கதையின் முந்தைய பாகங்கள்..
குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்! ஜோதி இங்கே ஆறு மாதம் முன் வந்திருக்கிறாள். பிறகு எங்கேயோ போயிருக்கிறாள். அவளை இங்கே அழைத்து வந்தது யார்? கூட்டிச் சென்றது யார்? எதுவும் தெரியவில்லை. மகேஷுக்கு ஃபோன் செய்து தகவல்களை சொன்னேன். அவர் ஆச்சரியமானார். உடனே வருவதாக சொன்னார்.
அந்த மணியிடம் கோகுல் சொன்ன ஸ்பீடு ரமேஷ் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டு கோகுலை பார்க்கச் சென்றேன். அந்த ரமேஷ் இரண்டு வீடுகளுக்கு வழக்கமாகச் செல்வாராம். கடந்த சில நாட்களாகவே அவரை சரியாக பார்ப்பதில்லை என அவர் கூறியிருந்தார். அதை கோகுலிடம் சொன்னேன். அவன் உடனே ஒரு முகவரிக்கு அவனும் இன்னொன்றிற்கு என்னையும் போகச் சொன்னான். எனக்கு போக பிடிக்கவில்லை. இருந்தும் அவனின் கட்டாயத்தால் வேறு வழியின்றி கிளம்பினேன்.
-------------------------------------------------------
ஃபிளாஷ்பேக் - 3 | ||||
---|---|---|---|---|
“மாலா இதான் ஒரே வழி வேற வழியே இல்ல.” “ஆனா ஆகாஷ் பயமா இருக்கு” “பயந்தா நீ சிங்கப்பூர்ல இருக்கிற உன் அத்தைப்பையனை கட்டிகிட்டு அங்கேயே செட்டிலாக வேண்டியதுதான்.” “அப்படி சொல்லாத ஆகாஷ். உன் கூட ஓடி வரதில கவலையில்ல. என் அண்ணனை நினைச்சாதான் பயமா இருக்கு.” “பயந்த வேலைக்காவாது. நாளைக்கு நைட் நான் உங்க ஊர் கோயில்ல காத்திருப்பேன். நீ வந்துரு நாம அங்கிருந்து எங்க ஊர்க்கு போயிடலாம். அங்க கல்யாணம் பண்ணிட்டு என் அண்ணன்கிட்ட போவோம். என் அண்ணன் என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். அவர் நம்மளை பார்த்துப்பார்.” |
-------------------------------------------------------
ஏதேதோ சம்பவங்களும் செய்திகளும் என் வாழ்வில் சில நாட்களாக நடப்பதை உணர்ந்தேன். குழப்பமும் அதிர்ச்சியும் ஆச்சரியங்களும்தான் மிஞ்சியிருக்கிறது. முடிவு என்ன காலம்தான் சொல்ல வேண்டும்.
அந்த ரமேஷின் ஒரு முகவரி நோக்கிச் சென்றேன். அந்த வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் யாருமில்லை. சென்றுவிடலாமென கிளம்பியபோது ஏதோ வீட்டுக்குள்ளே சத்தம் கேட்டது போல் இருந்தது. சந்தேகத்துடன் அந்த வீட்டை சுற்றி வந்த போது மூடியிருந்த ஒரு ஜன்னல் வழியே லேசாக குரல் கேட்டது.
“அபி நாம இங்க வந்தும் நம்மாளால கல்யாணம் பண்ணிக்க முடியல பார்த்தியா எவ்வளவு பிரச்சினை. உன் அப்பா நமக்கு நிச்சயம் தொல்லை கொடுப்பார்னு சொன்னேன்ல....நாம பிரிஞ்சிடுவோமோன்னு பயமா இருக்கு அபி”
“இதப்பாரு நீ இல்லாம என்னால இருக்க முடியாது கார்த்தி”
“என்னாலயும்தான். உன் பேரை என் நெஞ்சில பச்சை குத்தி வச்சது சும்மா இல்ல அபி. அது என்னோட அன்பின் வெளிப்பாடு. நீ இல்லாத வாழ்க்கையில நானும் இருக்க மாட்டேன் அபி”
”உன் மாமா நம்மளைதான் மறுபடியும் சென்னைக்கே அனுப்பி வைக்கிறன்னுட்டார். இப்ப நம்மளை அங்க தேட மாட்டங்கன்னு சொன்னார். என்ன பண்ணுறது?”
“மாமா ஹெல்ப் பண்ணுவார்னு நினைச்சேன் அபி. அவர் இவ்வளவு கோழையா இருப்பார்னு நினைக்கலை. நாம சென்னைக்கே போயிடுவோம். எப்படியாவது நாம அங்கே போய் கல்யாணம் பண்ணிப்போம்”
அவர்கள் பேசுவதை கேட்டு அமைதியாக நின்றேன். அவர்கள் உண்மையான அன்பால் எனக்கு அவர்களை பிரிக்க தோன்றவில்லை. என் காதல் தோல்வி கூட அதற்கு காரணமாக இருக்கலாம். சரி கோகுலை திசை திருப்பி விட்டு விடலாம். இவர்கள் சென்னை சென்று எப்படியாவது வாழட்டும். நான் பிறகு மாட்டினால் பார்த்துக் கொள்ளலாம்.
”கோகுல் இங்க அவங்க இல்ல விசாரிச்சதில அவங்க மாமா கோயம்புத்தூர் போறதா பேசிக்கிட்டதா தெரிஞ்சது” போனில் பொய்யாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.
லாட்ஜுக்கு செல்லும் வழியில் நேற்று ஷீலாவை பார்த்த ஞாபகம் வந்தது. நேற்று கிளம்பும்போது அவளிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை. ஹாஸ்பிடல் அருகில் இருந்ததால் அங்கே போனேன். சொப்னாவின் அப்பா டிஸ்சார்ஜ் ஆயிருந்தது தெரிந்து. ஷீலா இருந்தா வார்டுக்குச் சென்றேன். அங்கே அவள் இல்லை. ஒரு நர்சிடம் விசாரித்தேன்.
“சிஸ்டர், இங்க ஷீலான்னு ஒருத்தங்க இருந்தாங்களே, அவங்க எங்க?”
“அவங்களா அவங்களை வேற வார்டுக்கு மாத்திட்டாங்க. ரொம்ப சீரியஸா இருக்காங்க”
“சீரியசா, என்னாச்சு சிஸ்டர்?”
“உங்களுக்கு தெரியாதா? அவங்களுக்கு கேன்சர். இப்ப அவங்க கடைசி நாட்கள்ல இருக்காங்க. நேற்று சாயங்காலம் ரொம்ப சீரியசாயிட்டாங்க. எந்நேரமும் உயிர் பிரியலாம்.”
------------------------------------------------
ஃபிளாஷ்பேக் - 4 | ||||
---|---|---|---|---|
”அண்ணா ஆகாஷை விட்ருங்க. அவர் பாவம்” மாலாவுக்கு பளாரென அறை விழுந்தது. ஆகாஷ் மாலாவின் அண்ணனிடம் பயங்கரமாக அடிவாங்கிக் கொண்டிருந்தான். “போதும்பா அவனை விடு செத்துரப் போறான்.” “இவனுக்கு என்ன தைரியமிருந்தா. என் தங்கச்சியை இழுத்துட்டு போகப்பார்ப்பான். இவனுக்கு யாருமில்லையாம் அண்ணன் மட்டும்தானாம். ஆனா இவளை நல்லா வச்சு காப்பாத்துவானாம்! சொல்றானே. அநாதைப்பைய! சோத்துக்கு பிச்சை எடுக்கிற நாய்க்கு காதல் கேட்குதா....பரதேசி நீயெல்லாம் காதலிக்க நினைச்சதுக்கு நாண்டுகிட்டு சாவனுமிடா............................................” இன்னும் என்னென்னவோ பேசினான். மாலாவின் அண்ணன் பேசி தகாத வார்த்தைகளை கொடுமையான பேச்சையும் கேட்க கேட்க ஆகாஷுக்கு அங்கேயே செத்துவிடலாம் போல இருந்தது. |
------------------------------------------------
ஷீலாவுக்கு கேன்சர் என்பதே அதிர்ச்சி. அவள் சாகப்போகிறாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவளை பார்க்க போனபோது நேற்று இருந்தது போலவே இல்லை. பெட்டில் ஆக்ஸிஜன் மாஸ்க்கோடு இருந்தாள்.
“அவங்க தான் இறந்தவுடனே குழந்தையை ஒரு நல்ல ஆர்ப்பனேஜ்ல ஒப்படைக்கணும்னு ஆசைப்படுறாங்க. அதை தான் நேற்றுகூட என்கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க”
அந்த நர்ஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் குழந்தை இன்னும் விவரம் தெரியாத வயதில் இருக்கிறான். அவள் கணவன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஷீலாவின் தோற்றம் அவள் கணவன் இறந்திருக்கவில்லை என்றே சொன்னது. மனதில் நிறைய கேள்விகளுடன் ஷீலாவை நோக்கிச் சென்றேன்.
என்னைப் பார்த்தவுடன் அவள் கண்கள் விரிந்தன. பின் நான் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை கஷ்டப்பட்டு எடுத்துவிட்டு மிகவும் மூச்சு வாங்க பேசினாள்.
“வா ஜெயந்த். ஊருக்கு போகலையா”
“ஷீலா ஏன் நேற்று என்கிட்ட சொல்லல? என்னாச்சு எப்படி?” என்னால் பேசமுடியவில்லை.
“ஏதேதோ நடந்துடுச்சு என் வாழ்க்கையில. அதுல இந்த கேன்சரும் ஒன்னு. நான் சாக பயப்படல. ஆனா எனக்கப்புறம் என் குழந்தை என்ன ஆவானுதான் கவலைப்படறேன்” அவள் கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.
“ஜெயந்த் ஒரு உதவி செய்வியா”
”சொல்லு ஷீலா என்னவா இருந்தாலும் செய்யறேன்”
“என் குழந்தையை ஒரு நல்ல அநாதை இல்லத்தில சேர்த்துடேன். உன்னை நம்புறேன் ப்ளீன் இந்த ஹெல்ப் பண்ணுவியா?”
“கண்டிப்பா பண்ணுவேன் ஷீலா. ஆனா உனக்கு ஒன்னும் ஆவாது கவலைப்படாதே.”
அவள் சிரித்தாள். அவள் முடிவு அவளுக்கு தெரிந்திருந்தது.. பேசிக்கொண்டிருந்த அவளுக்கு திடீரென மூச்சிரைப்பு அதிகமாகியது. உடனே டாக்டர்களை அழைத்தேன்.
அவள் மகன் ஜெகனை ஒரு நர்ஸிடம் இருந்தான். அம்மாவிடம் செல்ல வேண்டுமென அழுது கொண்டிருந்தான். ஷீலா என்னிடம் பெரிய பொறுப்பை தந்திருக்கிறாள். ஆனால் அவள் கணவன் என்ன ஆனான்? அவள் ஏன் இப்படி தனியாய் இருக்கிறாள்? அவள் ஏன் ஜெயிலுக்கு போனாள்? ஜோதியிடம் பிரிவதற்கு முன் ஏதோ நடந்திருக்கிறது அதையும் என்னிடம் நேற்று மறைத்தாள்.
பல கேள்விகள் என் முன் இருந்தது. குழப்பமாக நின்றிருந்தேன். என் எந்த கேள்விகளுக்கும் விடை சொல்லாமல் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு ஷீலா இறந்து போனாள்.
தொடரும்...
207 comments:
«Oldest ‹Older 201 – 207 of 207 Newer› Newest»205 ஓகே வரேன்.....
நல்லா கதை சொல்லுறீங்க. கமென்ட் பகுதியிலேயே சாட் பண்ணுவீங்களோ.
ஐயோ இந்த ஜோதி என்ன கொல்லுறாலே
நல்லா சுவாரசியமா செல்லுது.
உயிரோட்டமா போயிட்டு இருக்கு
ஷீலா மேட்டர் ரொம்ப பரிதாபப்பட வைக்குது :(
வருகை தந்த அனைவருக்கும் மற்றும் தங்கள் கருத்துக்களை கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்..
Post a Comment