஷீலாவோட காதல் வீட்டுக்கு தெரிஞ்சதும் வீட்டை விட்டுப் போய் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனா அவங்க வாழ்க்கை வறுமையிலதான் இருந்துருக்கு. வெங்கடேஷ் தன் ஃபிரண்ட் சொன்ன திருடுற ஐடியாவுக்கு ஒத்துக்கிட்டு அது ஷீலாவோட கைது வரைக்கும் போயிருக்கு. ஷீலாவை கைது பண்ண உடனே வெங்கடேஷ் போலீஸ்ல சரண்டாகிட்டார். ஆனா ஷீலா வெங்கடேஷ் மேல கோபம் வெறுப்பு எல்லாம் அதிகமாகி அதுக்கப்புறம் ஒருதடவை கூட ஜெயில்ல பார்க்கலையாம். சாகறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் சாகப்போறதையும் குழந்தை நல்ல இடத்தில் இருப்பதாகவும் அதை என்னைக்கும் தேட வேண்டாம்னு எழுதியிருக்கா. வெங்கடேஷ் அப்ப ரீலீஸ் ஆகப்போறது கூட அவளுக்கு தெரியலை. அவர் எப்படியோ ஆஸ்பத்திரி அங்க இங்கன்னு விசாரிச்சு இங்க வந்துட்டார்.

“எல்லாத்தையும் இழந்துட்டு தனியாள இருக்கிற நான் என் குழந்தை என் கூட இருக்கணும் நினைக்கறதுல என்ன தப்பு சார்?”

அவர் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் ஜோதியின் நிலையை கூறி கொஞ்ச நாட்களுக்கு ஜெகன் அவளிடம் இருக்க எப்படியோ நானும் மகேஷும் அனுமதி வாங்கினோம். அவர் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றார்.

       ரிஜிஸ்டர் ஆபிஸில் நடந்தது   1/2       
       

கார்த்திக்-அபிநயா இருவரும் ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டர்கள். சாட்சிக்காக, அபிநயா சார்பாக அவள் தோழி கவிதாவும், அருணும் கையெழுத்திட்டனர். கார்த்திக் சார்பாக நானும் அவன் நண்பன் ஒருவரும் கையெழுத்திட்டோம். மாலையும் கழுத்துமாக சந்தோசத்துடன் வெளியே வந்தபோது, ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து இறங்கினார்கள். என் பாஸ் தீனதயாளும், கோகுலும். கார்த்திக்-அபிநயாவை கோபத்துடன் பார்த்து விட்டு வேகமாக என்னிடம் வந்து என்னை அறைந்தார்.


”என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாருடா”


“இல்ல, சார் அவங்க உயிருக்குயிரா...”


அவர் கண்டபடி பேசி திட்ட ஆரம்பித்தார்.
       



ஜோதியை இங்குள்ள மருத்துவர்களிடம் காண்பித்தபோது ஏதோ தலையில் அடிப்பட்டு நினைவு மறந்து போயுள்ளதாகவும். அது விரைவில் குணமாகிவிடும் என்றனர். எனக்கு கல்லூரி காலங்கள் நினைவுக்கு வந்தது. அவளுடன் பழகிய கல்லூரி நண்பர்களை பார்த்தால் நினைவுக்கு வருமா? என் யோசனையை மகேஷிடம் கூறிய போது....

“உங்களையே அவளுக்கு ஞாபகம் இல்ல. மற்றவங்களை நினைவுக்கு வருமா என்ன?”

“என்ன சொல்றீங்க?”

அவர் மவுனமாக உள்ளே சென்று ஒரு டைரியை எடுத்து வந்து என்னிடம் தந்தார்.

அது ஜோதியின் டைரி. அவர் பார்க்கச் சொன்ன பக்கத்தில் நான் அவளிடம் காதலைச் சொன்னதை எழுதியிருந்தாள் அடுத்தப் பக்கத்தில்....



”ஜோதி காணாம போனப்ப ஏதாவது விவரம் கிடைக்குமான்னு தேடுனப்ப கிடைச்ச டைரி இது. வேற வழியில்லாம படிச்சப்ப உங்க மேல இருந்த ஈர்ப்பு தெரிஞ்சது. ஆனா அதை அவளே நிராகரிச்சதானல எனக்கு அந்த விசயம் பெரிசா படலை. உங்களையே அவளுக்கு நினைவில் இல்லை. மே பி அதுக்கு பல வருடங்கள் சந்திக்காதது கூட காரணமா இருக்கலாம். ஆனா ஈர்ப்பு இருந்த உங்களையே அவளுக்கு நினைவில்லையே மற்றவங்களை எப்படி? ”

ஜோதிக்கு என்னைப் போல் முழுமையான காதல் இருந்திருக்கவில்லை என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் காத்திருந்த காதல் பொய்த்துப் போனதை விட இது மிகவும் வேதனையாகவே இருந்தது. கலங்கிய கண்களை மகேஷுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு பேசினேன்.

”எனக்கும் கூட அது ஈர்ப்புதான் போல சார்... எனக்கும் சில வருடங்களில் எல்லாம் மறந்து விட்டது. இங்கே யதேட்சையாய் கேள்விப்பட்டுதான் எல்லாம் விசாரித்தேன். சரி விடுங்க. அதான் டாக்டர் மீண்டும் ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டால் உடனே சரியாகிடும். இல்லன்னாலும் படிப்படியா சரியாயிடும் சொன்னார்ல பார்ப்போம்.”

கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

       ரிஜிஸ்டர் ஆபிஸில் நடந்தது   1/2       
       

”சார். ஒரு நிமிஷம். உங்க பொண்ணு விருப்பப்பட்டாங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க. நான் ஜஸ்ட் ஹெல்ப் பண்ணேன். அவ்வளவுதான். இவங்க உங்களை மீறி கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அது உங்களுக்கு புடிக்காததுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா எல்லாத்தும் அடிப்படையானது அன்பு.... உங்களுக்கு அவங்கமேல இருக்கிற அன்பு அதுதானே சார்? அந்த அன்பு உங்க பொண்ணுக்கு இருக்குல்ல. இப்ப கல்யாணம் பண்ணிகிட்டதால இரண்டு அன்பும் போயிடுமா சார்?. அந்த அன்புக்கு முன்னாடி நீங்க சொல்ற காரணங்கள் ரொம்ப பெரிசா என்ன?”


“இவங்க செஞ்ச காதலும் ஒரு வித அன்பு தானே. அது தப்பில்லையே. நான் இவங்களுக்கு செஞ்ச ஹெல்ப்புக்காக உங்களுக்கு என் மேல கோபம் வரலாம். அதுக்காக நீங்க என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா இவங்க இப்ப உங்க சொந்தங்கள் சார். இவங்க மேல அன்பு காமிங்க. இவங்களை வெறுத்துடாதீங்க”


அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கார்த்திக்- அபிநயா இருவரையும் பார்த்து “காரில் ஏறுங்க” என்றார்.
       




நீண்ட நாட்களுக்கு பிறகு மனசு லேசாக இருந்தது. ஸ்வப்னா இப்போ அவங்க அப்பா கூட ரொம்ப அன்பாயிட்டா. கார்த்திக்-அபிநயாவை எங்க பாஸ் ஏத்துகிட்டு இரண்டு வீட்லயும் பேசி க்ராண்டா ரிஷப்சனும் செஞ்சிட்டாரு. குறிப்பா என்னை வேலையை விட்டு தூக்கலை! ஜோதிக்கும் கொஞ்சம் கொஞ்சம் நினைவு வந்துருக்கு. மகேஷ் கூட நல்லா சகஜமாயிட்டா. ஜெகனும் ஜோதியை அம்மா மாதிரி நினைக்க ஆரம்பிச்சிட்டான். என்னிடம் கூட  ஜோதி நல்லா ஃப்ரெண்ட்லியா பழகுறா.

அன்று ஞாயிற்றுக்கிழமை. லேட்டாக எழுந்திருக்கும் எனக்கு அன்று கொஞ்சம் சீக்கிரம் விழிச்சிட்டேன். வெளியே வந்தப்ப, ஜோதி, மகேஷ், ஜெகன் மூவரும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தனர். ஏதோ திருவெற்றியூர் கோயிலுக்கு செல்வதாக சொன்னார்கள்.  நான் என் வேலைகளையெல்லாம் பார்த்துட்டு குளிச்சிட்டு வந்தபோது, யாரோ கதவை தட்டினார்கள். திறந்த போது ஒருவர் நின்று கொண்டிருந்தார். அட, இவர் ஜோதியை கண்டுபிடித்த ஆஸ்பிட்டலின் சீஃப் டாக்டர் அல்லவா? இங்கே எங்கே?

“டாக்டர் நீங்க எங்க இங்க?”

“நீங்க இங்கதான் இருக்கீங்களா? இல்ல ஜோதியையும், அவங்க ஹஸ்பண்டையும் பார்க்க வந்தேன். மேலே இல்லை. அதான் விசாரிக்கலாம்னு. அவங்க எங்கே?”

“அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க. திருவெற்றியூர் அம்மன் கோயில்.”

“அப்படியா சரி நான் அவங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன். வந்தா சொல்லிடுங்க”

“சரிங்க.”

அவர் கிளம்பிய போது நினைவுக்கு வந்தது. இவர் பெயர் கூட இதுவரை கேட்கவில்லை.

“நான் ஆஸ்பிட்டல்ல கூட கவனிக்கலை. டாக்டர்  உங்க பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா? ”

“என் பேர் முரளி


அடுத்த பாகத்தில் முடியும்...